- Category: Messages - 2015
- Hits: 4929
பரிசுத்த வேத தியானம்
(Let's Meditate Word of God)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
இடுக்கமும், நெருக்கமும்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். (மத்தேயு 7:14)
Because narrow is the gate and difficult is the way which leads to life, and there are few who find it. (Matthew 7:14 NKJV)
மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தில், சொல்லப்பட்டிருக்கிற ஜீவன் என்ற வார்த்தை நித்திய ஜீவனை குறிக்கிறது. அதாவது, இந்த உலகத்தில் உயிர் வாழுவதை அல்லது ஜீவனோடு இருப்பதைக் குறித்து அல்ல. இந்த உலக வாழ்விற்கு பிறகு உள்ள வாழ்வில் நாம் என்றென்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு வாழ நமக்கு வேண்டிய ஜீவனை அதாவது நித்திய ஜீவனைக் குறித்தே ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த தம் வார்த்தையின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
அப்படியானால், இந்த நித்திய ஜீவனை நாம் பெற்றுக் கொள்வதற்காக நாம் செல்ல வேண்டிய பாதை - அதாவது நித்திய ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமாகவும் (narrow) வழி நெருக்கமுமாயிருக்கிறது (difficult). மட்டுமல்ல, அந்த வழியை கண்டுபிடிக்கிறவர்களே சிலர் என்றும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
யாருக்கு நித்திய ஜீவன் உண்டு என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்?
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 6:47)
அப்படியானால், ஏன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள செல்லும் வாசல் நுழைய அவ்வளவு எளிதாக இல்லாமல் இடுக்கமாக (narrow) இருக்கிறது? ஏன் வழி எளிதாக செல்லும் படி இல்லாமல் நெருக்கமாக (difficult) இருக்கிறது?
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவர் தம் வார்த்தைகளை, போதனைகளை கைக்கொண்டு வாழ முடிவெடுத்து வாழும் போது நமக்கு இந்த உலகத்தில் அநேக பாடுகளும், உபத்திரவங்களும் வந்து நேரிடும் என்பதையே ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு போதிக்கிறார். அப்படியானால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக அவருடைய போதனைகளை கைக்கொண்டு வாழும் போதும், அவருடைய நாமத்தினிமித்தமும் நாம் அனுபவிக்கும் பாடுகள், உபத்திரவங்கள் இவற்றின் பலன் என்ன, இப்படி ஒரு கடினமான வழியின் மூலமாகத்தான் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள வேண்டுமா? எளிதாக பெற்றுக் கொள்ள முடியாதா? இவ்வளவு பாடுகள், உபத்திரவங்கள் அவசியம் தானா? இன்னும் இதைப் போன்ற பல கேள்விகள் நம் மனதில் எழுந்தாலும், இவை எல்லாவற்றிற்கும் பரிசுத்த வேதம் மிகத் தெளிவாக, ஆழமான பதிலை நமக்கு விளக்கிக் கூறுகிறது. இந்த பதில்கள் எவ்வளவு உண்மையும், சத்தியமுமானவைகள் என்பதை இந்த பாதையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு நாம் நடக்கும் போது பூரணமாக உணர்ந்து, தெரிந்து கொள்வோம். பரிசுத்த வேதம் அளிக்கும் பதிலோடு தொடர்புடைய அனைத்து வசனங்களையும் இங்கே குறிப்பிட முடியாவிட்டாலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வசனங்களின் மூலமாக பரிசுத்த ஆவியானவர் நமக்கு விளக்கி, போதித்து, உதவி செய்வாராக.
பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் (இயேசு) பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். (லூக்கா 9:23)
மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. (2 கொரிந்தியர் 4:17)
இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக்கா 13:24)
சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள். (அப்போஸ்தலர் 14:22)
ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை (இயேசு கிறிஸ்துவை) உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது. (எபிரெயர் 2:10)
நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். (சங்கீதம் 119:71)
ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 10:7)
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். (யோவான் 10:9)
அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். (2 தீமோத்தேயு 3:12)
கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, (லூக்கா 24:26)
இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. (1 தெசலோனிக்கேயர் 3:3)
இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். (1 பேதுரு 2:21)
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; (பிலிப்பியர் 2:5)
ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. (பிலிப்பியர் 1:29)
அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், (அப்போஸ்தலர் 5:41)
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. (மத்தேயு 5:10-12)
அப்படியானால், இவ்வளவு கடினமான, பாடுகள் உபத்திரவங்கள் நிறைந்த இந்த பாதையில் நாம் செல்வது எப்படி? நமக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து உதவி செய்வாரா? இப்படி பல கேள்விகளுக்கு பரிசுத்த வேதம் அளிக்கும் பதில்களிலிருந்து சில வசனங்கள்:
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் (இயேசு) உலகத்தை ஜெயித்தேன் என்றார். (யோவான் 16:33)
கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான். (உபாகமம் 31:8)
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. (ரோமர் 8:37)
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். (1 கொரிந்தியர் 15:57)
தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். (1 யோவான் 5:4)
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? (1 யோவான் 5:5)
பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். (1 யோவான் 4:4)
அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். (ரோமர் 5:3-4)
உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். (ரோமர் 8:35-39)
ஆனால், மேற்கண்ட உண்மைக்கு - அதாவது நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள, ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது என்ற உண்மைக்கு நேர் எதிராக நரகத்திற்கு அதாவது ஆத்துமா நிரந்தரமாக நரக அக்கினியில் சதா காலமும் வாதிக்கப்படுவதற்கு செல்லும் பாதையை குறித்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே கூறி எச்சரித்து இருக்கிறார். ஆனால், அந்த வழி ஆச்சரியப்படத்தக்க விதத்தில் இந்த உலகத்தில் மிக எளிதாக, மிக இன்பமாக, மிக கவர்ச்சிகரமாக, அநேகர் செல்லும் வழியாக இருக்கிறது. இதையே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த வேதத்தின் கீழ்க்கண்ட வசனங்களின் மூலமாக எச்சரிக்கிறார்:
....கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். (மத்தேயு 7:13)
வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை. (யோவான் 5:39-40)
எனவே தான் ஜீவாதிபதியாகிய (Prince of Life) கர்த்தர் இயேசு கிறிஸ்து (அப்போஸ்தலர் 3:15) சொல்லுகிறார்:
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; ...(யோவான் 14:6)