- Category: Messages - 2012
- Hits: 4421
இன்றைய தியானம் | |
பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது. (1 கொரிந்தியர் 4:20) தேவனாகிய கர்த்தருடைய ராஜ்யம் என்றால் என்ன? தேவனுடைய ராஜ்யத்தில் தேவனே ஆளுகை செய்கிறார். அதாவது, தேவனுடைய ராஜ்யத்தில் தேவனுடைய சித்தமே பூரணமாக நிறைவேறுகிறது, தேவ பிரமாணங்களும், கட்டளைகளும், தேவனுடைய வார்த்தையுமே பூரணமாக நிறைவேறுகிறது. சகலமும் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே கீழ்படிந்து நடக்கிறது. தேவனுடைய ராஜ்யம் எப்படிப்பட்டது? தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. (ரோமர் 14:17) முதல்முறை தேவனாகிய கர்த்தர் பூமிக்கு வந்தபோது, இயேசு கிறிஸ்து என்னும் பெயரிலே, மனுக்குல இரட்சகராக, உலக இரட்சகராக அவர் மட்டுமே பூமியில் வந்து பிறந்து பிதாவின் சித்தம் நிறைவேற்றி உலகத்திற்கு இரட்சிப்பை, நித்திய ஜீவனை உண்டாக்கினார். ஆனால், இரண்டாம் முறையாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வரும்போது, உலக மனிதர்களை, உலகத்தை நியாயந்தீர்க்கும் நியாதிபதியாக வரும்போது அவர் மட்டுமல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு அவர் ஆளும் அவருடைய ராஜ்யமும் இந்த உலகத்திற்கு வருகிறது. இந்த பூமியை கர்த்தர் ஆளுகை செய்யப்போகிறார். அவருடைய ராஜ்யம் இந்த பூமியிலும் ஸ்தாபிக்கப்படப்போகிறது. அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிற இந்த பூமியை நியாயந்தீர்த்து, புதிய வானம், புதிய பூமியை ஆண்டவர் படைத்து அவரே ஆளுகை செய்யப்போகிறார். இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது. (2 பேதுரு 3:7) ஆச்சரியப்படத்தக்க ஒரு வேத சத்தியம், இந்த தேவ ராஜ்யம் நமக்குள்ளே இப்பொழுதே இருக்க முடியும் என்று சொல்கிறது. தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், (எபிரெயர் 6:5) அதாவது, இரண்டாம் முறையாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்து ஆளுகை செய்யும் முன்பாகவே இப்பொழுதே நமக்குள் தேவ ராஜ்யத்தை நாம் கொண்டிருக்க முடியும். இனி வரும் உலகத்தின் பெலன்களை நாம் இப்பொழுதே நமக்குள் பெற்றிருந்து ருசிக்க முடியும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை ஆளுகை செய்ய நம்மை முற்றிலுமாக அவரிடத்தில் அர்ப்பணித்து, ஒப்புக்கொடுத்து தேவ பிரமாணங்களுக்கும், வேத கட்டளைகளுக்கும், பூரணமாக கீழ்படிவதன் மூலம் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே நாம் கீழ்படிந்து நடக்கிறபோது அவருடைய ராஜ்யம் நமக்குள் உருவாகி பெலன் கொள்கிறது. அது வெறும் பேச்சிலே அல்ல, தேவ பெலத்திலே நமக்குள்ளே உண்டாகியிருக்கிறது. தேவ ராஜ்யத்தை நமக்குள்ளே கொண்டிருப்போம். அப்பொழுது தேவனாகிய கர்த்தருடைய இரண்டாம் வருகையை குறித்து பயந்து கலங்காமல் ஆவலோடு, ஆயத்தத்தோடு அவருக்கு காத்திருப்போம். இந்த செய்தியின் விரிவாக்கத்தை இங்கே காணலாம்.
|
|
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |