- Category: Messages - 2022
- Hits: 13656
சிலுவை மரணமும் முதல் உயிர்த்தெழுதலும்…
(உயிர்தெழுதல் நாள் தேவ செய்தி)
ஏப்ரல் 2022 (New year Message - April 2022)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே கொண்டாடுவோம்! |
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும், அவருடைய உயிர்த்தெழுதலையும் பரிசுத்த வேதத்தின் மூலமாக நாம் தியானித்துக் கொண்டிருக்கிற இந்த நாட்களில் இன்னுமொரு பரிசுத்த வேத சத்தியத்தை நாம் இந்த தேவசெய்தியின் வழியாக அறிந்து கொள்ள இருக்கிறோம். சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துகிற சத்திய ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக, ஆமென்.
முதலாவதாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் நம்மை எப்படி சுத்திகரிக்கிறது என்றும், இரண்டாவதாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய உயிர்த்தெழுதலினால் நம்மை எப்படி உயிர்த்தெழச் செய்கிறார் என்றும், மூன்றாவதாக நம்முடைய உயிர்த்தெழுதலை குறித்த நம்முடைய நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்றும், பரிசுத்த வேத வசனங்களின் உதவியோடு சற்று தியானித்து அறிந்து கொள்வோம்.
பரிசுத்த வேதத்தில் நாம் அறிந்திருக்கிறபடி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் (1 யோவான் 1:7), பரிசுத்த ஆவியானவர் (2 தெசலோனிக்கேயர் 2:13,1 கொரிந்தியர் 6:11), கர்த்தருடைய பரிசுத்த அக்கினி (ஏசாயா 6:6-7) மற்றும் அவருடைய உபதேசமாகிய பரிசுத்த வேத வசனங்கள் (யோவான் 17:17) ஆகியவற்றின் மூலமாக நம்முடைய சகல பாவங்கள், அக்கிரமங்கள், மீறுதல்கள் யாவும் நீக்கி நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். ஒரு ஆச்சரியமான வேத சத்தியமாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணமும் நம்மை சுத்திகரிக்கிறது என்பதையும், இதற்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மைத் தாமே சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார் என்பதையும் இன்று நாம் அறிந்து கொள்ளப் போகிறோம்.
(தீத்து 2:14) அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின்படி, நம்மை சுத்திகரிப்பதற்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையிலே தம்மைத் தாமே நமக்காக ஒப்புக்கொடுத்தார். அவருடைய சிலுவை மரணத்தின் வழியாக நாம் எப்படி சுத்திகரிக்கப்படுகிறோம்?
1) கிறிஸ்து இயேசுவின் சிலுவை மரணமும் நம்முடைய சுத்திகரிப்பும்:
நம்மை சுத்திகரிப்பதற்கு முன்பாக நம்முடைய சகல அக்கிரமங்களிலிருந்தும் நம்மை மீட்டுக் கொள்ளுகிறார். மீட்பு (Redeem) என்கிற இந்த வார்த்தையின் அர்த்தம் நமக்காக அவர் ஒரு விலைக்கிரயத்தை கொடுத்து நம்மை மீட்டுக் கொள்கிறார். அந்த விலைக்கிரயம் அவருடைய இரத்தமே. பரிசுத்த இயேசுகிறிஸ்துவினுடைய பாவமில்லாத இரத்தமே. இப்படி அவர் நம்மை மீட்டுக் கொண்ட பின்பு, முதலாவது நம்மை அவருக்கு சொந்தமான ஜனங்களாக இருக்கும்படி சுத்திகரிக்கிறார். இரண்டாவதாக நற்கிரியைகளை செய்ய நாம் பக்தி வைராக்கியம் உள்ளவர்களாக இருக்கும்படி நம்மை சுத்திகரிக்கிறார். அவருடைய சுத்திகரிப்பிற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதை சற்று விளக்கமாக காண்போம்.
அப்படியானால், தமக்குரிய சொந்த ஜனங்களை குறித்து தேவனாகிய கர்த்தர் பரிசுத்த வேதத்தில் என்ன சொல்லியிருக்கிறார்? தம்முடைய சொந்த ஜனங்களிடத்தில் அவர் என்ன எதிர்பார்க்கிறார்? கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் நமக்கு அதை விளக்கிச் சொல்கிறது:
(யாத்திராகமம் 19:5) இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
(உபாகமம் 7:6) நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்.
(உபாகமம் 14:2) நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.
(உபாகமம் 26:18-19) கர்த்தரும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும், (19) நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் ....
(ஏசாயா 43:21) இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.
தேவனாகிய கர்த்தருடைய பரிசுத்த வேதத்தின்படி நடந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு பரிசுத்தமும், நீதியும் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்வதே அவருடைய சொந்த ஜனங்களாக நம்முடைய தலையாய கடமை. இந்தக் கடமையை அனுதினமும் நிறைவேற்றி நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இருதயத்தை மகிழ்விப்போம். அவருக்குரிய சொந்த ஜனங்களாய் மகிழ்வோம்.
(பிரசங்கி 12:13) காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
(உபாகமம் 10:12-13) இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து, (13) நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
அடுத்ததாக, தேவனுக்கேற்ற பக்தி வைராக்கியத்தோடு நீதியாகிய, கனிகளாகிய நற்கிரியைகளை செய்வதைப்பற்றி சற்று தியானிப்போம்.
(எபேசியர் 2:10) ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
(மத்தேயு 5:16) இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
(1 பேதுரு 2:12) புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
(ரோமர் 2:7) சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.
(பிலிப்பியர் 1:5,6) உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, (6) நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
(2 தெசலோனிக்கேயர் 2:17) உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.
(கொலோசெயர் 1:10) சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்...
(தீத்து 3:8) இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.
2) கிறிஸ்து இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலினால் நம்மையும் உயிர்த்தெழச் செய்கிறார், இரட்சிக்கிறார்:
மரித்தோர் உயிர்த்தெழுதலில் முதற்பலனான கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாம் உயிர்த்தெழுந்து உலக மக்கள் அனைவருக்கும் தம்முடைய ஒளியை வெளிப்படுத்துகிறார் என்று பரிசுத்த வேதம் நமக்கு போதிக்கிறது:
(அப்போஸ்தலர் 26:23) ... மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுய ஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும்...
மட்டுமல்ல, பரிசுத்த வேதம் சொல்கிறது:
(யோவான் 1:4) அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனுக்குலம் முழுவதற்கும் வெளிப்படுத்திய அவருடைய ஒளி என்பது உண்மையில் அவருடைய ஜீவன். அது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஜீவன். அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாய் இருக்கிறது. எனவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்:
(யோவான் 11:25) இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
மட்டுமல்ல, நம்முடைய இரட்சிப்பின் பாதையில் நாம் நிறைவேற்ற வேண்டிய நீதியாகிய ஞானஸ்நானத்தின் மூலம் அவருடைய சிலுவை மரணத்தின் சாயலிலும், உயிர்த்தெழுதலின் சாயலிலும் நாம் இணைக்கப்பட்டிருக்கிறோம். இதை நமக்கு விளக்கிச் சொல்லும் பரிசுத்த வேத வசனங்களில் சிலவற்றை கீழே காண்போம்:
(1 பேதுரு 3:21) அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;
(ரோமர் 6:4,5) மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். (5) ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
(கொலோசெயர் 2:12) ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.
3. நம்முடைய உயிர்த்தெழுதலை குறித்து நமக்கு இருக்க வேண்டிய நோக்கம், வாஞ்சை என்ன? வேண்டுதல் என்ன?
ஒவ்வொரு நாளும் கடந்து செல்ல செல்ல, நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மேகங்கள் மேல் வருகிற அவருடைய ரகசிய வருகையை நாம் நெருங்கிக் கொண்டே இருக்கிறோம். ஒருவேளை, மரணம் முந்திக் கொண்டாலும் அல்லது கர்த்தருடைய ரகசிய வருகையை எதிர்கொள்வதாக இருந்தாலும், அதுவரை நம் வாழ்வின் ஒரே நோக்கமும் வாஞ்சையும் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு எடுத்துக்கொள்ளப்பட்டு அவருடைய ராஜ்யம், அதாவது பரலோக ராஜ்யம் சென்று சேர்வது மட்டுமே. இதற்கு ஆயத்தமாவதே இனி நமக்கு மீதமுள்ள வாழ்நாளெல்லாம் நம் ஒரே நோக்கம்.
(1 தெசலோனிக்கேயர் 4:15-17) கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. (16) ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். (17) பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் அவரோடு நாம் எடுத்துக் கொள்ளப்படுகிற பாக்கியத்தின் பலனை தேவனாகிய கர்த்தர் பரிசுத்த வேதத்தில் நமக்கு அதை முன்னறிவித்து உறுதிப்படுத்தி இருக்கிறார். கீழ்க்கண்ட பரிசுத்த வேதவசனங்கள் அதை நமக்கு விளக்குகிறது:
(வெளிப்படுத்தின விசேஷம் 20:4-6) அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். (5) மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். (6) முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
(1 கொரிந்தியர் 15:23) அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் நமக்காக பாடுபட்டு, நாம் அவரை விரும்பத்தக்க ரூபமும் அவருக்கு இல்லாமல் போகும் அளவுக்கு நமக்காக அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு தம்முடைய ஜீவனையும் சிலுவையில் நமக்காக தந்த அவருடைய அன்பை, பிதாவாகிய தேவன் தம்முடைய ஒரேபேரான சொந்த குமாரன் என்றும் பாராமல் நமக்காக சிலுவையில் இயேசுவை கிறிஸ்துவை ஒப்புக்கொடுத்த அன்பை நினைத்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு அவரில் அன்பு கூர்ந்து, ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய இரகசிய வருகைக்கு ஆயத்தமாவோம்.
(வெளிப்படுத்தின விசேஷம் 22:11) ...நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
அப்பொழுது நாம் நம்பிக்கையோடு, விசுவாசத்தோடு அறிக்கை செய்யலாம்:
(ரோமர் 8:35-39) உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், (36) கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? (37) இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. (38) மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், (39) உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
நம் இரட்சிப்பின் அதிபதி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக.
நம்முடைய தேற்றரவாளன் பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி செலுத்தி நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் பிதாவாகிய தேவரீர் ஒருவருக்கே சகல துதி, கனம், மகிமை யாவும் செலுத்துகிறேன், ஆமென்.
தேவ நீதியை குறித்து விரிவாக இங்கே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.