- Category: Messages - 2021
- Hits: 6184
அழியாத அன்புடனே
தேவ செய்தி - ஜூன் 2021 ( God's Message - Jun 2021)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
(எபேசியர் 6:24) நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.
அழியாத அன்பு - இந்த தேவ அன்பைக் குறித்து பரிசுத்த வேதத்தில் தேவன் நமக்கு தெளிவாக விளக்கி சொல்லியிருக்கிறார். அதாவது அன்பு எப்படி உண்டாகிறது, அதன் மூலம் யார், அது எப்படி நமக்கு வெளிப்படுத்தப்பட்டு நமக்குள் அருளப்படுகிறது என்பதையெல்லாம் கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்களின் உதவியோடு நாம் அறிந்து கொள்வோம். பரிசுத்த ஆவியானவரே நமக்கு உதவி செய்வாராக. ஆமென்.
(1 யோவான் 4:7-9) பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
(1 யோவான் 4:10) நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.
(ரோமர் 5:5) மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
(1 கொரிந்தியர் 13:13) இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.
இப்படிப்பட்ட அழியாத தேவ அன்பினால் நாம் நிறைந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்புகூரும் போது (1 யோவான் 5:3) நமக்கு கிருபை உண்டாகிறது. நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவும் தம்முடைய ஈவின் அளவின்படியே நமக்கு கிருபையை அளிக்கிறார். அவருடைய பரிபூரணத்தினால் நாம் கிருபையின் மேல் கிருபை பெறுகிறோம். அந்த கிருபை நாம் தேவனை ஸ்தோத்தரிப்பதினாலே மேலும் பெருகுகிறது.
(2 கொரிந்தியர் 4:15) தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு, இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாயிருக்கிறது.
(எபேசியர் 4:7) கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.
(யோவான் 1:16) அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
மேற்கண்ட யாவையும் சுருக்கமாக சொல்வதானால், தேவ அன்பினால் நாம் நிறைந்து கர்த்தருடைய கட்டளைகளை கைக்கொண்டு அவரில் அன்புகூரும்போது (1 யோவான் 5:3) நமக்கு கிருபை உண்டாகிறது. இப்படிப்பட்ட ஈடு இணையில்லாத தேவ கிருபையை கொண்டு நாம் செய்ய வேண்டிய மிக பிரதானமான, முக்கியமான ஒரு காரியத்தைக் குறித்து பரிசுத்த வேதம் நமக்கு போதித்து விளக்குகிறது. அது, தேவனுக்கு பிரியமாக, பயத்தோடும், பக்தியோடும் தேவனை ஆராதிப்பதே ஆகும்.
(எபிரெயர் 12:28) ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
அசைவில்லாத தேவ ராஜ்யமாம் நித்திய ராஜ்யத்தை, பரலோக வாழ்வை பெற்றுக்கொள்ளும்படிக்கு, நாம் தேவ பயத்தோடும், பக்தியோடும், பரிசுத்தத்தோடும் வாழ்ந்து, கர்த்தருடைய பரிசுத்த வேத கட்டளைகளின் படி நடந்து, தேவனுக்கு பிரியமாய் ஆராதனை செய்ய நமக்கு தேவனுடைய ஈடு இணையில்லாத பேருதவியான கிருபையை பற்றிகொள்வோம். தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் (எபிரெயர் 4:16). தம் புத்திர சுவிகாரத்தின் ஆவியை நமக்கு தந்தருளின தேவாதி தேவனை அப்பா பிதாவே (ரோமர் 8:15, கலாத்தியர் 4:6) என்று நம் கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவர் முன்னிலையில் அழைத்து (கொலோசெயர் 3:17) தேவனை பணிந்து, குனிந்து முழங்காற்படியிட்டு தொழுது கொள்வோம் (சங்கீதம் 95:6). நம்மை தம்முடைய பிள்ளைகள் என அழைத்து (1 யோவான் 3:1) நம்மை அளவின்றி நேசித்து அவர் அருளுகிற நம்முடைய இரட்சிப்புக்காக, ஆத்தும மீட்புக்காக அவருக்கு நன்றி செலுத்தி மகிமைப்படுத்துவோம். அவருடைய நாமத்தையே உயர்த்துவோம் (சங்கீதம் 148:13).
(1 யோவான் 3:1) நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
(யோவான் 1:12) அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
தேவனாகிய கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.
(ரோமர் 10:10) நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
மீண்டும் எழும்பி இருக்கும் இந்த கொள்ளை நோயிலிருந்து தேவன் நம்மைக் காத்துகொள்ளும்படி நாம் கர்த்தரிடத்தில் (சங்கீதம் 91:3) வேண்டிக்கொண்டு நம்முடைய விசுவாசத்தை அறிக்கை செய்வோம்.
அனுதின விசுவாச அறிக்கை: தேவன் தம்முடைய கிருபையினாலே இந்த ஆண்டு முழுவதும் என்னை காத்து இரட்சிப்பார் என்று முழு மனதோடு விசுவாசிக்கிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் நான் பிழைத்திருந்து நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளும்படி பிதாவாகிய தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே நான் இரட்சிக்கப்படுவேன்.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்.