- Category: Messages - 2018
- Hits: 4652
இதோ வருகிறேன்
தேவ செய்தி - மார்ச் / ஏப்ரல் 2018 (Message - March / April 2018)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
இந்த நாட்களில், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூர்ந்து, சிலுவையிலே அவர் உலக மக்கள் யாவருக்காகவும் செய்து நிறைவேற்றிய மகத்துவமான, மகிமையான சத்தியத்தை தியானித்து, உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரையே உயர்த்தி, அவரையே மகிமைப்படுத்தி அவரை மாத்திரமே கொண்டாடுகிற நாட்கள்.
பிதாவாகிய தேவனுடைய சித்தம் நிறைவேற்ற, தம் மூலமாய் மனுக்குலத்திற்கு தேவன் உண்டு பண்ணின மீட்பின் திட்டத்தை நிறைவேற்ற தம்மை தாமே பரிபூரணமாக பிதாவுக்கு ஒப்புக் கொடுத்து மனுஷ குமாரனாக இந்த உலகத்திற்கு வரும் முன்பாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உரைத்த வார்த்தைகளே மேற்கண்ட பரிசுத்த வேத வசனம். அதன் தொடர்ச்சியாக :
(சங்கீதம் 40:7) அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது;
(சங்கீதம் 40:8) என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.
கிறிஸ்து இயேசுவின் சிலுவைப் பாடுகள் மற்றும் அவருடைய உயிர்த்தெழுதல் நமக்குத் தரும் பாக்கியங்கள்:
1] பாவ, சாப, இருளின் மற்றும் பிசாசின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை. பாவ மன்னிப்பும், அதன் நிச்சயமும்.
2] ஆத்தும இரட்சிப்பு.
3] வியாதிகள், நோய்களிலிருந்து அவருடைய குணமாக்கும் தழும்புகளினால் உண்டாகும் சுகம், ஆரோக்கியம்.
4] பரிசுத்த வேத சத்தியம்.
5] அவருடைய மரணத்தின் சாயலிலும், அவருடைய உயிர்த்தெழுதலிலும் இணைக்கப்படும் தண்ணீரினால் ஞானஸ்நானம் மற்றும் இன்னும் மேலான பரிசுத்த ஆவியானவரால், அக்கினியினால் ஞானஸ்நானம்.
6] முடிவு வரை தேவனுக்கேற்ற, பரிசுத்த வேதம் போதிக்கும் வாழ்க்கை.
7] இந்த உலக வாழ்க்கைக்கும், ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் தேவையான தேவ கிருபையும், இரக்கங்களும், தயவும், அனைத்து நன்மைகளும், ஆசீர்வாதங்களும்.
8] இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால், பிதாவாகிய தேவன் நமக்கு உண்டு பண்ணியிருக்கிற இந்த மீட்பை, இரட்சிப்பை, நித்திய ஜீவனை சர்வ சிருஷ்டிக்கும் அறிவிக்கிற ஊழியங்கள்.
9] நித்தியஜீவன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூர்ந்து கொண்டாடுகிற இந்த நேரத்தில், உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே மகிமைப்படுத்தி, முதலாம் உயிர்த்தெழுதலுக்கு நாம் பங்குள்ளவர்களாகும்படிக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ரகசிய வருகை அல்லது எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு ஆயத்தமாகும் காலம் இது. காரணம் தேவனாகிய கர்த்தரால் அந்த காலமும் நேரமும் இப்பொழுது ஆரம்பமாகிவிட்டது.
(வெளிப்படுத்தின விசேஷம் 20:6) முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
அனுதினமும் சுயம் சாவதும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் என்ற கர்த்தருடைய வார்த்தையின்படியே ( வெளிப்படுத்தின விசேஷம் 22:11) பரிசுத்த அலங்காரமுமே அந்த ஆயத்தம். ஒவ்வொரு நாளும் இந்த ஆயத்தத்தை நாம் செய்வதும், இடைவிடாது தொடர்வதும், அதில் முன்னேறுவதும் அவசியம். இதற்கு நாம் அனுதினமும் தவறாமல், தாமதிக்காமல், அதிகாலையில் பரிசுத்த வேதம் வாசித்து, தியானிப்போம். நம் கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் பாதம் பற்றிக் கொண்டு பரிசுத்த ஆவியினாலே ஜெபம்பண்ணி அவருடைய பிரசன்னத்திலே தரித்திருப்போம். பரிசுத்த ஆவியானவர் நமக்கு கட்டாயம் உதவி செய்து இதை நமக்குள் அனுதினமும் செய்தருள்வார். தேவ சித்தத்தின்படி நம்மை ஒவ்வொரு நாளும் நடத்துவார். நம்மை கர்த்தருடைய ரகசிய வருகைக்கு ஆயத்தமாக்குவார். நாம் ஆயத்தமாயிருப்போம்.
(மத்தேயு 24:44) நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
(லூக்கா 12:40) அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.
தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.