- Category: Messages - 2014
- Hits: 4790
இந்த வார தியானம் (Meditation for the Week) தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார் |
பங்கு கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். (லூக்கா 10:42) இந்த பூமியில் நாம் வாழும் நம் நாட்களில் எல்லாம் நாம் நமக்கென தெரிந்துகொள்ள வேண்டிய பங்கை (a Portion or Share) குறித்து - அதாவது தெரிந்து கொள்ள பல பங்குகள் இருந்தாலும் அதில் எது மிகச் சிறந்தது, நம்மை விட்டு என்றும் எடுபட்டு போகாது என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே மார்த்தாள், மரியாள் என்னும் சகோதரிகளை கொண்டு நமக்கு விளக்கி சொல்லும் ஒரு சத்தியமே இந்த பரிசுத்த வேத வசனம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மார்த்தாள், மரியாள் என்னும் சகோதரிகளின் வீட்டுக்கு சென்ற போது, மார்த்தாள் ஆண்டவர் தன் வீட்டுக்கு வந்ததின் காரணமாக அவரை உபசரிக்க தேவையான எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்க, மரியாளோ ஆண்டவர் இயேசுவின் பாதத்தருகே அமர்ந்து ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை, தேவ காரியங்களை அவரிடத்தில் கேட்டுக் கொண்டிருக்க, அப்பொழுது மார்த்தாள் ஆண்டவரிடம் வந்து தான் மட்டுமே தனியாக வேலைகளை செய்து கஷ்டப்பட்டு கொண்டிருப்பதாகவும், மரியாளை உதவிக்கு அனுப்பி வைக்க ஆண்டவரிடம் வேண்டிக்கொண்ட போது ஆண்டவர் இயேசு தாமே சொன்ன பதிலே மேற்கண்ட பரிசுத்த வேத வசனம். ஆண்டவரின் இந்த பதிலிலிருந்து, பூமியிலே நமக்கென உள்ள பங்குகளில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதும், அதில் ஒன்று மட்டுமே என்றும் நம்மை விட்டு எடுபட்டு போகாமல் - அதாவது பூமியில் இந்த வாழ்க்கை முடிந்த பின்பும் நித்தியமாக வாழும் வாழ்க்கையிலும் அந்த பங்கு என்றும் நம்மோடிருக்கும் என்பதும் நமக்கு விளங்குகிறது. அப்படியானால் பரிசுத்த வேதம் இதைக் குறித்து என்ன சொல்கிறது? இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு. (பிரசங்கி 5:18) மேற்கண்ட இந்த பங்கை குறித்து இதன் தன்மையை குறித்து பரிசுத்த வேதம் மேலும் விளக்குகிறது: தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பப்போவான்; அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக்கொண்டுபோவதில்லை. (பிரசங்கி 5:15) மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். (சங்கீதம் 17:14) அப்படியானால், இந்த பங்கு அதாவது - பூமியில் இந்த வாழ்க்கையில் ஆசைப்படுகிற அனைத்து காரியங்களையும், அதானால் உண்டாகும் மகிழ்ச்சியையும் அனுபவித்தாலும் - அதன் எல்லை இந்த உலக வாழ்க்கை மட்டுமே, அதாவது பூமியில் நம் ஆயுளின் அளவு மட்டுமே. இந்த பங்கு இந்த உலக வாழ்க்கைக்கு பிறகு - அதாவது ஒன்று மரணத்திற்கு பின்பு அல்லது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு பின்பு என்றும் வாழும் நித்திய வாழ்க்கைக்கு இந்த பங்கை எடுத்து செல்லவும் முடியாது, வேறு வார்த்தையில் சொன்னால் நித்திய வாழ்விற்கும் இந்த பங்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. முன்னமே சொன்னது போல், இதன் எல்லை இந்த உலக வாழ்வு வரை மட்டுமே. ஆனால், மரியாள் தெரிந்து கொண்ட நல்ல பங்கு என்ன, அதன் சிறப்பு என்ன? மரியாள் தெரிந்து கொண்ட நல்ல பங்கு இந்த உலக வாழ்வின் ஈர்ப்போ, அதன் மகிழ்ச்சியோ அல்ல. மரியாள் தெரிந்து கொண்ட நல்ல பங்கு தன்னை விட்டு எடுபடாத ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை - அதாவது தேவனுடைய வார்த்தையாம் (யோவான் 1:1,14) ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே. அவர் தான் சத்தியம், நித்திய வாழ்வு மற்றும் அதை அடைய வழி. இந்த நல்ல பங்கு - ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்றும் நம்மை விட்டு நீங்குவதில்லை - இவ்வுலக வாழ்விலும், என்றென்றும். கர்த்தர் இயேசு கிறிஸ்துவையே நம் பங்காக நாம் தெரிந்து கொண்டால் நம்மை விட்டு அவரையும், அவரை விட்டு நம்மையும் எதுவும் பிரிக்க முடியாது. அப்படியாக கர்த்தர் நம்மை தம்மோடு தம் பிள்ளைகளாக உறவாக்கி, கல்வாரி சிலுவையில் நமக்கென தாம் சிந்தின தம் பரிசுத்த இரத்தத்தினால் நம்மை தம் உரிமையாக்கி என்றென்றும் தம்மோடு, தமக்குள் வைத்துக் கொள்வார். பரிசுத்த வேதம் இவைகளை கீழ்காணும் வசனங்கள் மூலம் விளக்குகிறது: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; ... (யோவான் 14:6) நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; .... (1 கொரிந்தியர் 7:23) குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. (1 பேதுரு 1:19) மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். (ரோமர் 8:38-39) எனவே தான், தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற அவருடைய அன்பின் தாசனாகிய தாவீது மூலமாக பரிசுத்த ஆவியானவர் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பங்கை குறித்து இந்த பரிசுத்த வேத வசனங்களின் மூலம் நமக்கு போதிக்கிறார். கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன். (சங்கீதம் 142:5) ... கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன். (சங்கீதம் 119:57) கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன். (புலம்பல் 3:24) நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |