- Category: Messages - 2017
- Hits: 3873
திரும்பவும்...
தேவ செய்தி - பிப்ரவரி 2017 (Message - Feb 2017)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். (லூக்கா 15:24)
மேற்கண்ட பரிசுத்த வேத வசனம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே ஒரு உவமையின் வழியே சத்தியத்தை விளக்கிச் சொல்லும்போது சொன்ன வசனமாகும். இந்த உவமையிலே சொல்லப்படும் "தகப்பன்" என்பது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது. இதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள இந்த உவமையை நாம் முழுவதுமாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. இந்த உவமையை பரிசுத்த வேதத்தின் லூக்கா 15:11-24 என்ற பகுதியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே இதை விளக்கிச் சொல்லியிருக்கிறார்.
மேற்கண்ட உவமையிலே, ஒரு தகப்பனுடைய இரண்டு மகன்களில், இளைய மகன் சொத்தில் தனது பங்கை தந்தையிடம் இருந்து பெற்றுக் கொண்டு, வேறு ஒரு தூர தேசத்திற்கு சென்று அங்கே மிக கெட்ட வழியில், துன்மார்க்க வழியில் நடந்து தன் சொத்தையெல்லாம் அழித்துப்போட்டான். அந்நேரம், அந்த தேசத்தில் கொடிய பஞ்சம் உண்டானது. அப்பொழுது அவன் வாழ வழி தேடி அத்தேசத்து குடியானவன் ஒருவனிடம் சென்று ஒட்டிக் கொண்டான். அந்தக் குடியானவனோ, அவனை தன் பன்றிகளை மேய்க்க அனுப்பினான். அவனோ பஞ்சத்தின் கொடுமையினால் பன்றிகளின் தீவனத்தைக் கொண்டு தன்னை பசியாற்றிக் கொள்ள முயற்சித்தும் அதை ஒருவரும் அவனுக்கு கொடுக்கவில்லை. அப்பொழுது அவனுக்கு புத்தி தெளிந்து, என் தகப்பனுடைய வேலைக்காரருக்கு கூட திருப்தியான சாப்பாடு இருக்கிறது, ஆனால் நானோ இங்கே பசியினால் சாகிறேன் என்று சொல்லி, மீண்டும் தன் தகப்பனிடத்திற்கே சென்று கீழ்க்கண்டவாறு கூறினான்.
குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். (லூக்கா 15:21)
அப்பொழுது அந்த தகப்பன் சொன்ன பதில்:
என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். (லூக்கா 15:24)
இதிலே நாம் கவனித்து தியானிக்க வேண்டியது என்னவென்றால், இளைய மகன் பரலோகத்தின் தேவனுக்கு அதாவது கடவுளுக்கு விரோதமாக, தன்னைப் பெற்றெடுத்த தகப்பனுக்கு விரோதமாக தான் பாவம் செய்ததாக மனம் வருந்தி அறிக்கை செய்யும் போது, அந்த தகப்பனோ - "என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்" என்று சொன்ன பதிலேயாகும். அப்படியானால், தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வதற்கும் மரித்து போவதற்கும் என்ன தொடர்பு? அப்படியே, தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வதற்கும் காணமல் போவதற்கும் என்ன சம்பந்தம்?
அப்படியானால், ஒரு மனிதன் பாவம் செய்யும் போது என்னதான் நடக்கிறது? பரிசுத்த வேதம் இதற்கெல்லாம் தெளிவாக பதில் சொல்கிறது. அவற்றில் சிலவற்றை கீழே காண்போம்.
...பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். (எசேக்கியல் 18:4)
அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். (எபேசியர் 2:1)
அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். (எபேசியர் 2:5)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியாத, அவரை சொந்த ரட்சகராக, தெய்வமாக கொண்டிராத ஒரு மனிதன் பாவம் செய்யும் போது அந்த மனிதன் இன்னும் இரட்சிக்கப்படாததினாலே அந்த மனிதன் பாவத்தினால் மரித்தவனாகவே இருக்கிறான். அவனுடைய ஆவி, ஆன்மா அல்லது ஆத்துமா இன்னும் பாவ மன்னிப்பாகிய மீட்பை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளாததினாலே அந்த மனிதனின் உள்ளான மனிதனாகிய (inner man) ஆவி மற்றும் ஆன்மா பாவத்திற்கு அடிமையாக, பாவத்தினால் மரித்து அல்லது இறந்த நிலையிலேயே இருக்கிறது. இந்த நிலையில் கடவுளோடு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு உறவும் இல்லை, ஐக்கியமும் இல்லை (No Relationship & Fellowship). இந்த நிலையைத் தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆத்தும மரணம் என விளக்குகிறார்.
ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தன் சொந்த ரட்சகராக, தெய்வமாக கொண்ட ஒரு மனிதன் அதாவது இரட்சிக்கப்பட்ட ஒரு மனிதன் பாவம் செய்யும் போது அவன் கடவுளோடு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு உள்ள உறவாகிய "அவருடைய பிள்ளை - மகன் , மகள்" என்ற உறவு (Relationship) அப்படியே இருந்தாலும் அந்த உறவின் ஐக்கியத்தை (Fellowship) இழந்து போகிறான். அதாவது பரம தகப்பன் இயேசு கிறிஸ்துவோடு உறவாடி, அவருடைய அன்பின் உறவை அனுபவித்து மகிழ்கிற அந்த உன்னத நிலையை இழந்து போகிறான். தந்தை - மகன், மகள் என்ற உறவு மாறவில்லை, ஆனால் பாவம் செய்தபடியால், தந்தையோடு உறவாடி மகிழ முடியாமல் போகிறது. இந்த நிலையைத் தான் நல்ல மேய்ப்பராகிய, ஆடுகளுக்காக தன் ஜீவனையும் கொடுத்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய ஆடு காணாமல் போன நிலை என விளக்குகிறார்.
உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ? (லூக்கா 15:4)
கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, (லூக்கா 15:5)
வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா? (லூக்கா 15:6)
மேற்சொன்ன இரண்டு நிலைகளில் எதுவானாலும், உவமையில் சொல்லப்பட்ட இளைய மகன் போல புத்தி தெளிந்து, செய்த பாவம் உணர்ந்து மனம் வருந்தி, பின் மனம் திருந்தும் போது பரம தகப்பனாக கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் உள்ளம், அவருடைய அன்பு, அவருடைய மனதுருக்கம் எப்படிப்பட்டது என்பதை அந்த உவமையின் வாயிலாகவே நாம் அறிந்து கொள்ளலாம்.
(இளைய மகன்)... அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். (லூக்கா 15:20)
அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். (லூக்கா 15:22)
... நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். (லூக்கா 15:23)
என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். (லூக்கா 15:24)
ஒரு மனிதனின் பாவ அடிமைத்தனத்திலிருந்து அவனை சிலுவையில் சிந்தின தன் இரத்ததினால் விடுதலையாக்கி, பாவமற அவனை சுத்திகரித்து, அவனுடைய ஆத்தும மரணத்திலிருந்து அவனை உயிர்ப்பித்து, தன் உறவைத் தந்து தம் பிள்ளையாக்கி, இழந்த உறவின் ஐக்கியத்தை மீட்டுக் கொடுக்கவே ஆத்தும மீட்பரும், நல் மேய்ப்பருமாகிய இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார்.
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் (இயேசு) வந்திருக்கிறார் ... (லூக்கா 19:10)
(இயேசு) மனுஷகுமாரன் கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார். (மத்தேயு 18:11)
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; ... (1 தீமோத்தேயு 1:15)
பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். (மத்தேயு 9:13)
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். (மத்தேயு 1:21)
இன்று ஒருவேளை நாம் மேற்சொன்ன எந்த நிலைமையில் இருந்தாலும் - ஆத்தும மரணமோ, நல் மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவை விட்டு வழி விலகி காணாமல் போய் அலைந்து திரிந்து கொண்டிருந்தாலும் இன்று பரம தகப்பனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவினிடத்தில் திரும்புவோம். அவர் நம்மை தம் மார்போடு அரவணைத்துக் கொள்வார். மிக சமீபத்திலிருக்கும் அவருடைய இரண்டாம் வருகை மட்டும் அப்படியே நம்மைக் காத்து தம் பரலோக ராஜ்யம் கொண்டு சேர்ப்பார்.
எனவே தான் உலக ரட்சகராகிய (யோவான் 4:42, 1 யோவான் 4:14) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார்:
...மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக்கா 15:7)