- Category: Messages - 2012
- Hits: 5090
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
உலக இரட்சகர், உலக மக்கள் அனைவரின் இரட்சிப்பின் அதிபதி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
நாம் பிறந்த நாள் கொண்டாடும் ஒருவரை – அது நம் குழந்தைகளோ, பெற்றோரோ, குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ – யாராக இருந்தாலும் அந்த நாள் முழுவதும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க நம்மால் இயன்ற எல்லாவற்றையும் செய்வோம் அல்லவா. இந்த கிறிஸ்துமஸ் நன்னாள் காணக்கூடாத தேவனாகிய கர்த்தர் நமக்காக இந்த பூமியில் இயேசு கிறிஸ்துவாக இறங்கி வந்த நன்னாளை, கிறிஸ்து பிறப்பு நாளாக கொண்டாடும் நாம், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை, அவர் தம் அன்பின் உள்ளத்தை சந்தோஷப்படுத்த வேண்டியது எவ்வளவு அவசியம். ஒரு வேளை நாம் அப்படி செய்யாமற்போனால் இந்த கொண்டாட்டமே வீணும், அர்த்தமற்றதும் ஆகிப்போகாதா?
அப்படியானால், நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எப்படி சந்தோஷப்படுத்துவது? பரிசுத்த வேதம் கீழ்கண்டவாறு கூறுகிறது: லூக்கா 15:7 –ல்
"அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
ஆண்டவர் இயேசுவின் அன்பின் உள்ளம், இன்னும் இரட்சிக்கப்படாமல் நரகத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிற கோடான கோடி மக்களை நினைத்து பரிதபிக்கிறது, கண்ணீர் வடிக்கிறது. நம் பரம தகப்பனாகிய நம் ஆண்டவரின் கண்ணீரை துடைத்து, அவர் உள்ளத்தை மகிழ்விப்பது அவருடைய பிள்ளைகளாகிய நம் கடமை அல்லவா?
பரிசுத்த வேதத்தில் ஆண்டவர் இயேசு தாமே கூறின இந்த இரண்டு உவமைகளை சற்றே சிந்தித்து பார்ப்போம்:
- நூறு ஆடுகளில் காணமற்போன ஒரு ஆட்டை பற்றின உவமை (லூக்கா 15:4-6)
- தந்தையை பிரிந்து சென்று, சீரழிந்து அதன் பின் மனம் திருந்தி தந்தையிடம் திரும்பிய மகன் (லூக்கா 15:11-32)
இந்த இரண்டு உவமைகளின் மூலமாக ஆண்டவர் தம் அன்பின் உள்ளத்தை நமக்கு வெளிப்படுத்துகிறார். காணமற்போன ஒரு ஆட்டை கண்டு பிடித்ததோடு மட்டுமல்லாமல் அதை அன்போடு தம் தோளில் சுமந்து வீடு கொண்டு சேர்த்து அதை கண்டு பிடித்த மகிழ்ச்சியை எல்லோரிடமும் வெளிப்படுத்தும் ஆண்டவர் இயேசுவின் அன்பின் உள்ளத்தை சற்றே நம் கண்முன் கொண்டு வந்து தியானிப்போம். அடுத்ததாக மனம் திருந்தி தன்னிடம் திரும்பிய மகனை தூரத்திலே வரக்கண்ட பொழுதே, அவன் தன்னிடம் வந்து சேரும் வரை காத்திராமல், அன்பின் மனதுருக்கத்தோடு வழியிலேயே ஓடிச் சென்று கட்டியணைத்து முத்தம் செய்யும் அன்பின் உள்ளத்தையும் சற்றே தியானிப்போம்.
என்றும் மாறாத களங்கமற்ற இதே அன்பினால் தானே நம்மையும் இரட்சித்து தம் பிள்ளைகளாக்கி நம்மை என்றென்றும் நேசிக்கிறார். இந்த அன்பின் உள்ளத்தை மகிழ்விக்க நாம் கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தினால் பெற்ற இரட்சிப்பை அவரை அறியாத மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டுமே. பிதாவாகிய தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்ற, பிதாவின் சித்தத்திற்கு தம்மையே முற்றிலும் அர்ப்பணித்து சிலுவையில் தம்மையே பலியாக தந்த தேவகுமாரனாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு நாம் நன்றியறிதலுள்ளவர்களாகவும் இதை செய்ய வேண்டுமே.
பரிசுத்த வேதத்தில் ஆண்டவர் இயேசு கூறிய மற்றுமொரு உவமையில் (லூக்கா 16:19-31) ஆபிரகாம் – லாசருவைப் பற்றி ஆண்டவர் கூறியதை போலவே, ஒருவேளை நம்மிடத்திலே நம் நண்பர்களோ, உறவினர்களோ, குடும்பத்தினரோ அல்லது நாம் வசிக்கும் இடத்தில், அலுவலகத்தில் நம்மை சுற்றி இருப்பவர்களோ, நம்மிடம் " எத்தனையோ வருடங்கள் ஒன்றாக இருந்தோமே, ஒருவரை ஒருவர் அறிந்திருந்தோமே. ஒரு முறையாவது இயேசுவைப் பற்றி என்னிடம் கூறி இருந்ததால் நானும் இரட்சிக்கப்பட்டு இந்த நித்திய நரக அக்கினிக்கு தப்பி பரலோகம் வந்து இருப்பேனே " என்று கதறினால் நாம் அவர்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்? தயவு செய்து சிந்திப்போம், ஆண்டவர் இயேசுவின் விலைமதிப்பில்லா இரட்சிப்பை மற்றவர்களுக்கும் கொண்டு சேர்ப்போம். அவர்களும் தேவ ராஜ்யம் வந்தடைய ஆத்தும பாரத்தோடு, கண்ணீரோடு தேவனிடத்தில் கதறுவோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக அருகில் வந்து விட்டதே.
தேவனுடைய பரிசுத்த ஆவியானவரை பெற்று வேத வார்த்தையின் படி எருசலேமிலே (நம் குடும்பகளில்), யுதேயாவிலே (நாம் வசிக்கும் இடங்களிலே), சமாரியாவிலே (கர்த்தரை அறியாத மக்கள் நடுவிலே), மற்றும் உலகெங்கும் கிறிஸ்து இயேசுவின் உண்மையான சாட்சிகளாக வாழ்ந்து நம் இரட்சிப்பின் அதிபதி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உள்ளத்தை மகிழ்வித்து அவர் நமக்கருளிய இரட்சிப்புக்கு நன்றியறிதலுள்ளவர்களாக (கொலோ 3:15) இருப்போம்.
"தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்." (யாக்கோபு 5:20)
அதிசீக்கிரத்தில் மீண்டுமாய் பூமிக்கு வரப்போகும் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே இதை நாம் செய்து நிறைவேற்ற நமக்கு சகல கிருபைகளையும், தம் ஆவியானவரின் அளவற்ற அபிஷேகமும் அருளி, நமக்குள் இருந்து செயல்படுவாராக. நம்மை தாம் என்றும் வாசம் பண்ணும் பரிசுத்த ஆலயமாக முடிவு வரை காத்து தம் ராஜ்யம் கொண்டு சேர்ப்பாராக.
உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக ... (லூக்கா 2:14)