- Category: Messages - 2017
- Hits: 3895
அன்பே பூரண சற்குணம்
புத்தாண்டு தேவ செய்தி - ஜனவரி 2017 (Message - Jan 2017)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இணையில்லா பரிசுத்த நாமத்தில் உங்கள் யாவருக்கும் அன்பின் புத்தாண்டு வாழ்த்துகளை, சாரோனின் ரோஜா ஊழியங்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
தேவனாகிய கர்த்தருடைய திருவுள சித்தத்தின்படி, தேவன் அருளிய அவருடைய பரிசுத்த வேத வசன வாக்குத்தத்தத்தின் படியே தேவன் உங்களை பூரண சற்குணத்தின் கட்டாகிய தம் அன்பினால் நிறைத்து, தம்மோடு என்றும் உங்களை இணைத்துக் கொண்டு தம் வருகை பரியந்தமும் அப்படியே காத்துக் கொண்டு உங்களை தம் ராஜ்யம் கொண்டு சேர்ப்பாராக. ஆமென்.
இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். (கொலோசெயர் 3:14)
மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் ஒரு ஆழ்ந்த சத்தியத்தை, ரகசியத்தை நமக்கு போதிக்கிறது. அது பூரண சற்குணம் (Complete and Perfectness) என்பது தேவ அன்பை நம்மில் தரித்து கொள்வது, அதாவது தேவ அன்பினால் நாம் நிறைந்திருப்பது, அதிலே முடிவு வரை நிலைத்திருப்பது என்பதே. வேறு வார்த்தையில் சொல்வதானால், சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக நம்மை பூரணரும், சற்குணருமாக்குவது நம்மில் நிறைந்து இருக்க வேண்டிய தேவ அன்பே.
பரிசுத்த வேதத்தில், பரலோகத்தில் இருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை குறித்து ஆண்டவர் இயேசு கிறிஸ்து கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறார்.
ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். (மத்தேயு 5:48)
நாமும் பூரண சற்குணராயிருக்க வேண்டும் என்றே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு போதிக்கிறார். அப்படியானால், நமக்கு இது சாத்தியப்படுவது எப்படி? நாம் தொடர்ந்து தியானிப்போம். நாம் தியானிக்கிற பிராதன வசனத்திற்கு (கொலோசெயர் 3:14) முந்தின இரண்டு வசனங்களையும் (கொலோசெயர் 3:12-13) நாம் கவனித்துப் பார்க்கும் போது,
ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; (கொலோசெயர் 3:12)
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (கொலோசெயர் 3:13)
மேற்சொல்லப்பட்டிருக்கிற காரியங்கள் எல்லாம் முக்கியமானதாக இருந்தாலும், அவை எல்லாவற்றிற்கும் மேலாக, மிக முக்கியமாக தேவ அன்பை நம்மிலே தரித்துக் கொள்ளும் போது தான் நாம் பூரண சற்குணராக, மனுஷரை தம் அன்பின் கயிறுகளால் கட்டி இழுக்கிற (ஓசியா 11:4) நம் தேவனோடு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு என்றும் இணைக்கப்பட்டிருப்போம். இந்த இணைப்பையே பரிசுத்த வேதம் பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பு என்று நமக்குப் போதிக்கிறது. அப்படியானால், பூரண சற்குணராக தேவ அன்பு நம்மில் நிறைந்து நிலைத்து இருக்க வேண்டும். இந்த தேவ அன்பை நம்மில் பெற்றுக் கொள்வது எப்படி ? தேவ அன்புக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது? தொடர்ந்து தியானிப்போம்.
அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். (1 யோவான் 4:8)
இந்த பரிசுத்த வேத வசனம் மிக ஆழமான ஒரு சத்தியத்தை நமக்கு போதிக்கிறது. அது தேவாதி தேவன், சர்வ வல்லமையுள்ள கடவுள் அன்பாகவே இருக்கிறார் என்பதே. அதாவது, தேவன் கொஞ்சம் அன்பாகவும் இருக்கிறார் என்றோ, அன்பையும் கொண்டிருக்கிறார் என்றோ அல்ல. அவர் அன்பாகவே இருக்கிறார் (HIS very being, existence itself is Love). எனவே தான், அவரைப் போல நாமும் பூரண சற்குணாராக அவருடைய அன்பால் நிறைந்து, அந்த அன்பிலே முடிவு வரை நிலைத்திருக்க வேண்டும். அப்படியானால், இந்த தேவ அன்பை நாம் பெற்றுக் கொள்ளவதும், அது நமக்குள் பூரணப்படுவதும், நாம் அதிலே நிலைத்திருப்பதும் எப்படி?
(இயேசு) அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். (1 யோவான் 2:5)
தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். (1 யோவான் 4:12)
தேவ வசனத்தை, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் போதனைகள நாம் கைக்கொள்ளும் போது, தேவ அன்பு நமக்குள் நிறைந்து பூரணப்படுகிறது. அதாவது, நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கற்பனைகளை நிறைவேற்றும் போது, தேவ அன்பிலே நாம் நிலைத்திருக்க முடியும். ஏதோ ஒரு சிலரிடத்தில், சில காலம் அல்ல, நம் வாழ்நாளெல்லாம் தேவ அன்பினால் ஒருவரிலொருவர் அன்பாயிருப்போம். பூரண சற்குணரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே சொன்ன அவருடைய கற்பனை (Commandment) இதோ:
நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். (யோவான் 15:10)
என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன். (யோவான் 15:11)
நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. (யோவான் 15:12)
இந்த புதிய ஆண்டில், கர்த்தாராகிய இயேசுவினிடத்தில் இந்த தேவ அன்பையே நமக்குள் பெற்றுக் கொள்ள வேண்டிக் கொள்வோம். அப்பொழுது அவர் தாமே தம் கற்பனைகளை, போதனைகளை நாம் கைக்கொள்ள நமக்கு கிருபையாய் உதவி செய்வார். தம் அன்பினால் நம்மை நிறைப்பார். அப்பொழுது, தேவாதி தேவனுடைய மகா நியாயத்தீர்ப்பு நாளிலே கூட தேவனுக்கு முன்பாக நாம் நிற்க நமக்கு தைரியம் உண்டாயிருக்கும்.
நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம். (1 யோவான் 4:17)
Love has been perfected among us in this: that we may have boldness in the day of judgment; because as He is, so are we in this world. (1 John 4:17) [NKJV]
Herein is our love made perfect, that we may have boldness in the day of judgment: because as he is, so are we in this world. (1 John 4:17) [KJV]