IST (GMT+5.5)

இந்த வார தியானம்Sharon Rose Ministries

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


இது என்ன வார்த்தையோ!


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப்போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். (லூக்கா 4:36)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, பூமியிலே நம்மைப் போல ஒரு மனிதனாய் வாழ்ந்த நாட்களில், அவர் மக்களுக்கு செய்த எண்ணற்ற அற்புத, அதிசயங்களில் ஒரு அற்புதத்தை கண்ணாரக் கண்ட மக்கள் ஆச்சரியப்பட்டு சொன்ன சாட்சியே பரிசுத்த வேதத்தில் காணப்படும் மேற்கண்ட வசனம். அந்த அற்புதம், அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனிதனை விடுதலை செய்யும்படியாக, ஆண்டவர் இயேசு அந்த பிசாசுக்கு கட்டளையிட உடனே அது அவனை விட்டு நீங்கிப் போனது.

அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது. (லூக்கா 4:35)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவ்வளவு வல்லமை உண்டு. பரிசுத்த வேதத்தில் அவருடையை வார்த்தையின் வல்லமையை மற்றுமொரு அற்புதத்தின் வழியாக நாம் காணலாம். அது, ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் சீடர்களுடனே கடலில் ஒரு படகில் பயணம் செய்து கொண்டிருந்த போது கடலில் பலத்த சுழற்காற்று உண்டாகி படகு நிரம்பத்தக்கதாக அலைகள் அதின் மேல் மோதி அடித்தது. பயந்து போன அவருடைய சீடர்கள் ஆண்டவரிடத்தில் வேண்டிக்கொள்ள, அப்பொழுது:

அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று. (மாற்கு 4:39)

பரிசுத்த வேதத்தில் வேறொரு சூழ்நிலையில் நடந்த அற்புதம்: அரச படைப்பிரிவில் நூறு வீரர்களுக்கு அதிபதியான ஒரு படைத்தலைவன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை, அவருடைய வார்த்தையின் வல்லமையை, அதிகாரத்தை மிகவும் விசுவாசிக்கிற ஒரு மனிதன். அவன் வீட்டு வேலைக்காரன் திமிர்வாதத்தினால் மிகவும் கொடிய வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒருவரே தன் வேலைக்காரனை குணமாக்க முடியும் என்று முழு மனதோடு விசுவாசித்து ஆண்டவரிடத்திற்கு தன் சிநேகிதரை அனுப்பி, இப்படியாக சொன்னான்:

நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். (மத்தேயு 8:8)

அப்பொழுது இயேசு அவர்களுடனே கூடப்போனார். வீட்டுக்குச் சமீபமானபோது, நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரிடத்தில் போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க் கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள். (லூக்கா 7:6,7,10)

இவற்றைப் போல, பரிசுத்த வேதத்தில் இன்னும் பல அற்புத அதிசயங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் என்றும் மாறாத வார்த்தையின் வல்லமையை, அதிகாரத்தை, மகிமையை நமக்கு வெளிப்படுத்துகிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக்கு மட்டும் ஏன் இத்தனை வல்லமை, மகிமை, அதிகாரம்?

ஏனென்றால் அவரே தேவனுடைய வார்த்தை, அவரே ஜீவ வார்த்தை. பரிசுத்த வேதம் இப்படி விளக்குகிறது:

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. (யோவான் 1:1,14)

ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். (1 யோவான் 1:1)

அவருடைய வார்த்தை எப்படிப்பட்டது? பரிசுத்த வேதத்திலிருந்து சில வசனங்கள்:

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. (எபிரெயர் 4:12)

வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. (மத்தேயு 24:35)

அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். (ஏசாயா 55:11)

எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: ... (லூக்கா 4:22)

....நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. (யோவான் 6:63)

நமக்கு ஏன் அவருடைய வார்த்தை வேண்டும்?

அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். (மத்தேயு 4:4)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email