- Category: Messages - 2014
- Hits: 4618
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
விடுதலை கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். (யோவான் 8:36) மேற்கண்ட பரிசுத்த வேத வசனம், தேவ குமாரனாம் இயேசு கிறிஸ்து ஒரு மனிதனை விடுதலையாக்கினால் அந்த மனிதன் மெய்யாகவே விடுதலையாவான் என்பதை உறுதியாக கூறுகிறது. அப்படியானால், மனிதன் ஏன் விடுதலையாகப்பட வேண்டும், எவைகளிலிருந்து அல்லது எந்த விதமான காரியங்களிலிருந்து விடுதலையாகப்பட வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ளும் போது தான் தேவ குமாரனாம் இயேசு கிறிஸ்து அருளும் இந்த விடுதலையின் தேவை, முக்கியத்துவம் மற்றும் அதன் பலன்கள் என்ன என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும். பரிசுத்த வேதம் விளக்குகிறது: ...எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே. (2 பேதுரு 2:19) மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின் அர்த்தம் - தேவனுடையதல்லாத அல்லது தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான எந்தக் ஒரு காரியத்தினாலும் நாம் ஜெயிக்கப்பட்டிருந்தால், நாம் தீங்குக்கு, தீமைக்கு, மட்டுமல்ல பாவத்திற்கும் நாம் அடிமைகளாகி விட்டோம் என்பதாகும். வேறு வார்த்தையில் சொல்வதானால் - மனிதனை, மனித ஆத்துமாவை கொல்லவும், திருடவும், அழிக்கவும் எப்பொழுதும் கர்ஜிக்கும் சிங்கம் போல் சுற்றித் திரியும் சாத்தானுக்கு அடிமைகளாகி விட்டோம் என்று அர்த்தம். இதை பரிசுத்த வேதத்தின் கீழ்காணும் வசனம் உறுதிப்படுத்துகிறது. எப்படியென்றால், நாம் ஜெயிக்கப்படும்படி நாம் அந்த காரியங்களுக்கு கீழ்படிகிறோம் அல்லது கீழ்ப்படியாமல் எதிர்த்து நிற்க நம்மால் முடிவதில்லை. விளைவு, நாம் அடிமைகளாகிறோம். இதை, தெளிவாக விளங்கிக் கொள்ள, உதாரணத்திற்கு ஏதாவது ஒரு தவறான பழக்கத்திற்கு அடிமையாகிப் போகிற ஒரு நிலையை எண்ணிப் பார்க்கும் போது, இந்த அடிமைத்தனம் குறித்து நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது. மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா? (ரோமர் 6:16) அடிமைத்தனங்களை குறித்து கீழ்க்காணும் சில பரிசுத்த வேத வசனங்கள் கூறுவதை கவனிப்போம்: இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 8:34) ...அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல,... (ரோமர் 6:19) அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு....(ரோமர் 8:20) நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள். (1 கொரிந்தியர் 7:23) ...இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம். (கலாத்தியர் 4:3) நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள். (கலாத்தியர் 4:8) ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம். (தீத்து 3:3) ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். (எபிரெயர் 2:15) இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், நாம் விடுதலையின் முக்கியத்துவத்தை, அதன் அவசியத்தை அதன் பலன்களை அறிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமாயிருக்கிறது. இந்த விடுதலையை நாம் பெற்றுக் கொள்ள பரிசுத்த வேதம் உரைக்கும் வழிகள் என்ன? எப்படி இந்த விலைமதிக்க முடியாத விடுதலையை நாம் பெற்றுக் கொள்ள முடியும்? அதற்கு ஒரே வழி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும், அவர் உரைத்த அவருடைய வார்த்தைகளும் - அதாவது பரிசுத்த வேதமும், பரிசுத்த ஆவியானவரும் தான். ஆகையால் குமாரன் (தேவ குமாரன் இயேசு கிறிஸ்து) உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். (யோவான் 8:36) சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். (யோவான் 8:32) கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. (2 கொரிந்தியர் 3:17) இந்த விடுதலையை பெற்றுக் கொள்ளும் போது, நமக்கு என்ன நடக்கிறது மற்றும் அதன் பலன்களை கீழ்காணும் பரிசுத்த வேத வசனங்கள் விளக்குகின்றன: பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள். (ரோமர் 6:18) கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. (ரோமர் 8:2) இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். (கொலோசெயர் 1:13) ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். (எபிரெயர் 2:15) மேற்கண்ட எல்லா பலன்களுக்கும் மேலானது - தேவனுடையதல்லாத அல்லது கர்த்தர் இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமான எந்த ஒரு காரியத்திலிருந்தும் - அதாவது பாவம், சாபம், பாவ அடிமைத்தனம், சாத்தான்-பொல்லாத தீய ஆவிகளின் பிடி என எந்த ஒரு காரியத்திலிருந்தும் கர்த்தர் இயேசு கிறிஸ்து அளிக்கும் இந்த விடுதலையினால் உண்டாகும் மிகப் பெரும் பலன் - இந்த உலக வாழ்க்கைக்கு பின்பும் என்றென்றும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுடன் பரலோக வாழ்க்கை - அதாவது நித்திய ஜீவன். இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். (ரோமர் 6:22) (இந்த வேத தியானத்தோடு "நான் தேவனுக்கு அடிமை" - என்ற மற்றுமொரு வேத சத்தியத்தை நீங்கள் இங்கே தியானிக்கலாம். அது உங்கள் பரிசுத்த வேத தியானத்திற்கு இன்னும் உதவியாயிருக்கும். நன்றி.) நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |