- Category: Messages - 2021
- Hits: 4481
2021 - புத்தாண்டு தேவ செய்தி
ஜனவரி 2021 (New year Message - January 2021)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
தேவனாகிய கர்த்தரை நன்றியோடு துதித்து, நம் இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட தேவ கிருபையினால் விசுவாசத்தோடு இந்த புதிய ஆண்டை ஆரம்பிப்போம். தேவாதி தேவனுடைய ஈவாகிய நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் சர்வ வல்லமையுள்ள நாமத்தில் அன்பின் புத்தாண்டு நல் வாழ்த்துகள்! |
போராட்டம் நிறைந்த, கடினமான கடந்த வருடத்தின் நாட்கள் முழுவதும் நம்மை தம் கண்மணி போல் காத்து நடத்தி இந்த 2021 -ம் ஆண்டை காண கிருபை செய்த தேவாதி தேவனுக்கு, நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக கோடான கோடி நன்றிகளை, துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். இந்த புதிய வருடம் முழுவதும் நம்மை வழி நடத்தி, சுமந்து, காத்து, நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்தும் அவருடைய ஜீவ வார்த்தையை, பரிசுத்த வேத வசனத்தை இந்த புதிய ஆண்டை ஆரம்பிக்கும் நாம் சற்றே தியானிக்கப் போகிறோம். அந்த பரிசுத்த வேத வசனம்:
(எபேசியர் 2:8) கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
பரிசுத்த பிதாவாகிய தேவன் உலக மக்கள் யாவரையும் நேசிக்கும் தம் இணையில்லா அன்பை தம் குமாரன் இயேசு கிறிஸ்துவை உலகத்திற்கு அனுப்பி வெளிப்படுத்தினார், மனிதரில் அன்பு கூர்ந்தார். எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மனிதருக்கு அவர் அளித்த மாபெரும் அன்பின் ஈவு, வெகுமதி ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அப்படியே, கிறிஸ்து இயேசுவின் மூலமாக கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு நாம் இரட்சிக்கப்படுதலும் தேவனுடைய ஈவு என்றே மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் நமக்கு போதிக்கிறது. இதில் இரட்சிப்பு என்பது பிரதானமாக நம் ஆத்துமா மீட்கப்படுவதை, ஆத்தும இரட்சிப்பை குறித்தாலும், இரட்சிப்பு என்ற வார்த்தை பொதுவாக காப்பாற்றப்படுவது (to be saved) என்பதை குறிக்கிறது. அப்படியானால் நாம் எந்த விதத்தில் அல்லது என்ன ஆபத்திலிருந்து எப்படி காப்பாற்றப்பட போகிறோம்? அதையே இந்த தேவ செய்தியின் மேற்கண்ட ஆதார வசனத்தின் மூலமாக தியானித்து அறிந்து கொள்ளப் போகிறோம். பரிசுத்த ஆவியானவர் தாமே நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக. ஆமென்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கும் நாம் வாழும் இந்த நாட்களை கொடிய காலங்கள் என்றும், தம் வருகைக்கு அடையாளங்கள் என்றும், மட்டுமல்ல வேதனைகளுக்கு ஆரம்பம் என்றும் என்று பரிசுத்த வேதத்தில் ஆண்டவர் உரைக்கிறார். கீழ்காணும் பரிசுத்த வேத வசனங்கள் அதை நமக்கு விளக்குகின்றன:
(2 தீமோத்தேயு 3:1-5) மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.
(மத்தேயு 24:3) பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.... (மத்தேயு 24:3-8), (மாற்கு 13:8)
மேற்கண்ட பரிசுத்த வேத பகுதிகள் உறுதிப்படுத்துவது என்னவென்றால் இனி வரும் நாட்களும், காலங்களும் உலகில் மனிதன் வாழ மிகவும் சவாலானவைகள். சுகமான, வசதியான வழக்கமான நாட்களாக, காலங்களாக அவை இனி இருப்பதில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை நெருங்க நெருங்க, அதோடு தொடர்புடைய பரிசுத்த வேதம் முன்னறிவித்த காரியங்களும், சம்பவங்களும் உலகில் நடந்தே தீரும், நிறைவேறியே தீரும். அவை உலகம் முழுவதிலும் நடந்தேற வேண்டியவைகள். ஏதோ ஒரு இடத்தில் மட்டுமோ, ஊரில் மட்டுமோ, நாட்டில் மட்டுமோ அல்ல, உலகம் முழுவதிலும் நடந்தேறும். பூமி அதிர்ச்சிகள், எதிர்பாராத பெரு மழை வெள்ளங்கள், கணிக்க முடியாத அபாயகரமான தட்பவெப்ப நிலை மாற்றங்கள், இதுவரை அனுபவித்திராத அறிந்திராத சுற்றுச் சூழல் மாறுபாடுகள், இப்பொழுது நம் கண் காண்கின்றதை போன்ற கொள்ளை நோய்கள், அறிவியல் அபாயங்கள், நாடுகளின் அரசியலால் உண்டாகும் பிரச்சனைகள், போர் என இவை யாவும் நம் கண் காண நடந்தேறும்.
இந்த சூழ்நிலையில் நம்பிக்கையோடு, பாதுகாப்போடு, கர்த்தருக்கு ஏற்றபடி ஒவ்வொரு நாளையும் கடந்து செல்வது எப்படி? இந்த தேவ செய்தியின் ஆதார வசனமே (எபேசியர் 2:8) அதற்கு வழி. அதாவது தேவ கிருபை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பற்றிப் பிடித்துக் கொள்ளும் நம் விசுவாசம் - இவற்றின் மூலமாக நம் கர்த்தர் தாமே நம் கரம் பிடித்துக் கொள்வார். அவரே நம்மை காப்பாற்றி, பாதுகாத்து வழிநடத்தி இந்த புதிய வருடத்தை ஜெயமாக முடிக்க கிருபை செய்வார். இது தேவாதி தேவன் நமக்கு அருளும் ஈவு.
(எரேமியா 1:19) ...உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
தேவ கிருபை:
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மூலமாக பிதாவாகிய தேவன் நமக்கு அருளுவதே தேவ கிருபை. கிருபை என்பது இரக்கத்தை பெற தகுதியில்லாதவர்க்கு தேவன் அளிக்கும் இரக்கமே கிருபை (unmerited favour). கீழ்காணும் பரிசுத்த வேத வசனங்களின் மூலமாக நாம் தேவ கிருபையைக் குறித்து இன்னும் அறிந்து கொள்ளலாம்.
(யோவான் 1:16) அவருடைய (இயேசு கிறிஸ்து) பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
(யோவான் 1:17) ... கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
(எபேசியர் 4:7) கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.
(புலம்பல் 3:22-23) நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.அவைகள் காலைதோறும் புதியவைகள்;
(2 தீமோத்தேயு 1:9) அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.
(ரோமர் 5:16) மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.
(ரோமர் 5:21) ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.
(1 கொரிந்தியர் 15:10) ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; ...
(2 கொரிந்தியர் 1:2) நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
(2 கொரிந்தியர் 9:8) மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
(2 கொரிந்தியர் 4:15) தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு, இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாயிருக்கிறது.
(எபேசியர் 3:7) தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன்.
(யாக்கோபு 4:6) அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ... தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.
