- Category: Messages - 2014
- Hits: 4307
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
பிழைத்தாலும் மரித்தாலும் (இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் தேவ செய்தி) கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். (1 கொரிந்தியர் 15:17) உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்து எழுந்திருக்கவிட்டால், மனுக்குலம் முழுதும் இன்னும் பாவத்திலேயே இருந்திருக்கும் என்பதையே மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் நமக்கு சொல்கிறது. ஏனென்றால், நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; ... (1 பேதுரு 2:24) நம் பாவங்களை மாத்திரம் அல்ல, நம் வியாதிகள், நோய்கள், சாபங்கள், நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும்படியாக அதற்கான தண்டனை என எல்லாவற்றையும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாமே சிலுவையில் சுமந்து தீர்த்திருந்தாலும், இவை எல்லாவற்றிக்கும் மூல காரணம் பாவம். எனவே தான் பரிசுத்த வேதம் சொல்கிறது: அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். (ரோமர் 4:25) ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்ததின் மிக பிரதான பலன்களில் ஒன்று நாம் நீதிமான்களாக்கப்படுவதே. இது நம் முயற்சிகளினால் உண்டானதல்ல. தேவ கிருபையினால், கிறிஸ்து இயேசு சிலுவையில் நம் பாவங்களை சுமந்து தீர்த்ததை நாம் விசுவாசித்து அவருடைய நீதியை நாம் பெற்றுக் கொள்வது, சுதந்தரித்துக் கொள்வதாகும். ஏனென்றால் பரிசுத்த வேதம் விளக்குகிறது: இலவசமாய் அவருடைய (தேவனுடைய) கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; (ரோமர் 3:24) ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. (ரோமர் 5:18) அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். (ரோமர் 5:19) நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். (2 கொரிந்தியர் 5:21) இப்படி, உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும், அவருடைய உயிர்த்தெழுதலையும் விசுவாசித்து நாம் நீதிமான்களாக்கபட்டிருக்க நாம் அவருக்காக என்ன செய்ய வேண்டும், என்ன செய்து அவர் உள்ளத்தை மகிழ வைக்க முடியும்? அவருக்கு பிரியமாய் நடக்க முடியும்? அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். (ரோமர் 6:11) மட்டுமல்ல, இனி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காக மட்டுமே வாழும்படியாய் அவருடைய கரங்களில் நம்மையும், நம் வாழ்க்கையையும் ஒப்புக் கொடுத்து வாழ வேண்டும் என்பதையும் பரிசுத்த வேதம் நமக்கு போதிக்கிறது: பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம். (2 கொரிந்தியர் 5:15) அப்படி நம்மையும், நம் வாழ்க்கையையும் ஒப்புக் கொடுத்து வாழும்போது: நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம். (ரோமர் 14:8) ஒரு வேளை, நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும், அவர் நமக்காக பட்ட அவருடைய சிலுவை பாடுகளையும், அவருடைய உயிர்த்தெழுதலையும் அறிந்து கொண்ட பின்பும், அதாவது சத்தியத்தை உண்மையை அறிந்து கொண்ட பின்பும் துணிந்து, விரும்பி நாம் பாவம் செய்தால் ? சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். (எபிரெயர் 10:26-27) (புனித வெள்ளி செய்தியை இங்கே காணலாம்) நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |