- Category: Messages - 2019
- Hits: 3637
தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்
தேவ செய்தி - அக்டோபர் 2019 (Message - October 2019)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
(மத்தேயு 24:24) ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
(மாற்கு 13:22) ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
மேற்கண்ட பரிசுத்த வேத வசனங்ககளை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே உரைத்த பொழுது, அதில் தம் மக்களைக் குறித்து "கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கதக்கதாக" என்று சொல்லியிருக்கிறார்.
உலகத்தில் அந்திக் கிறிஸ்துவின் வருகைக்கு முன்பதாகவே அவன் ஆவி பூமியில் கிரியை செய்து கொண்டு இருப்பதால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி அநேகரை, கர்த்தருடைய பிள்ளைகளை, அதிலும் முக்கியமாக தெரிந்துகொள்ளப்பட்டவர்களை அற்புத, அடையாளங்களை செய்து வஞ்சிப்பார்கள் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை எச்சரிக்கை செய்வதிலிருந்து, மற்றவர்களை எளிதாக அவர்கள் வஞ்சித்து விடுவார்கள் என்பதையும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களை அவ்வளவு எளிதாக வஞ்சிக்க முடியாது என்பதையும் ஆனால் அவர்களையும் வஞ்சிக்க கூடுமானவரை முயற்சி செய்வார்கள் என்பதையும் நம்மால் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது.
அப்படியானால், இந்த தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் யார்? ஏன் இவர்களை வஞ்சிக்க கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் பெருமுயற்சி செய்கிறார்கள் என்பதை சற்றே தியானிப்போம்.
(மத்தேயு 22:14) அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார் (இயேசு கிறிஸ்து).
அதாவது ஆத்தும மீட்புக்கு, இரட்சிப்புக்கு அழைக்கப்படுகிறவர்கள் அநேகர் என்றாலும் தெரிந்து கொள்ளப்படுகிறவர்கள் சிலராகவே இருக்கிறார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து, அவர் அளிக்கும் இரட்சிப்பு, நித்தியஜீவன், அவருடைய இரண்டாம் வருகை, அவருடைய ராஜ்யம் அல்லது பூமியில் அவருடைய அரசு அமைவது என அவருடைய சுவிசேஷம், நற்செய்தி எல்லோருக்கும் அறிவிக்கப்படுகிறது. அநேகர் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த ரட்சகராக, கர்த்தராக ஏற்றுக் கொண்டு தேவனுடைய பிள்ளைகளாகிறார்கள்.
இந்நிலையில், சிலர் இன்னும் சில விஷேசித்த, சிறப்பான காரியங்களை, குணாதிசயங்களை கொண்டவர்களாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கென்று உண்மையும் உத்தமமுமாக வாழும் போது அவர்களை பரிசுத்த வேதம் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்று அழைக்கிறது. அதை நாம் பரிசுத்த வேதத்தில் காண்போம்:
(1 தெசலோனிக்கேயர் 1:2-3) தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து, நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து,
தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்குறிய அந்த சிறப்பான குணாதிசயங்கள், காரியங்கள்:
1) விசுவாசத்தின் கிரியை (Works of faith)
2) அன்பின் பிரயாசம் (Labour of love)
3) கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள அவர்கள் நம்பிக்கையின் பொறுமை (Patience of hope in our Lord Jesus Christ)
இப்படிப்பட்ட சிறப்பான குணாதிசயங்கள், காரியங்கள் கொண்ட தெரிந்து கொள்ளப்பட்டவர்களையே வஞ்சிக்க கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் முயற்சி செய்வார்கள். அதற்கு நாம் நம்மை விலக்கி காத்துக்கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது நாம் அறிந்து கொள்ள முடியும். இந்த மூன்று காரியங்களை குறித்து நாம் சுருக்கமாக காண்போம்.
முதலாவதாக, விசுவாச கிரியைகளைக் குறித்து பரிசுத்த வேதம் போதிக்கும்போது, "கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது" என்று போதிக்கிறது. மேலும், விசுவாச கிரியை எவ்வளவு முக்கியம் என்பதை கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்களின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.
(யாக்கோபு 2:14) என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
(யாக்கோபு 2:17) அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.
(யாக்கோபு 2:20) வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?
(யாக்கோபு 2:26) அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.
பரிசுத்த வேதத்தில் நம் விசுவாச தகப்பனும், முற்பிதாக்களும் தேவனாகிய கர்த்தர் மேல், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள தங்கள் விசுவாசத்தை கிரியைகளினால் எப்படி காண்பித்தார்கள், எப்படி கர்த்தருக்கு கீழ்படிந்தார்கள், தங்கள் விசுவாசத்தினால் எவ்வளவாய் தேவனுக்கு பிரியமாய் இருந்தார்கள், எப்படி உலகத்தை, சாத்தானை ஜெயங்கொண்டார்கள், எப்படி தேவனால் வாக்குப்பண்ணப்பட்டவைகளை தூரத்திலே கண்டார்கள், சுதந்தரித்துக் கொண்டார்கள் என்பதையெல்லாம் எபிரெயர் 11 ம் அதிகாரம் முழுவதிலும் நாம் காணலாம்.
இரண்டாவதாக, பிரதிபலன் எதையும் பாராமல், எதிர்பார்க்காமல் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக, அவருடைய நாமத்திற்காக நாம் செய்யும் காரியங்களை, பெருமுயற்சிகளை பரிசுத்த வேதம் அன்பின் பிரயாசம் என்று போதிக்கிறது. ஆங்கில வேத வார்த்தையில் Labour of love என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் ஒரு தாய் தனக்கென எந்த சுயநல எதிர்பார்ப்பும் இல்லாமல், தியாகத்தோடு எல்லா வலி வேதனைகளையும் பொறுத்துக்கொண்டு குழந்தையை சுகமாய் பெற்றேடுப்பதிலேயே கவனமாய் இருப்பது போல ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக, அவருடைய நாமத்திற்காக, அவருடைய சுவிசேஷத்திற்காக அவருடைய ராஜ்யத்திற்காக பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் தியாகத்தோடு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது கொண்ட அளவற்ற அன்போடு, எதிரான சகல காரியங்களையும் சகித்து பொறுமையோடு செய்யும் சகல காரியங்களே, பெருமுயற்சிகளே அன்பின் பிரயாசமாகும். இதை விளக்கும் பரிசுத்த வேத வசனங்களில் சிலவற்றை கீழே காண்போம்:
(எபிரெயர் 6:10) ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே.
நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். (வெளிப்படுத்தின விசேஷம் 2:3)
மூன்றாவதாக, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள அவர்கள் நம்பிக்கையின் பொறுமை என்பது ஏதோ, சில காரியங்களில், சில நேரங்களில் மட்டும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கையோடு இராமல், எப்பொழுதும் எல்லாவற்றிலேயும் - நாம் ஆண்டவரிடத்தில் வேண்டிகொண்டபடி நடந்தாலும், நடக்காமல் போனாலும், உடனே ஆண்டவர் மீது குறை சொல்லாமல், முறுமுறுக்காமல், அவருடைய வழிகளை விட்டு பின்வாங்காமல் பாடுகளை கிறிஸ்துவுக்காக சகித்து கொண்டு வாழ்நாள் முழுவதும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு அந்த நம்பிக்கையில் அவர் வருகை மட்டும் பொறுமையோடிருப்பதே ஆகும். இதை விளக்கும் பரிசுத்த வேத வசனங்களில் சிலவற்றை காண்போம்:
(எபிரெயர் 12:1) ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
(வெளிப்படுத்தின விசேஷம் 2:3) நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
(ரோமர் 5:3-4) அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.
(ரோமர் 12:12) நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
(2 தெசலோனிக்கேயர் 1:4) நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.
இப்படியாக மேற்சொன்ன குணாதிசயங்களை, காரியங்களை தங்களுக்குள்ளே கொண்டிருக்கிற சிலராகிய தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பார்வையில் விசேஷமானவர்கள், விலையேறபட்டவர்கள். அதினாலேயே இவர்களை வஞ்சித்து, தேவனை விட்டு வழி விலகச்செய்து, இவர்கள் ஆத்துமாவை நரகம் கொண்டு செல்லவே சாத்தான், அந்திகிறிஸ்து துடிக்கிறார்கள், அவன் ஊழியக்காரரான கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் அதற்காகவே கூடுமானவரை பெருமுயற்சி செய்வார்கள். மேலும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்கும் போது அவர்கள் மூலமாக செய்யப்படும் தேவ ஊழியங்கள், கடைசி கால ஆத்தும அறுவடை, கர்த்தருடைய ராஜ்யம் கட்டியெழுப்பப்படுதல் போன்றவையும் முற்றிலுமாக தடைபட்டு போகும் மிகப்பெரும் அபாயமும் உள்ளது.
தேவ கிருபையினால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்ற சத்தியத்தைக் குறித்து அறிந்து கொண்டோம். அப்படியானால், வஞ்சகம் என்றால் என்ன? தொடர்ந்து அடுத்த செய்தியில் தியானிப்போம்.
திரியேக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். தேவனாகிய கர்த்தருக்கே சகல துதியும், கனமும், மகிமையும் உண்டாவதாக. ஆமென்.