- Category: Messages - 2015
- Hits: 4414
இயேசு கிறிஸ்து - தேவனுடைய குமாரன்
கிறிஸ்துமஸ் தேவ செய்தி - 2015 (Christmas Message - 2015)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
நம் கர்த்தரும், உலக இரட்சகரும், மீட்பருமாகிய தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் அன்பின் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள். ஒவ்வொருவர் இருதயத்திலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிறக்க நம் தேவனிடத்தில் வேண்டுதல் செய்கிறேன். ஆமென். |
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். (அப்போஸ்தலர் 9:20)
மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் அப்போஸ்தலனாகிய பவுல் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை யார் என்று நேரடியாக அவரையே தரிசித்து அறிந்து கொண்ட பின் அவரைக் குறித்து எப்படி எல்லோருக்கும் அறிவித்தார் என்பதை சொல்கிறது.
நமக்காக இந்த பூமியில் வந்து பிறந்து, நம்மைப் போலவே ஒரு மனுஷனாக வாழ்ந்து, சிலுவையில் நமக்காக யாவையும் செய்து முடித்து மரணமடைந்து, பிறகு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த கிறிஸ்து இயேசு யார் என்பதைக் குறித்தே, அவருடைய முதலாம் வருகையை, அவருடைய பிறப்பை கொண்டாடுகிற இந்த நாளில் சற்று தியானிப்போம்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து, இந்த பூமியில் வாழ்ந்த போது, தம் சீஷர்களிடத்தில் இதே கேள்வியை கேட்டார். அந்த கேள்வி :
ஜனங்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்? அதோடு, அதே கேள்விக்கு பதிலை தம் சீஷர்களிடத்திலும் கேட்டார் (மத்தேயு 16:13-16; மாற்கு 8:27-29). அதற்கு அவருடைய சீஷரில், ஒருவரான அப்போஸ்தலனாகிய பேதுரு :
சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். (மத்தேயு 16:16)
அப்போஸ்தலனாகிய பேதுரு சொன்ன இந்த பதில்தான் மேற்கண்ட கேள்விக்கு மிகச் சரியான பதிலாகும். ஆம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு சாதாரண மனிதரோ, வழக்கமான அவதாரங்களில் ஒருவரோ, வெறும் நல்லவரோ, ஒரு வரலாற்று நாயகனோ அல்லது ஒரு கற்பனை கதா பாத்திரமோ அல்ல. ஆண்டவர் இயேசு கிறிஸ்து, காணக்கூடாத சர்வ வல்லமையுள்ள கடவுளுடைய , தேவனுடைய ஒரே சொந்த குமாரன். பரிசுத்த வேதமே நமக்கு இதை விளக்கி சொல்கிறது:
தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன்; (சங்கீதம் 2:7)
அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. (மத்தேயு 3:17)
அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. (மத்தேயு 17:5)
இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,
அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம். (2 பேதுரு 1:17-18)
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாம் யார் என்பதை அவரே சொல்லியிருக்கிறார்:
இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத்தேயு 26:63-64)
வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)
இந்த உண்மையை, இந்த சத்தியத்தை - பரிசுத்த வேதத்தில் பல பரிசுத்தவான்கள், தேவ பிள்ளைகள், சிலுவையில் அவரை அறைந்த போர்ச் சேவகர்கள்,போர்ச் சேவகர்களின் தளபதி முதற்கொண்டு இதை எல்லோருக்கும் முன்பாக வெளிப்படையாக, சாட்சியாக சொல்லி தேவனை மகிமைப்படுத்தி இருக்கிறார்கள். அதனால், அவர்கள் ஆத்தும மீட்படைந்து, அதாவது இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாய் என்றென்றும் தேவனோடு தேவ ராஜ்யத்தில் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். மட்டுமல்ல, ஆச்சரியப்படத்தக்க வகையில் பிசாசுகளும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தேவ குமாரன் என்று அறிந்திருந்து, எல்லோர் முன்பாகவும் அறிக்கை செய்து பயந்து நடுங்கின. இதை நமக்கு விளக்கும் பரிசுத்த வேதத்தின் ஒரு சில வசனங்களை மட்டும் நாம் இங்கே காணலாம்.
தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். (மாற்கு 1:1)
தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். (லூக்கா 1:35)
நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான். (யோவான் 1:33-34)
அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். (யோவான் 1:49)
நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். (மத்தேயு 27:54)
பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். (1 யோவான் 4:14)
அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன. (மாற்கு 3:11)
ஆனால், எல்லோரும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று ஏற்று கொள்ளவில்லை, ஏற்று கொள்ள விரும்பவில்லை. அதோடு மட்டுமல்ல, அவரை கேலி செய்தனர், சந்தேகப்பட்டனர், சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போதும் கூட அவரை அவமானப்படுத்தினர். எல்லவாற்றிக்கும் மேலாக - இந்த காரணத்திற்காகவே அவரை கொலை செய்யும்படியும் எத்தனையோ முறை முயற்சி செய்தனர், சிலுவை மரண தண்டனையை அவருக்கு அளிக்க இதையே மிக பிரதானமான காரணமுமாக்கினர். பரிசுத்த வேதத்தின் கீழ்க்கண்ட சில வசனங்களை கவனித்து பாருங்கள். அது விளங்கும்.
தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். ...(மத்தேயு 13:54-57)
உடனே பரிசேயர் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண்ணினார்கள். (மாற்கு 3:6)
அப்பொழுது பிரதான ஆசாரியரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகச் சாட்சி தேடினார்கள்; அகப்படவில்லை. (மாற்கு 14:55)
அப்படியிருந்தும் அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது. (லூக்கா 23:23)
தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். (மத்தேயு 27:43)
அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள். (மத்தேயு 27:44)
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று ஏற்றுக்கொண்டு அவரை விசுவாசிக்கும் போது ?
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். (1 யோவான் 4:15)
இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. (யோவான் 20:31)
ஒருவேளை, ஆண்டவரும், இரட்சகரும், மீட்பரும், கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று ஏற்றுக் கொள்ள மறுத்தால் அதன் விளைவு என்றென்றும் ஈடு செய்யமுடியாத ஆத்தும இழப்பை, நரக தண்டனையையே பெற்று கொள்ள வழிவகுக்கும்.
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. (யோவான் 3:17-18)
குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (யோவான் 3:36)
எனவே,
தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான். தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். (1 யோவான் 5:10-13)