- Category: Messages - 2018
- Hits: 2501
உங்களிடத்தில் வருவேன்
கிறிஸ்துமஸ் தேவ செய்தி - டிசம்பர் 2018 (Christmas Message - December 2018)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
உலக ரட்சகரும், ஆண்டவரும், ஆத்தும ரட்சகருமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இனிய கிறிஸ்து பிறந்த நாளின் அன்பு வாழ்த்துக்கள்! பூமிக்கு வந்த மேசியா - கிறிஸ்து இயேசுவையே கொண்டாடுவோம். அவருடைய நாமத்தையே உயர்த்துவோம். |
கிறிஸ்து இயேசு பூமியில் வந்து ஒரு மனிதனாக பிறந்ததை, அவருடைய முதலாம் வருகையை கொண்டாடும் இந்த நாட்களில், அவரே உரைத்த வார்த்தை தான் பரிசுத்த வேதத்தில் காணப்படும் கீழ்க்கண்ட வசனம்:
(யோவான் 14:18) நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.
பரிசுத்த வேதத்திலே, மேற்கண்ட அதிகாரம் முழுவதுமே (யோவான் 14) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனிடத்திற்கு தாம் செல்வதைக் குறித்தும், அவருடைய வசனத்தைக் கைக்கொண்டு அவரில் அன்பாயிருப்பதைக் குறித்தும், பிதாவாகிய தேவன் தன்னுடைய நாமத்தினாலே பரிசுத்த ஆவியானவரை மனிதர்களாகிய நமக்கு அருளப்போகிறதை குறித்துமே அதிகமாய் தன் சீடர்களுக்கு வெளிப்படுத்தி சொன்னார். இப்படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தி சொன்னவற்றில் மூன்று முக்கிய காரியங்களை இந்த பண்டிகை காலத்தில் நாம் தியானிப்பது பொருத்தமாயிருக்கும்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, மனிதனாக இந்த பூமிக்கு வந்த நோக்கத்தை சிலுவையில் நிறைவேற்றி முடித்து, மீண்டும் தம்முடைய பிதாவினிடத்திற்கு திரும்பி செல்லுவதை, அது நடப்பதற்கு முன்னமே தன் சீடர்களிடம் வெளிப்படுத்திய இந்த சூழ்நிலையில், சீடர்களின் மனநிலையையும், அவர்களின் உள்ளத்தில் இருந்த கேள்விகளையும் அறிந்திருந்த ஆண்டவர் இயேசு, அவற்றிற்கு தெளிவான பதிலை அளித்தார்.
1) ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சமாதானம்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனிடத்திற்கு திரும்ப சென்று விட்ட பிறகு நாம் என்ன செய்வோம் என்று கலங்கின சீடர்களுக்கும், இன்று நமக்கும் ஆண்டவர் வாக்குப் பண்ணுவது - தேவ சமாதானம். உலகம் கொடுக்கும் சமாதானத்தை போல் அல்ல, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சமாதானம். இன்று நாம் வாழும் இந்த காலங்கள், குறிப்பாக ஒவ்வொரு வருடமும் கடந்து போகப் போக, நம் கண் முன்னே இந்த உலகில் நடக்கும் காரியங்கள், பயங்கரங்கள், நம் வாழ்விலும் நடக்கும் சில காரியங்கள் நம் சமாதானத்தை குலைத்து நம் நம்பிக்கைகளை அசைத்து நாம் இனி என்ன செய்வோம், இனி எப்படி இந்த உலகில் வாழ்வோம் என்று நம்மையும் கலங்க செய்கிறது. அந்த சூழ்நிலைகளில், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பதில்:
(யோவான் 14:27) சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
(யோவான் 14:6) அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; ...
(யோவான் 14:13) நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
2) சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்' (Spirit of truth, the Comforter)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சமாதானத்தை நமக்கு அருளிச் செய்வதோடு, சத்திய ஆவியாகிய தேற்றரவாளனாம் பரிசுத்த ஆவியானவரையும் நமக்கு அருளிச் செய்கிறார். அவரே சொல்கிறார்:
(யோவான் 14:16) நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
இந்த பரிசுத்த ஆவியானவர் என்றென்றைக்கும் நம்முடனே கூட இருந்து, ஆண்டவர் இயேசு கிறிஸ்து போதித்த எல்லாவற்றையும் நமக்கு ஞாபகப்படுத்தி அவற்றை நாம் கைக்கொள்ள செய்கிறார். கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை பெலப்படுதுகிறார். நம்மை நிரப்பும் உன்னதத்திலிருந்து வரும் பெலன் (லூக்கா 24:49) பரிசுத்த ஆவியானவரே.
(யோவான் 14:26) என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
(யோவான் 14:17) உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
இந்த ஆவியானவர் வேறு யாரோ அல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே என்றென்றும் நம்முடனே, நமக்குள்ளே வாசம் பண்ணும்படி அவரே நமக்குள் வருகிறார். நம்மை நிரப்புகிறார். பரிசுத்த வேதம் இதை உறுதிபடுத்துகிறது.
(1 கொரிந்தியர் 8:6) .... இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; ....
(2 கொரிந்தியர் 3:17) கர்த்தரே ஆவியானவர்; ....
(1 கொரிந்தியர் 15:45) .... பிந்தின ஆதாம் (இயேசு கிறிஸ்து) உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
(கலாத்தியர் 4:6) மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
3) உங்களிடத்தில் வருவேன்
நமக்கு தம்முடைய சமாதானத்தையும், பரிசுத்த ஆவியானவரையும் அருளிச்செயும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு கொடுக்கும் ஒரு அருமையான வாக்குத்தத்தம்:
(யோவான் 14:18) நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.
கல்வாரி சிலுவையில் உலக மக்களுக்காக தேவ சித்தம் நிறைவேற்றி, யாவையும் செய்து முடித்த நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலக வாழ்வில் அல்லது இந்த உலக வாழ்க்கைக்கு பிறகும் நம்மை நிர்கதியாக, நிராதரவாக, திக்கற்றவர்களாக விட்டுவிடுவதில்லை. அவர் திரும்பவும் நம்மிடத்தில் வருகிறார். அவருடைய முதலாம் வருகையை இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையாக நாம் கொண்டாடுகிற இந்த நேரத்தில், அவருடைய இரண்டாம் வருகையைக் குறித்து, அதற்கு நாம் தயாராவதைக் குறித்தும் நாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சொல்லியிருக்கிறார்:
(யோவான் 14:18) நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.
(யோவான் 14:2) என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
(யோவான் 14:3) நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாசம் செய்யும் பரலோகத்தில் நாமும் அவருடனே இருக்க அவர் விரும்புகிறபடியால் அவர் மறுபடியும் வந்து - இரகசிய வருகை, இரண்டாம் வருகையின் மூலமாக நம்மை அவரிடத்தில் சேர்த்துக்கொள்ளுவார்.
அப்படியானால், அவருடைய வருகைக்கு நாம் எப்படி தயாராவது? அதற்கு என்ன செய்ய வேண்டும்.? ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே சொல்கிறார்:
(யோவான் 14:21) என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
(யோவான் 14:23) இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
பரிசுத்த வேதத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து போதிக்கும் அவருடைய வசனத்தின் படி நடந்து, அவருடைய வார்த்தையை எந்நாளும் நாம் கைக்கொண்டால் நாம் அவரில் அன்பாயிருப்போம். அவரில் அன்பாயிருந்தால் அவரும் நம்மில் அன்பாயிருந்து நமக்குள் வந்து வாசம் பண்ணுவார். நம்மை தம்முடைய வருகைக்கு ஆயத்தப்படுத்துவார். எனவே தான், அவர் வாசம் பண்ணும் பரலோகம் நாமும் சென்று சேர அவர் சொன்னார்:
(யோவான் 14:6) அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
(யோவான் 14:15) நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
எனவே
(யோவான் 14:1) உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; ....
(யோவான் 14:18) நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.