விசுவாசம்:
இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள நம் விசுவாசத்தை குறித்தும், அதை நாம் நமக்குள் பெற்றுக் கொண்டு அதில் பலப்படுவதைக் குறித்தும் பரிசுத்த வேத வசனங்களின் மூலமாக அறிந்து கொள்வோம். விசுவாசம் பரிசுத்த ஆவியானவர் மூலமாக ஒரு வரமாக, ஆவியின் கனியாக, அபிஷேகமாக நமக்கு அருளப்படுகிறது. மட்டுமல்ல பரிசுத்த வேதமாகிய தேவனுடைய வார்தையிலிருந்தே விசுவாசம் நமக்குள் கிரியை செய்ய ஆரம்பிக்கிறது. தொடர்ந்து பரிசுத்த வேதத்தை வாசிக்கும் போதும், தியானிக்கும் போதும் அந்த விசுவாசம் நமக்குள் பெருகுகிறது, நம்மை விசுவாசத்தில் பெலப்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே நம் விசுவாத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாக இருக்கிறார்.
(எபிரெயர் 11:1) விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.
(1 யோவான் 5:4) தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
(1 யோவான் 5:5) இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
(எபிரெயர் 12:1) ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
நம்முடைய விசுவாசம் தேவனாகிய கர்த்தராலே நம்முடைய நீதியாகவும் எண்ணப்படுகிறது.
(ரோமர் 4:5) ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொண்டு, துணிகரமாக எந்த பாவத்தையும் செய்து கொண்டே கிருபையை நம்பி பரலோகம் சென்று சேர்ந்து விடலாம் என நாம் எண்ணினால், அது பரிசுத்த வேத சத்தியத்திற்கு விரோதமான பிசாசின் வஞ்சகம். எனவே வஞ்சிக்கப்படாதிருப்போம். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாதிருப்போம். பரிசுத்த தேவன் ஒருபோதும் வேதத்தில் அப்படி போதிக்கவில்லை. நாம் பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்பது தேவ கட்டளை.
(லேவியராகமம் 19:2) ...உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.
(1 யோவான் 1:7-10) அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.(8) நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.(9) நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (10) நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
(நீதிமொழிகள் 28:13) தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
(யூதா 1:4) ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.
நாம் இரட்சிக்கப்படவும், பரிசுத்த வேதத்தின்படி கர்த்தருடைய வழிகளில் நடக்கவும், பரிசுத்தமாய் இருக்கவும், அவருக்கு பிரியமாய் இந்த உலகில் வாழவும் - இதில் நமக்கு வரும் போராட்டங்களையும், சோதனைகளையும், தோல்விகளையும் ஜெயித்து, முடிவில் பரலோகம் சென்று சேரவுமே நமக்கு தேவனாகிய கர்த்தர் ஈடு இணையில்லா இந்த கிருபையை கிறிஸ்து இயேசுவின் மூலமாக தந்திருக்கிறார். எனவே இந்த தேவ கிருபையினால், கிறிஸ்து இயேசுவை விசுவாசத்தினால் பற்றிக் கொண்டு ஒவ்வொரு நாளும் நடப்போம்.
(சங்கீதம் 39:7) இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை.
அப்பொழுது கர்த்தர் தாமே இந்த உலக வாழ்விலும் நம்மை காத்து இரட்சிப்பார். முடிவில் அவருடைய இரகசிய வருகையில் நம்மை எடுத்துக் கொண்டு பரலோகம் கொண்டு சேர்த்து சரீர மீட்பு, ஆத்தும இரட்சிப்பு, பூரண இரட்சிப்பாகிய நித்திய ஜீவனையும் நமக்கு அருளிச் செய்வார். என்றென்றும் அவரோடு நம்மை வைத்துக் கொள்வார்.
(1 பேதுரு 1:8-9) அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து,(9) உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்.
(1 பேதுரு 1:13) ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.
(1 பேதுரு 5:10) கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;
தேவனாகிய கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.
(ரோமர் 10:10) நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
அனுதின விசுவாச அறிக்கை: தேவன் தம்முடைய கிருபையினாலே இந்த ஆண்டு முழுவதும் என்னை காத்து இரட்சிப்பார் என்று முழு மனதோடு விசுவாசிக்கிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் நான் பிழைத்திருந்து நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளும்படி பிதாவாகிய தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே நான் இரட்சிக்கப்படுவேன்.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்.