- Category: Messages - 2012
- Hits: 5945
இன்றைய தியானம் | |
பிதாவின் சித்தம் செய்யவே வந்தேன் என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். (யோவான் 6:38) இந்த நாளின் தியான வசனமான மேற்கண்ட வசனம், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே கூறின வார்த்தையாகும். பிதாவாகிய தேவனுடைய சித்தம் என்ன? உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். (யோவான் 3:17) பிதாவாகிய தேவன், தம்முடைய ஒரே பேரான குமாரனான இயேசு கிறிஸ்துவின் மூலமாக உலகத்தின் மக்கள் யாவருக்கும் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலையை, பாவ மன்னிப்பாகிய மீட்பை தந்தருளி, அதோடு மட்டுமல்லாமல் என்றென்றைக்கும் தம்மோடு வாழும்படியாக நித்திய ஜீவனையும் தந்தருளவே சித்தங்கொண்டு கிறிஸ்து இயேசுவை பூமிக்கு அனுப்பினார்.பிதாவின் சித்தத்தை நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையிலே தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்து - மரித்து உயிர்த்தெழுந்து - பூரணமாக நிறைவேற்றினார். இந்த பாவ மன்னிப்பாகிய மீட்பை, இரட்சிப்பை நாம் பெற்றுக்கொள்ள நாம் செய்ய வேண்டியதெல்லாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனுடைய ஒரே பேரான குமாரன் என்றும், கல்வாரி சிலுவையில் கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்காகவும் இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்தார் என்றும் விசுவாசித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே சொந்த இரட்சகராக, மீட்பராக, ஒரே தெய்வமாக என்பதை முழு மனதோடு விசுவாசித்து ஏற்று கொண்டு முடிவு வரை அப்படியே நிலைத்திருப்பதே ஆகும். அப்பொழுது, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கீழ்க்கண்ட வார்த்தையின்படியே, நமக்கு இந்த உலக வாழ்விற்கு பிறகு நிரந்தரமான, நித்தியமான வாழ்வு தேவனோடு பரலோகத்தில் நமக்கு உண்டாயிருக்கும். குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார். (யோவான் 6:40) ஒருவேளை, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ளமல் போவதற்கு ஒரே காரணத்தை பரிசுத்த வேதம் கீழ்க்கண்டவாறு விளக்குகிறது. (இயேசு கிறிஸ்து) ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். (யோவான் 3:19-20) அப்படி, ஏற்றுகொள்ளாமல் போனால் என்ன நடக்கும் அல்லது அதன் விளைவு என்ன? என்றென்றுமான தண்டனையாம் நித்திய நரக தீர்ப்பு என்று பரிசுத்த வேதம் எச்சரிக்கிறது. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. (யோவான் 3:18) |
|
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |