IST (GMT+5.5)

இந்த வார தியானம்Sharon Rose Ministries

(Meditation for the Week)

செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


இருதய கடினம்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று. (மாற்கு 3:5)

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் அவர் விசனப்பட்டு, "கோபமடைந்த" ஒரே நிகழ்ச்சியையே பரிசுத்த வேதத்தின் மேற்கண்ட வசனம் நமக்கு விளக்குகிறது.

ஆண்டவருடைய இந்த விசனத்திற்கும் கோபத்திற்கும் காரணம் என்ன? அது மனிதர்களுக்குள் அவர் கண்ட அவர்களுடைய இருதய கடினமே.

இஸ்ரவேல் மக்கள், குறிப்பாக வேதபாரகர்கள் (Scribes), பரிசேயர்கள் (Pharisees), பிரதான ஆசாரியர் (Chief Priest) மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் என இவர்கள் எப்பொழுதும் ஆண்டவர் இயேசு செய்த  ஒவ்வொரு காரியத்தையும், அற்புதத்தையும், நன்மையானவைகளையும் அவருடைய வார்த்தையும் கவனித்து குற்றம் கண்டுபிடிப்பதிலேயே மிக கவனமாக இருந்தது மட்டுமல்ல அவரை கொலை செய்யவும் ஏற்ற நேரத்தை தேடிக் கொண்டிருந்த போது, ஒரு ஓய்வு நாளில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு மனிதனுக்கு செய்த நன்மையை, அவனுக்கு அருளிச் செய்த அற்புத சுகத்தை குறை சொல்லி அதையும் குற்றமாக்க முயற்சி செய்வதை இந்த பரிசுத்த வேத பகுதி நமக்கு விளக்குகிறது.

அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்று சொல்லி; அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக் காப்பதோ அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். (மாற்கு 3:2-4)

இஸ்ரவேல் மக்கள் குறிப்பாக வேதபாரகர்கள், பரிசேயர்கள், பிரதான ஆசாரியர்கள் என  இவர்கள் தேவனுடைய தாசனாகிய மோசேயின் மூலமாக தேவனாகிய கர்த்தர் தாமே எழுதிக்கொடுத்த கற்பனைகளையும், கட்டளைகளையும், பிரமாணங்களையும், நியாயங்களையும் வெறும் சடங்காக, சம்பிரதாயமாக, பாரம்பரியமாக கடைப்பிடித்து வந்து, ஆனால் இவைகளின் நோக்கத்தையும், மெய்யான அர்த்தத்தையும் அறிந்து கொள்ளாமல் அதை எழுதிக் கொடுத்த தேவனாகிய கர்த்தர் தாமே இயேசு கிறிஸ்துவாக அவர்கள் நடுவில் இருந்தும் அவரையும் அறிந்து கொள்ளாமல் போனார்கள்.  

அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது. மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே. அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம். (2 கொரிந்தியர் 3:14-16)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, அவருடைய நற்செய்தியாகிய சுவிசேஷத்தை கண்டும், கேட்டும் ஏற்க மறுத்து, விசுவாசிக்க மறுத்து சத்தியமாகிய இயேசு கிறிஸ்துவை நிராகரிக்கும் போது ஆவிக்குரிய குருட்டுத்தன்மை உண்டாகிறது. (Rejecting the Truth will lead to Spiritual Blindness). இதுவே இருதய கடினமாக மாறுகிறது. பரிசுத்த வேதம் இதை இப்படி விளக்குகிறது:

... அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். (மத்தேயு 13:14)

...காணும்படிக்கு அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படிக்கு அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேளாமற்போகிறார்கள்; ... (எசேக்கியல் 12:2)

ஒருவேளை இப்படிப்பட்ட இருதய கடினம் நமக்கு இருந்தால் அதில் இருந்து விடுபட்டு கர்த்தரை அறிந்து கொள்ள ஒரே வழி கர்த்தாராகிய இயேசுவினிடத்தில் மனந்திரும்புதலே ஆகும்.

அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம். (2 கொரிந்தியர் 3:16)

கர்த்தாராகிய இயேசுவினிடத்தில் மனந்திரும்பி, அவரையே தன் சொந்த இரட்சகராக, கர்த்தராக, ஒரே தெய்வமாக ஏற்றுக் கொள்ளும் போது முக்காடாகிய அந்த இருதய கடினம், அறியாமை, ஆவிக்குரிய குருட்டுத்தன்மை நம்மை விட்டு நீங்கும். அப்போது, நமக்காக இந்த மண்ணுலகம் வந்து நம் பாவ, சாப, நோய்களை சிலுவையில் சுமந்து, இறந்து மூன்றாம் நாள் உயிரோடெழுந்த நம் இரட்சகர், மீட்பர் தேவாதி தேவனுடைய ஒரே பேரான சொந்த குமாரன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை கண்டு கொள்ள, அறிந்து கொள்ள, அவரால் இரட்சிக்கப்பட்டு மீட்கப்பட முடியும். அப்போது அதிசீக்கிரமாய் அவர் மீண்டும் இரண்டாம் முறை இந்த உலகத்திற்கு வரும்போது அவரோடு மோட்சம் சென்று என்றென்றும் அவரோடு வாழ முடியும். ஏனெனில் அதற்கு

(ஆண்டவர் இயேசு கிறிஸ்து) நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; ... (யோவான் 14:6) என்கிறார்.


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email