- Category: Messages - 2015
- Hits: 5637
பரிசுத்த வேத தியானம்
(Let's Meditate Word of God)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
பந்தய பொருள்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள். (கொலோசெயர் 2:19)
மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் ஒரு மிக முக்கிய எச்சரிக்கையை நமக்கு தெள்ளத் தெளிவாக உரைக்கிறது. அது " நீங்கள் வஞ்சிக்கப்பட இடங்கொடுத்து, உங்கள் பந்தய பொருளை இழந்துவிடாதிருங்கள் " என்பதே.
இந்த உலக வாழ்க்கையிலே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய பரிசுத்த வேத வசனங்களின் மூலமாய் அதாவது நற்செய்தியினாலே, சுவிசேஷத்தினாலே இரட்சிக்கப்பட்ட பின்பு, நம் மரணம் அல்லது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை வாழும் இந்த உலக வாழ்க்கை ஓடி ஜெயிக்க வேண்டிய ஒரு ஓட்டம். அதாவது ஜெயமாக ஓடி முடித்து அதன் பரிசை, பந்தய பொருளை (Prize / Reward) பெற்றுக்கொள்கிற ஓட்டம். அந்த பந்தய பொருள் அல்லது பரிசு என்பது நம் ஆத்துமா ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு என்றென்றும், நித்தியகாலமாக வாழும் படியாக நித்திய ஜீவனை (Eternal Life)பெற்றுக் கொள்வதே ஆகும். அதாவது நம் ஆத்துமா என்றென்றைக்குமான நித்திய நரக அக்கினி தண்டணைக்கு ஆளாகிவிடாமல், நம் ஆத்துமா நித்திய ஜீவனுக்குள் சென்று சேர்வதாகும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே இதை கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்களில் விளக்கி இருக்கிறார்:
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத்தேயு 16:26)
மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? (லூக்கா 9:25)
மட்டுமல்ல
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார். (2 தீமோத்தேயு 4:7-8)
பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். (1 கொரிந்தியர் 9:24-26)
மற்றுமொரு பரிசுத்த வேத வசனம் சொல்கிறது:
மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன? (யோபு 27:8)
அப்படியானால், நாம் செய்ய வேண்டியதை பரிசுத்த வேத வசனம் நமக்கு விளக்கி சொல்கிறது, அது என்ன?
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். (பிலிப்பியர் 3:14)
உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். (2 யோவான் 1:8)
ஆனால், இவ்வளவு முக்கியமான இந்த பந்தய பொருளை நாம் பெற்றுக்கொள்ளாதபடி, அதை நாம் இழந்து விடும்படியாக நாம் வஞ்சிக்கப்பட்டு போகும் பெரும் ஆபத்து நமக்கு முன்னால் இருக்கிறதைக் குறித்து பரிசுத்த வேதத்திலே நமக்கு திட்டமும் தெளிவுமாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, யார் யார் நம்மை வஞ்சிப்பார்கள், எப்படி அல்லது என்ன விதத்தில் நம்மை வஞ்சிப்பார்கள் என்பதை கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் நமக்கு விளக்கி போதிக்கிறதை நாம் கருத்தோடு கவனிப்போம்.
ஒருவனும் நயவசனிப்பினாலே உங்களை வஞ்சியாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். (கொலோசெயர் 2:4)
லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல. (கொலோசெயர் 2:8)
கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் (இயேசு கிறிஸ்துவை) பற்றிக்கொள்ளாமல், மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள். (கொலோசெயர் 2:18-19)
ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். (மத்தேயு 24:24)
அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள். (ரோமர் 16:17-18)
ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். (2 கொரிந்தியர் 11:3)
இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; (எபேசியர் 5:6)
விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களைத் தூஷிக்க அஞ்சாதவர்கள். இவர்களோ பிடிபட்டழிக்கப்படுவதற்கு உண்டான புத்தியற்ற மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷித்து, தங்கள் கேட்டிலே கெட்டழிந்து, அநீதத்தின் பலனை அடைவார்கள். இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து; உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்; விபசாரமயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தை விட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள். (2 பேதுரு 2:10,12-14)
இந்த சூழ்நிலையில், மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின்படியான மக்களை அடையாளம் கண்டுகொள்வது எப்படி? தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் ஒருவரே நம் நம்பிக்கை. நம் பாதுகாப்பு.
பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். (1 யோவான் 4:1)
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. (1 யோவான் 4:3)
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான். (2 யோவான் 1:7)
மேலும்,
தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. (1 யோவான் 4:2)
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நமக்கு போதிக்கிறபடி, உண்மையாய் முடிவு வரை நம் ஆத்துமாவை குறித்து, நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வதைக் குறித்து ஜாக்கிரதையாய் இருப்போம். அதற்கு நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே, பரிசுத்த ஆவியானவர் தாமே முடிவு வரை நமக்கு உதவி செய்வாராக. ஆமென்.
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு. (வெளிப்படுத்தின விசேஷம் 3:11)
....ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன். (வெளிப்படுத்தின விசேஷம் 2:10)