- Category: Messages - 2014
- Hits: 4157
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
நிலைத்திருக்கிறேனா? கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். (1 யோவான் 4:12) முதலாவதாக, மேற்கண்ட பரிசுத்த வேத வசனம், ஒரு முக்கியமான காரியத்தை குறித்து மிக தெளிவாக நமக்கு சொல்கிறது. அது, நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கூர்ந்தால், சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர், தெய்வமாகிய இயேசு கிறிஸ்து நமக்குள் என்றும் நிலைத்திருக்கிறார் என்பதே. இதை உறுதிப்படுத்தும் மற்றுமொரு பரிசுத்த வேத வசனம்: தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். (1 யோவான் 4:16) பல நேரங்களில் நமக்குள் எழும் ஒரு கேள்விக்கு பதிலாகவும் இந்த பரிசுத்த வேத வசனம் உள்ளது. அந்த கேள்வி என்னவென்றால் - எனக்குள் தேவனாகிய கர்த்தர் - இயேசு கிறிஸ்து இருக்கிறாரா, நான் அவருடைய பிள்ளைதானா, நான் அவருக்குள் நிலைத்திருக்கிறேனா என்பதே. இந்த சூழ்நிலையில் தான் பரிசுத்த வேதத்திலிருந்து இன்னும் சில வசனங்களை நாம் தியானிக்கப் போகிறோம். அதன் மூலமாக மேற்கண்ட கேள்விக்கு பதிலை நாம் தெள்ளத்தெளிவாக அறிந்து கொள்ளலாம். இரண்டாவதாக, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம். (1 யோவான் 3:24) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை அதாவது பரிசுத்த வேத கட்டளைகளை கைக்கொள்ளும் போது தான் அவர் நமக்குள் நிலைத்திருக்கிறார். நாமும் அவருக்குள் நிலைத்திருக்கிறோம். இதை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே இந்த வேத பகுதியில் விளக்குகிறார் : லூக்கா 6:46-49. மூன்றாவதாக, அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம். (1 யோவான் 4:13) இதை உறுதிப்படுத்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாமே உரைத்த மற்றுமொரு பரிசுத்த வேத வசனத்தை இங்கே காணலாம்: யோவான் 14:16 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர், தம்முடைய ஆவியானவரை நமக்கு தந்தருளியிருப்பதினால், அதாவது தேவனிடத்தில் நாம் வேண்டிக்கொண்டு பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளும் போது தெய்வமாகிய இயேசு கிறிஸ்து நமக்குள் என்றும் நிலைத்திருக்கிறார். நான்காவதாக என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். (யோவான் 6:56) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, நம்முடைய சாபங்களை, நோய்களை, சாத்தானால் உண்டாகும் எல்லா தீங்குகளையும் சிலுவையில் தன் மீது ஏற்றுக்கொண்டு, நம்முடைய பாவங்கள் அனைத்தையும், அந்த பாவங்களுக்காக நாம் அனுபவிக்க தண்டனையையும் சிலுவையில் தன் மீது ஏற்றுக்கொண்டு அவைகளை சிலுவையில் சுமந்து தீர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை, அவருடைய தியாகத்தை, நம் மீதான அவருடைய அன்பை, நினைவு கூர்ந்து நன்றி நிறைந்த உள்ளத்தோடு இந்த திருவிருந்தை அனுசரிக்கும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குள் நிலைத்திருக்கிறார். அதாவது, சிலுவையில் அடித்து நொறுக்கப்பட்ட,கிழிக்கப்பட்ட அவருடைய உடலுக்கும், சிந்தப்பட்ட அவருடைய பாவமற்ற பரிசுத்த இரத்தத்திற்கும் அடையாளமாக திருவிருந்தை அனுசரிக்கும் போது, ஆவிக்குரிய பிரகாரமாக உண்மையிலேயே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருசரீரத்தையும், திருஇரத்தத்தையும் நாம் பெற்றுக்கொள்ளும் போது அவர் நம்மில் நிலைத்திருக்கிறார். நாமும் அவருக்குள் நிலைத்திருக்கிறோம். இதையே மேற்கண்ட வசனம் நமக்கு போதிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். (1 யோவான் 4:15) இந்த உலகத்தில் மனிதனாக வந்து நமக்காக - நம்முடைய பாவ, சாபங்களை, நோய்களை, சாத்தானால் உண்டாகும் எல்லா தீங்குகளையும் தன் மீது ஏற்றுக்கொண்டு அவைகளை சிலுவையில் சுமந்து தீர்த்து, இறந்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து மரணத்தையும், பாதாளத்தையும் ஜெயித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய மெய்த் தேவனுடைய ஒரே சொந்த குமாரன், பிள்ளை என்று நம்பி, விசுவாசித்து அறிக்கை பண்ணுகிறவர்களுக்குள் தேவனாகிய கர்த்தர் நிலைத்திருக்கிறார். அவர்களும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கிறார்கள். ஆனால், யார் பிதாவாகிய தேவனையும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிக்கை செய்ய மறுத்து, மறுதலிப்பான் என்று பரிசுத்த வேதம் சொல்கிறது? இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. (1 யோவான் 2:22) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் நாமும், நமக்குள் அவரும் நிலைத்திருக்கும் போது, நாம் ஆண்டவருக்கேற்ற கனிகளை கொடுக்கிற அவருடைய திராட்சை கொடிகளாக இருப்போம் என்று பரிசுத்த வேதம் கீழ்க்கண்ட வசனங்களின் மூலமாக விளக்குகிறது: நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள். என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. (யோவான் 15:1-5) ஒரு வேளை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் நாமும், நமக்குள் அவரும் நிலைத்திராவிட்டால், நாம் ஆண்டவருக்கேற்ற கனி கொடுக்கிறவர்களாய் இருக்க முடியாது. அதன் விளைவு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது: ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம். (யோவான் 15:6) நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |