- Category: Messages - 2014
- Hits: 5997
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
தேவ அன்பு கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, ...ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; .... (1 யோவான் 4:7) மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் ஒரு ஆழமான உண்மையின் உச்சத்தை, பரிசுத்த வேத சத்தியத்தை நமக்கு விளக்குகிறது. அன்பு என்பதே சர்வ வல்லமையுள்ள தேவனிடத்திலிருந்து, கர்த்தர் இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்தே மனுக்குலத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது தேவனாகிய கர்த்தரே அன்பின் பிறப்பிடம். அன்பு மனிதனிடத்திலிருந்து உண்டானதல்ல. தேவனாகிய கர்த்தர் நம்மை நேசித்து நமக்கு வெளிப்படுத்திய அன்பை, நமக்குள் கொடுத்த அன்பை நாம் பெற்று அதை மற்றவர்களிடத்தில் வெளிப்படுத்துகிறோம். மற்றவர்களோடு அந்த அன்பை பகிர்ந்து கொள்கிறோம். அந்த அன்பினால் நாம் எல்லோரையும் நேசிக்கிறோம். ஆனால், அன்பு என்ற ஒரு வார்த்தையை இன்று உலகம் பயன்படுத்திக் கொள்கிற விதங்கள், அன்புக்கு உலகம் கொடுக்கிற விளக்கங்கள், உலகம் அன்பை வெளிப்படுத்துகிற விதங்கள் என இவற்றை எல்லாம் நாம் உற்று நோக்கும் போது, உண்மையிலேயே நாம் அன்பை குறித்து பரிசுத்த வேதத்தின் வழியாய் அறிந்து கொள்வதே ஏற்றதும், இறுதியானதாகவும் இருக்க முடியும் என்பது நமக்கு தெளிவாக விளங்குகிறது. பரிசுத்த வேதத்தின் மூலம் உண்மையான அன்பை பற்றி அதாவது தேவ அன்பை பற்றி நாம் இன்னும் அறிந்து கொள்வோம். கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்களை நாம் சற்று ஆழமாக தியானித்து பார்க்கும் போது அன்பை பற்றிய உண்மைகளை, வேத சத்தியங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். 1) சர்வ வல்லமையுள்ள தேவன், அதாவது மெய்யான ஒரே தெய்வம் எப்படிப்பட்டவர்? ... தேவன் அன்பாகவே இருக்கிறார். (1 யோவான் 4:8) ... for God is love. (1 John 4:8) [ It is not that God has love or God is also having love. But He is, His very being, very existence itself is Love...God is Love.] 2) தெய்வத்தினுடைய அன்பு - தேவ அன்பு மனிதருக்கு எப்படி உண்டாகியிருக்கிறது, மனிதருக்கு எப்படி வெளிப்பட்டது? தம்முடைய ஒரே பேறான குமாரனாலே (இயேசு கிறிஸ்துவினாலே) நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. (1 யோவான் 4:9) நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை (இயேசு கிறிஸ்துவை) அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. (1 யோவான் 4:10) 3) இந்த தேவ அன்பு நமக்குள் எப்படி, யார் மூலமாக கொடுக்கப்படுகிறது? மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்... (ரோமர் 5:5) பரிசுத்த ஆவியானவர் மூலமாக ஆவியின் கனிகளில் முதன்மையானதாகவும் அன்பு நமக்கு அருளப்படுகிறது. ஆவியின் கனியோ, அன்பு, ...., (கலாத்தியர் 5:22) 4) தேவ அன்பு எப்படிப்பட்டது ? இந்த தேவ அன்பின் குணாதிசயங்கள் என்ன? அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது. (1 கொரிந்தியர் 13:4-8) அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. (1 யோவான் 4:18) 5) எப்பொழுதும் நிலைத்திருப்பது எது? அன்பு ஒருக்காலும் ஒழியாது. ... (1 கொரிந்தியர் 13:8) இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. (1 கொரிந்தியர் 13:13) இறுதியாக, மிக சமீபத்திலிருக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில், அவருடைய நியாயத்தீர்ப்பின் போது, நியாயாதிபதியாக அவர் சிங்காசனத்தில் வீற்றிருக்க, அவருக்கு முன்பாக நிற்க நமக்கு தைரியமுண்டாக நமக்குள் நடக்க வேண்டியது என்ன? நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; .... (1 யோவான் 4:17) தேவ அன்பு நம்மிடத்தில் பூரணப்பட ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடத்தில் ஊக்கமாய் வேண்டிக் கொள்வோம். விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். (எபேசியர் 3:17-19) நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |