- Category: Messages - 2012
- Hits: 4443
இன்றைய தியானம் | |
அன்பிலே வேருன்றி விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, (எபேசியர் 3:17) பிதாவாகிய தேவனுடைய கிரியைகள் அனைத்திற்கும் அவருடைய அன்பே, தேவ அன்பே நோக்கமாயிருக்கிறது. அன்பினாலேயன்றி அவர் ஒரு காரியத்தையும் செய்வதில்லை. "தேவன் அன்பாகவே இருக்கிறார்". (1 யோவான் 4:8) சிருஷ்டிப்பு, தம் சாயலில் மனிதனை தம் கரத்தினாலேயே படைத்தது, மனிதன் தேவ வார்த்தையை மீறி பாவத்தில் விழுந்த போது தம் ஒரே பேரான சொந்த குமாரனாம் இயேசு கிரிஸ்துவையே கல்வாரி சிலுவையில் பலியாக்கி மனுகுலத்தை தம் அன்பின் உறவிலே மீண்டும் நிலைப்படுத்தியது, பரிசுத்த ஆவியானவராய் கர்த்தர் தாமே நம்முள் என்றும் வாசமாயிருப்பது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, நித்திய ஜீவன், என்றென்றும் அவரோடு பரலோகில் என அனைத்திற்கும் தேவ அன்பே ஆதாரமும் அஸ்திபாரமுமாய் இருக்கிறது. தம் அன்பை தான் படைத்த மனிதனுக்கு வெளிப்படுத்த தம் அன்பின் உருவமாய் கிறிஸ்து இயேசுவை உலகிற்கு அனுப்பின தேவன், தம் அன்பை கிறிஸ்து இயேசுவின் மூலமாய் வெளிப்படுத்தின தேவன் நம்மையும் தம் அன்பிலே நிலை கொள்ள சொல்கிறார். பரிசுத்த ஆவியானவர் மூலமாய் தம் அன்பை நம் இருதயங்களில் ஊற்றும் தேவன் - "மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்... (ரோமர் 5:5) - கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக அவருடைய அன்பிலே வேருன்றி நிற்க அன்போடு நம்மிடம் எதிர்பார்க்கிறார். அவருடைய கற்பனைகளை கைகொள்வேதே தேவனிடத்தில் அன்பு கூறுவதாகும் (1 யோவான் 5:3) என்று வேதம் நமக்கு சொல்கிறபடி, தேவனுடைய இந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதே நம்முடைய பிரதான வாஞ்சையும் தாகமுமயிருக்கட்டும். நம்மை படைத்த பிதாவாகிய தேவனுடைய இருதயம் நம் நிமித்தம் மகிழ்வதை விட நமக்கு வேறன்ன பாக்கியம் இருக்க முடியும். "தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்." (1 யோவான் 4:16) "கர்த்தர் உங்கள் இருதயங்களைத் தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக." (2 தெசலோனிக்கேயர் 3:5) |
|
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21) |