- Category: Messages - 2022
- Hits: 3985
எந்த ஜனத்திலாயினும்…
(புத்தாண்டு தேவ செய்தி - 2022)
ஜனவரி 2022 (New year Message - January 2022)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற உலக ரட்சகராம் இயேசுகிறிஸ்துவைக் கொண்டு சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறின பிதாவாகிய தேவனுக்கு சகல மகிமையும் செலுத்தி இனிய புத்தாண்டு 2022 அன்பின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். |
(அப்போஸ்தலர் 10:34-35) அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.
தேவ கிருபையினால் இந்த புத்தாண்டு பரிசுத்த வேத தியானமாக மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தை நாம் சற்றே தியானித்து சத்தியத்தை அறிந்து கொள்வோம். அது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாக நமக்கு உதவி செய்யும். பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வாராக. ஆமென்.
தாம் படைத்த மனிதர்களிடத்தில் எந்த பாரபட்சமும் இல்லாத நம் தேவனாகிய கர்த்தர், தம் ஈடு இணையில்லாத அன்பினால் அனைவரையும் நேசிக்கும் கர்த்தர், எந்த ஜனத்திலும் தமக்கு யார் உகந்தவர்கள் (who is accepted with him) என்பதையே மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின் மூலம் நமக்கு விளக்கி சொல்கிறார். அதாவது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களாக இருந்தாலும், அவரை அறிந்து கொள்ளும்படி உண்மையான வாஞ்சையோடு தேடுகிற, அவருக்கு பயந்து தெய்வ பயத்தோடு வாழ விரும்புகிற, யாருக்கும் தீங்கு செய்யாமல் தன்னால் ஆன மட்டும் மற்றவர்களுக்கு நன்மை செய்து வாழுகிற ஒவ்வொருவரும் தேவனுக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு உகந்தவர்கள் என்பதை நாம் அறிந்து கொள்வோம். ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.
மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எதிர்பார்க்கிற இரண்டு காரியங்களை குறித்து முதலாவது நாம் அறிந்து கொண்டு, அதன் பிறகு அவருக்கு உகந்தவர்கள் என்ற நிலையிலிருந்து இன்னும் மேலான உறவின் நிலையாகிய தேவனுடைய பிள்ளைகளாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிந்து கொள்வோம்.
1] தேவனுக்கு பயந்திருந்து:
அடிப்படையில் தீமையை வெறுத்து அதை விட்டு விலகுவதே கர்த்தருக்கு பயப்படும் பயம் என்று பரிசுத்த வேதம் நமக்கு போதிக்கிறது. மட்டுமல்லாமல், இது தேவ கட்டளையுமாகும். எனவே இதைக் குறித்து கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்களின் உதவியோடு சற்றே அறிந்து கொள்வோம்.
(நீதிமொழிகள் 8:13) தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; ...
(நீதிமொழிகள் 3:7) ... கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.
(நீதிமொழிகள் 14:2) நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான்.
(நீதிமொழிகள் 16:6) கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
(சங்கீதம் 34:9) கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.
(சங்கீதம் 19:9) கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; ...
(நீதிமொழிகள் 28:14) எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.
எல்லாத் தீமைகளையும் தொடர்ந்து செய்து கொண்டே, நான் கர்த்தருக்கு பயப்படுபவன் என்று சொல்லிக்கொள்வது என்பது பரிசுத்த வேதம் போதிக்கும் உபதேசம் அல்ல, மாறாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் மனுஷனின் சொந்த போதனை.
(ஏசாயா 29:13) இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.
கர்த்தருக்கு பயந்து நடப்பதின் மேன்மைகள்:
(நீதிமொழிகள் 1:7) கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
(நீதிமொழிகள் 10:27) கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.
(நீதிமொழிகள் 14:26) கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
(நீதிமொழிகள் 14:27) கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
(நீதிமொழிகள் 15:33) கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
(நீதிமொழிகள் 19:23) கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.
(நீதிமொழிகள் 22:4) தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.
2] நீதியை செய்வது:
நம்முடைய பிரதானமான நீதியின் கிரியை, கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனத்தின்படி நம்முடைய விசுவாசம்.
(ரோமர் 4:5) ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்பட்ட தேவ நீதியை விசுவாசித்து கிருபையினால் நாம் நீதிமான்களாக்கப்படுவது ஒருபுறம் (ரோமர் 1:17, 3:22, 3:24). பரிசுத்த வேத கட்டளைகளை, நியாயங்களை கைக்கொண்டு நற்கிரியைகளை செய்து நீதியாய் நடப்பது அல்லது நீதியை செய்வது என்பது மற்றொருபுறம். சுருக்கமாக சொல்வதானால், நாம் நீதிமான்களாக்கப்படுதல் ஒருபுறம், நாம் நீதியை நடப்பிப்பது மற்றொரு புறம்.
எனவே, தேவ நீதியை விசுவாசிப்பதினால் - அதாவது கிறிஸ்து இயேசுவை விசுவாசிப்பதினால் கிருபையைக் கொண்டு நாம் தேவனால் நீதிமான்களாக்கப்படுகிறோம். அதன் பிறகு பரிசுத்த வேத கட்டளைகளை கைக்கொண்டு நீதியை நடப்பிக்கிறோம். இந்த இரண்டையும் நாம் செய்ய வேண்டியது மிக அவசியம். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போல, பரிசுத்த வேதம் போதிக்கும் நீதியின் இரண்டு பக்கங்கள் இவை.
கிறிஸ்து இயேசு சிலுவையில் உலக மனிதர்கள் யாவருக்காகவும் செய்து முடித்த எல்லாவற்றையும் எனக்காக அவர் செய்து முடித்தார் என விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அது நீதியாகவே எண்ணப்படும் என்று பரிசுத்த வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது.
(ரோமர் 4:3) வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.
(ரோமர் 4:5) ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
(ரோமர் 4:23) அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காக மாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
நாம் நீதியை, நீதியின் கிரியைகளை செய்வதை குறித்து இன்னும் சற்று அறிந்து கொள்வோம். நீதி என்பது தேவனாகிய கர்த்தர் அருளிய பரிசுத்த வேதத்தில் அவர் நமக்கு போதித்து சொல்லியிருக்கிறவைகளை, அதாவது அவருடைய கட்டளைகள் (statutes), அவருடைய கற்பனைகள் (commandments), அவருடைய நியாயங்கள் (judgements), அவருடைய சாட்சிகள் (testimonies) அடங்கிய அவருடைய பரிசுத்த வேதத்தை கைக்கொண்டு நற்கிரியைகளை செய்வதும், நிறைவேற்றுவதுமே ஆகும். எளிமையாக சொல்வதானால், பரிசுத்த வேதம் மற்றும் பரிசுத்த ஆவியானவருக்கு முன்பாக நீங்கள் நின்று உங்களை சோதித்து பார்க்கும் போது உங்களை குற்றவாளியாக்காத செயல்களை செய்வது என்பதே நீதியை நடப்பிப்பது அல்லது நீதியை செய்வது ஆகும்.
(சங்கீதம் 19:9) ... கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.
(சங்கீதம் 119:138) நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.
(சங்கீதம் 23:3) அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
(1 யோவான் 2:29) அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.
(1 யோவான் 3:7) பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.
(1 யோவான் 3:10) இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.
(சங்கீதம் 106:3) நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச்செய்கிறவர்களும் பாக்கியவான்கள்.
(லூக்கா 1:6) அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
(எசேக்கியல் 18:5-9) என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
நீதியான கிரியைகளுக்கு ஓரிரு உதாரணங்களையும் பரிசுத்த வேதத்திலிருந்து காண்போம்.
(சங்கீதம் 112:9) வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
(சங்கீதம் 82:3-4) ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
(மத்தேயு 3:14-15) யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.
(1 பேதுரு 3:14) நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; ...
(யாக்கோபு 3:18) நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.
இப்படி தேவனுக்கு உகந்தவர்களாக வாழும் நிலையிலிருந்து இன்னும் மேலான நிலையில் தேவனோடு உறவாடுகிற அவருடைய பிள்ளைகளாக, தேவனுடைய பிள்ளைகளாக வேண்டும் என்பதே நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இதய விருப்பம், தேவ சித்தம்.
கர்த்தர் நமக்கு போதித்திருக்கிறபடி தேவனுடைய பிள்ளைகளாக நாம் செய்ய வேண்டியவைகள்:
3] இரட்சிப்பின் அனுபவம்
பழைய பாவ வாழ்க்கைக்கு மனம் வருந்தி, மனந்திருந்தி, பிதாவாகிய தேவனுடைய ஒரே பேரான, சொந்த குமாரன், நேச குமாரன் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முழு மனதோடு விசுவாசித்து, நம் ஆவி, ஆன்மா மற்றும் உடல் என நம்மை முற்றிலும் அவர் கரங்களில் ஒப்புக்கொடுத்து, இந்த வினாடி வரை நாம் செய்த சகல பாவங்களும் நமக்கு மன்னிக்கப்பட பாவ மன்னிப்பை அவரிடத்தில் வேண்டி, அவர் இரத்தத்தினால் நாம் முற்றிலும் சுத்திகரிக்கப்பட வேண்டிக்கொண்டு அவரை நம் இருதயத்தில் நம் சொந்த இரட்சகராக, மீட்பராக, நம் ஒரே மெய் தெய்வமாக ஏற்றுக்கொள்கிற இரட்சிப்பின் அனுபவம். இதை தேவனிடத்தில் வாஞ்சித்து கேட்போம்.
(அப்போஸ்தலர் 10:43) அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.
(அப்போஸ்தலர் 4:12) அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
(யோவான் 1:12) அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
4] கிறிஸ்துவின் சபையில் சேர்க்கப்படுதல்
கிறிஸ்துவின் சரீரமாகிய அவருடைய சபையில் ஐக்கியம் கொள்வது.
(மத்தேயு 16:18)...இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
(அப்போஸ்தலர் 2:41,42) அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். (42) அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
(எபிரெயர் 10:25) சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
5] ஞானஸ்நானம்
தேவனைப்பற்றும் நல் மனசாட்சியின் உடன்படிக்கையாகிய ஞானஸ்நானம் பெறுவது.
(1 பேதுரு 3:21) அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;
(ரோமர் 6:4,5) மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். (5) ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
(கலாத்தியர் 3:27) ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
6] இயேசு கிறிஸ்துவின் திருவிருந்து
நமக்காக பிட்கப்படுகிற, மெய்யான போஜனமாகிய இயேசு கிறிஸ்துவின் சரீரம், நமக்காக சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய, மெய்யான பானமாகிய அவருடைய இரத்தம் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நினைவுகூர்ந்து அவருடைய பந்தியில் பங்கு பெறுதல்.
(மத்தேயு 26:26-28) அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். (27) பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; (28) இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
(லூக்கா 22:19,20) பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். (20) போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.
7] பரிசுத்தஆவியானவர்
கர்த்தரே ஆவியானவராய் நமக்குள் வந்து என்றும் நம்மோடு வாசம் பண்ணுகிற மெய்யான நிலையாகிய பரிசுத்த ஆவியானவரை நமக்குள் பெற்றுக் கொள்ளுதல்.
(2 கொரிந்தியர் 3:17) கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
(யோவான் 14:26) என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
தேவனுடைய பிள்ளைகள் என்கிற தேவனோடு இருக்கும் இந்த உறவு இந்த உலக வாழ்வோடு மட்டும் முடிந்து போகிற ஒன்றல்ல. இது இந்த உலக வாழ்க்கைக்கு பிறகும் என்றும் நிலைத்து நிற்கும் ஒரு உன்னதமான, ஈடு இணையில்லாத தேவன் நமக்கு அருளும் பாக்கியம். அவர் இருக்கும் பரலோகத்தில் நம்மை கொண்டு சேர்க்கும் தேவனுடைய ஈவு.
(யோவான் 1:12) அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
(1 யோவான் 3:1) நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
(எபேசியர் 2:4-8) தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, (5) அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். (6) கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, (7) கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.(8) கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
இரட்சிப்பின் அதிபதி நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக.
தேவனுக்கே சகல துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக. ஆமென்.
தேவ நீதியை குறித்து விரிவாக இங்கே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.