- Category: Messages - 2014
- Hits: 5811
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
கூடாரம் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான். இரண்டாம் வருஷம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் ஸ்தாபனம்பண்ணப்பட்டது. (யாத்திராகமம் 40:16-17) பரிசுத்த வேதத்திலே, தேவனாகிய கர்த்தர் தம்முடைய தாசனாகிய மோசேக்கு கொடுத்த கட்டளைகள் மற்றும் வழிமுறைகளின் படி, இஸ்ரவேல் மக்கள் நடுவே தேவனாகிய கர்த்தர் வாசம் பண்ண ஒரு வாசஸ்தலத்தை கட்டி முடித்து ஸ்தாபித்ததையே மேற்கண்ட வசனம் நமக்கு விளக்குகிறது. மோசேயின் கூடாரம் இஸ்ரவேல் மக்கள் தாங்கள் அடிமைப்பட்டு இருந்த எகிப்து தேசத்தை விட்டு தேவனாகிய கர்த்தர் தம் தாசனாகிய மோசேயை கொண்டு அவர்களை விடுதலையாக்கி, வனாந்திர வழியாக அவர்களை நடத்தி வரும்போது அவர்கள் நடுவிலே தான் வாசம்பண்ணும்படியாக இப்படி செய்தருளினார். இது ஆசரிப்பு கூடாரம் என்ற அழைக்கபட்டதோடு இந்த ஆசரிப்பு கூடாரத்தை இஸ்ரவேல் மக்கள் தாங்கள் போகும் இடமெங்கும் தங்களுடனே கூட எடுத்து சென்று தாங்கள் தங்கும் இடங்களிலெல்லாம் இதை ஸ்தாபிப்பார்கள். இஸ்ரவேல் மக்களுக்கு நடுவில் தாம் வாசம் பண்ணவும், அவர்கள் தம்மை தொழுது வணங்கி ஆராதிக்க, தம் கட்டளைகள், கற்பனைகள், பண்டிகைகள் நிறைவேற்ற, தாம் அவர்களை வழி நடத்த இந்த ஆசரிப்பு கூடாரத்தில் தேவனாகிய கர்த்தர் வாசம் பண்ணினார். இது மூன்று பகுதிகளை கொண்டிருந்தது, அவைகள் - வெளிப்பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் என்பதாகும். இதில் மகா பரிசுத்த ஸ்தலத்தில், தேவனாகிய கர்த்தர் மோசேக்கு தம் விரலினால் தாமே எழுதிக் கொடுத்த பத்து கட்டளைகள் (அல்லது) சாட்சி பிரமாணம், உடன்படிக்கை பெட்டி, கிருபாசனம் இருந்தன. இவைகளைக் குறித்து பரிசுத்த வேதத்தில் - யாத்திராகமம் 25:10-22, யாத்திராகமம் 40 - இங்கே நாம் விளக்கமாக அறிந்து கொள்ளலாம். ஆனால் இந்த கூடாரத்திற்குள் எல்லோரும் செல்லவோ, எப்பொழுதும் சென்று தேவனை தொழுது கொள்ளவோ முடியாது. இந்த கூடாரத்தின் வெளிப்பிரகாரம் தவிர பரிசுத்த ஸ்தலமும், மகா பரிசுத்த ஸ்தலமும் திரை சீலைகளால் மூடி மறைக்கப்பட்டிருந்தது. பிரதான ஆசாரியன் என்னும் தேவனாகிய கர்த்தர் ஏற்படுத்தின ஊழியனே வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தன்னை பரிசுத்தப்படுத்திக் கொண்ட பின் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் சென்று தேவ ஊழியத்தை நிறைவேற்ற முடியும். தாவீதின் கூடாரம் இதற்கு பிறகு, தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு தாம் வாக்கு பண்ணின தேசத்தை அவர்களுக்கு தந்து, அதை அவர்கள் சுதந்தரிக்கும்படியாக செய்த பின் அவர்கள் விரும்பி கேட்டபடியே அவர்களுக்கு அவர்களை ஆள ராஜாக்களை ஏற்படுத்தின பின்பு, தேவனுடைய தாசனாகிய தாவீது ராஜா தேவனாகிய கர்த்தருக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். ஆனால் இந்த கூடாரத்தில் எல்லாருடைய கண்களும் காண கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி வைக்கப்பட்டது. கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார். (சங்கீதம் 132:13) ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று. (2 சாமுவேல் 5:7) தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீதுராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான். (2 சாமுவேல் 6:12) அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீது போட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் ஸ்தானத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டான். (2 சாமுவேல் 6:17) இந்த தாவீதின் கூடராம், பின்னாளில் வெளிப்பட்ட நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், அவர் மூலமாக பிதாவாகிய தேவனை எங்கும் தொழுதுகொள்ளும் காலம் வருகிறதை முன்னறிவிக்கும் ஒரு தீர்க்கதரிசன அடையாளமாக இருந்தது. அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார். (ஆமோஸ் 9:12) கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார். (ஏசாயா 16:5) நாமே கூடாரம் நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? (1 கொரிந்தியர் 3:16) என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். (யோவான் 14:26) எனவே தான், இன்று இந்த உடன்படிக்கை பெட்டி கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்குள் இருக்கிறது. அதாவது கர்த்தருடைய கற்பனைகளும், கட்டளைகளுமாகிய பரிசுத்த வேதத்தை, சத்தியத்தை நம் இருதயத்தில் கொண்டிருந்தால் நாமே தேவனுடைய ஆலயமாய், தேவனுடைய கூடாரமாய் இருக்கிறோம். இந்த காரியத்தை தேவனுடைய ஆவியாகிய சத்திய ஆவியானவர் நமக்குள் செய்கிறார். இப்பொழுது நம்மை காண்கிற யாவரும் சீயோனில் இருந்த தாவீதின் கூடாரத்தில் வெளியரங்கமாக்கப்பட்ட கர்த்தருடைய மகிமையை நம்மில், நம் மூலமாக காண வேண்டும். அப்படி காணும் போது தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக சமீபித்திருக்கிற இந்த நாட்களில் நாம் கடைசியான ஒரு மிகப்பெரிய ஆத்தும அறுவடையை கர்த்தருக்காய் செய்து நிறைவேற்ற முடியும். எண்ணில்லாத ஆத்துமாக்களை நரக அக்கினிக்கு தப்புவித்து பரலோகத்திற்கு, தேவ ராஜ்யத்திற்கு நேராக நடத்த முடியும். தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். (யாக்கோபு 5:20) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நமக்கு கிருபை செய்து, தம் பரிசுத்த ஆவியானவராலே இதை நம்மைக் கொண்டு செய்து முடிப்பாராக. தேவனாகிய கர்த்தருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. பரிசுத்த வேதம் இப்படியாக சொல்கிறது: நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ... வந்து சேர்ந்தீர்கள். (எபிரெயர் 12:23-24)
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |