- Category: For your Spiritual Life
- Hits: 4240
அபிஷேகம் பெறாமல் பரலோகத்திற்கு செல்ல முடியாதா?
DR.பால் தினகரன் அவர்கள், இயேசு அழைக்கிறார் – ஜனவரி 2010 மாத இதழில் அளித்த பதில்.
- இயேசு அழைக்கிறார் மாதாந்திர பத்திரிகை, இப்பொழுது “இணையதள பத்திரிக்கை” யாக (Online Maganize) வெளிவருகிறது. நீங்கள் இயேசு அழைக்கிறார் - Online Magazine இணையதளத்தில் பதிவு செய்து படித்து பயன் பெற உங்களை அன்போடு அழைக்கிறேன். – நன்றி.
இரட்சிக்கப்பட்டு, உண்மையாய் ஜீவிக்கும் ஒருவர் அபிஷேகம் பெறாவிட்டால் பரலோகத்திற்கு செல்லமுடியுமா?
இயேசு சிலுவையில் தொங்கியபோது, அவரது பக்கத்தில் இரு கள்ளர்கள் அறையப்பட்டார்கள். அவர்களுள் ஒருவன் தன் வாழ்வின் கடைசி நிமிடத்தில், “ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்,” என்றான். உயிர் பிரியும் தருவாயில் மனந்திரும்பிய அவனைப் பார்த்து இயேசு, “இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்,” என்று வாக்கு கொடுக்கிறார் (லூக்கா 23:42,43). எனவே, தன் பாவத்தை விட்டு திரும்பி , இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக தன் இருதயத்தில் ஏற்றுக்கொள்ளும் ஒருவர், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பார்.
என்னுடைய தந்தை பரலோகத்தையும், அங்குள்ள ஆத்துமாக்களையும் பார்த்திருக்கிறார். “இந்த உலகில் வாழும்போது அந்த ஆத்துமாக்களுக்கு என்ன உருவம் இருந்ததோ, அதே உருவத்தில்தான் அவை பரலோகிலும் காட்சியளிக்கின்றன. ஆனால், அந்த ஆத்துமாக்களுக்கு, இவர இன்னார் என்ற அடையாளம் தெரியாது; அவை தமக்குள் கூடி பேசிக்கொள்வதும் இல்லை. அந்த ஆத்துமாக்களின் கண்கள் இயேசுவின் மேலேயே இருக்கின்றன. அதிசயப்படத்தக்க வகையில் ஒவ்வொரு குடும்பத்தை சேர்ந்த ஆத்துமாக்களும் ஒரு குழுவாக காணப்படுகின்றன. ஆனாலும் அந்த ஆத்துமாக்களுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை. அனைத்து ஆத்துமாக்களும் இயேசுவையே நோக்கி கொண்டிருக்கின்றன. அவை இருக்குமிடத்திற்கு சந்தோஷமும், வெளிச்சமும் இயேசுவிடமிருந்தே வருகின்றன. அந்த இடம் முழுமையும் இயேசுவின் பிரசன்னத்தால் நிறைந்திருக்கிறது. நீங்கள் பரலோகத்திற்கு சென்றால் தான் யாரெல்லாம் பரலோகத்தில் இருப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்கிறீர்களோ அந்த நபர் அங்கே இல்லாததையும், நீங்கள் முற்றிலும் எதிர்பார்த்திராதவர்கள் அங்கே இருப்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள முடியும்,” என்று என் தந்தை சொல்லியிருக்கிறார்.
ஆம், “நீ பரலோகத்திற்கு போக மாட்டாய்; நரகத்திற்கு தான் செல்வாய்,” என்று நாம் யாரைக் குறித்தும் தீர்ப்பு சொல்லக்கூடாது. (1 கொரி 4:5). அப்படி சொல்வதற்கு நாம் யார்? நம்முடைய இரத்தத்தை அந்த மக்களுக்காக நாம் சிந்தியிருக்கிறோமா? ஆண்டவர் இயேசு கிறிஸ்து தான் தம்முடைய இரத்தத்தை சிந்தியுள்ளார் (மத் 26:28, எபி 9:12). ஆகவே யார் பரலோகத்திற்கு செல்வது என்பதை தீர்மானிக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு. மனிதன் முகத்தை பார்க்கிறான். ஆனால், ஆண்டவரோ இருதயத்தை பார்க்கிறார் (1 சாமு 16:7).
ஆண்டவரை அறியாத அல்லது ஏற்றுகொள்ளாத ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும்போது, பிராணவாயு கொடுக்கப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் கூட அந்த மனிதரோடு இடைப்பட ஆண்டவரால் முடியும். அப்படிப்பட்ட நிலையில் உள்ள யாருக்காயினும் நீங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தால் உங்கள் ஜெபம் வீணாகப் போகாது.
சிலர், “பிரதர், என் அப்பா கடைசி வரை ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாமலே வாழ்ந்து, தீவிர சிகிச்சையில் இருக்கும் போது இறந்துவிட்டார். அவர் பரலோகத்திற்கு செல்ல மாட்டாரோ என்ற கவலை என்னை வாட்டுகிறது” என்று கூறுவார்கள். அவர் போகவே மாட்டார் என்று கூற இயலாது. அவருடைய மகனுடைய அல்லது மகளுடைய ஜெபத்தை கேட்டு , ஆண்டவர் ஒருவேளை அவரோடு இடைப்பட்டிருக்ககூடும். நம்முடைய கடமை யாரையும் சபிப்பது அல்ல; ஆத்துமாக்களுக்காக ஜெபிப்பதுதான். ஆத்துமாக்களை இரட்சிப்பது ஆண்டவருடைய வேலை. ஆம், ஆண்டவரின் இணையற்ற அன்பே ஒருவரை இரட்சிக்கமுடியும். எனவே ஒருவர் பரலோகத்தில் இருப்பாரா? நரகத்தில் இருப்பாரா என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்களை பற்றி கவலைப்படுங்கள். உங்களுக்கு அன்பான அவருக்காக ஜெபிக்க வேண்டிய கடமையை செய்தீர்களா என்று யோசித்துப் பாருங்கள். உங்கள் வாழ்கை நீதியுள்ளதாயிருந்தால், நீங்களும் பரலோகம் செல்லலாம். இயேசுவில் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று மட்டுமே ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால் நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் (அப் 16:31).
நமக்கு ஏன் அபிஷேகம் தேவை?
எனது தந்தை பரலோகத்தில் மூன்று நிலைகள் இருப்பதாக கூறியுள்ளார். 2 கொரி 12:3 – ல் பரதீசு என்ற இடத்தை குறித்து வாசிக்கிறோம். அது முதலாம் பரலோகம். ஆண்டவருடைய ராஜ்யத்தில் புதிதாய் பிறந்த கோடிக்கணக்கான மக்கள் பரதீசில் காணப்படுவார்கள். பரலோகத்தின் இரண்டாவது நிலையில், ஆண்டவருடைய ராஜ்யத்திற்காக எதையாவது செய்தவர்கள் இருப்பார்கள். மூன்றாம் பரலோகத்திலே தேவனுடைய ராஜ்யத்திற்காக தம்மையே தியாகம் செய்தவர்கள் இருப்பார்கள். பவுல், தாம் மூன்றாம் வானம் வரைக்கும் சென்றதாகவும். அங்கு பேசப்பட்ட மொழியை கேட்டதாகவும் எழுதியுள்ளார் (2 கொரி 12:2,3). மூன்று வானங்கள் உண்டு. இரட்சிக்கப்பட்டவர்கள் முதலாம் வானத்தில் இருப்பார்கள். ஆனால், ஆண்டவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள், மூன்றாம் வானத்திலே இருப்பார்கள். மகிமையிலே நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது போல அவர்கள் மகிமை அதிகமாய் இருக்கும் (1 கொரி 15:42).
மத்தேயு 25-ம் அதிகாரத்தில், இயேசு கிறிஸ்து ஓர் உவமையை கூறுகிறார். வெகுதூர பயணம் செல்லும் ஒரு ராஜா, தன்னுடைய ஊழியர்களுக்கு ஐந்து, இரண்டு, ஒன்று என்ற எண்ணிக்கையில் தாலந்துகளை கொடுக்கிறார். திரும்பி வந்த பிறகு, அந்த தாலந்துகளை கொண்டு அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை விசாரிக்கிறார். ஐந்து தாலந்தை வாங்கியவன் , “எஜமானே, நீர் கொடுத்த ஐந்து தாலந்துகளை கொண்டு நான் வேறு ஐந்து தாலந்தை சம்பாதித்தேன்” என்றான். உடனே ராஜா, “நல்லது உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்று கூறுகிறார். இரண்டு தாலந்தை பெற்றவன், தான் இன்னும் இரண்டு தாலந்தை சம்பாதித்ததாக கூறுகிறான். உடனே ராஜா, “நான் தந்த இரண்டு தாலந்துகளை நீ நன்றாக பயன்படுத்தி அவற்றை பெருக்கமடையச் செய்தாய். ஆகவே, கொஞ்சத்தில் உண்மையாயிருந்த உன்னை அநேகத்தின் மேல் அதிகாரியாக்குகிறேன்,” என்றார்.
தங்களுக்கு வழங்கப்பட்ட தாலந்துகளை பெருக்கிக்கொள்கிற மக்களை ஆண்டவர், இந்த உலகத்தில் அநேகத்தின் மீது அதிகாரியாக்குவததோடு , பரலோக ராஜ்யத்திலும் இடம் கொடுக்கிறார். ஒரு தாலந்தை பெற்ற மனிதன் செய்ததையும் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அவன் ராஜாவை நோக்கி, எஜமானே, நீர் கடினமான மனுஷன் என்று அறிவேன். ஆகவே, உம்முடைய தாலந்தை நான் புதைத்து வைத்தேன். நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவர் என்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவர் என்றும் அறிந்திருக்கிறேன், என்று கூறினான்.
அந்த ஒரு தாலந்து என்ன? அது தேவனுடைய தாலந்து என்று வேதம் கூறுகிறது. ராஜா அவனைப் பார்த்து என்ன கூறுகிறார்? “பொல்லாதவனும், சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவர் என்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவர் என்றும் நீ அறிந்திருந்தாயே, அப்படியானால், நீ என் பணத்தை காசுக்காரர்களிடம் கொடுத்திருக்கலாமே, நான் வந்து வட்டியோடு என் பணத்தை திருப்பிக் கொண்டிருப்பேனே” என்றார்.
அந்த ஒரு தாலந்து என்ன? அதுதான் இரட்சிப்பு! அநேகர் இதேபோலத்தான், நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன். அதை நான் புதைத்து வைக்கட்டும். அதைக்கொண்டு நான் எதுவும் செய்யக்கூடாது;இரட்சிக்கப்பட்டபின் நான் அபிஷேகம் பெற வேண்டிய அவசியம் இல்லை; தீர்க்கதரிசன அபிஷேகம் எனக்கு வேண்டாம்; நான் ஆண்டவரின் குரலை கேட்க வேண்டாம்.மற்றவர்களுக்கு நான் இரட்சிப்பை கொண்டு வரவேண்டாம். இந்த உலகத்தின் பிரச்சினைகளுக்கு ஆண்டவர் விரும்புகிறபடி, நான் தீர்வுகளை கண்டறிய வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு ‘இரட்சிப்பு, இரட்சிப்பு’ என்று மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றனர்.
தாலந்தை புதைத்து வைத்தவனை ஆண்டவர், அழுகையும் பற்கடிப்பும் உள்ள புறம்பான இருளிலே தூக்கிபோடச் சொல்லுகிறார் (மத் 25:30). அழுகையும் பற்கடிப்பும் எங்கே இருக்கும்? நரகத்தில் தான் இருக்கும். ஏனெனில், சோம்பேறிகளான அப்படிப்பட்டவர்கள் ஆண்டவரின் பார்வையில் பொல்லாதவர்கள். நாம் கவனமாக இருப்போம். எவனுக்கு அதிகம் கொடுக்கப்படுகிறதோ, அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும் (லூக்கா 12:48)
இயேசு, பிந்தினோர் முந்தினோராவார்கள்; முந்தினோர் பிந்தினோராவார்கள் என்று கூறியுள்ளார் (மத் 20:16; மாற்கு 10:31; லூக்கா 13:30). ஆண்டவர் இயேசு தம்முடைய பரிசுத்தவான்களை எடுத்துக்கொள்ள வரும்போது, விடுபட்டு போகிறது, அழுகையும் பற்கடிப்பும் நிறைந்த இடத்தில் தள்ளப்படுவதற்கு ஒப்பானது என்று கருதுகிறேன். ஆம், அழுகை, பற்கடிப்பு என்பது நரகமாகவோ, விடுபடுவதாகவோ இருக்கலாம். அப்படிப்பட்ட மக்கள், இவ்வுலகத்தில் அந்திகிறிஸ்துவின் நாட்களில் உபத்திரவத்தை அனுபவிக்கும்படி ஆண்டவரால் விடப்படுவர். அவர்கள் உலகத்திலே உபத்திரவத்தின் வழியாய் கடந்து செல்வார்கள்.
ஆண்டவர் உங்களை இரட்சித்துவிட்டார் என்று சோம்பலாக இருந்துவிடாதீர்கள். இரட்சிப்பு மட்டுமே உங்களை பரலோகத்திற்கு கொண்டு சென்று விடும் என்று யாரவது போதித்தால் , அதை பின்பற்றாதிருங்கள். யாருக்கு அதிகம் கொடுக்கப்படுகிறதோ, அவர்களிடம் அதிகம் கேட்கப்படும். எனவே ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
“இயேசு அவனுக்கு பிரதியுத்திரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்றார்.” (யோவான் 3:3)
வரங்களை பெற்றுகொள்ளுங்கள். வரங்களை செயல்படுத்தி, ஆண்டவருடைய சத்தத்தை தேசங்களுக்கு கொண்டு செல்லுங்கள். அதைத்தான் ஆண்டவர் உங்களிடம் எதிர்பார்க்கிறார். ஐந்து தாலந்து உள்ளவன் இன்னும் ஐந்து தாலந்தையும், இரண்டு தாலந்து உள்ளவன் இன்னும் இரண்டு தாலந்தையும் சம்பாதித்தான். தாலந்தை புதைத்து வைத்தவனோ புறம்பான இருளிலே தள்ளப்பட்டான். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். எனவே ஆண்டவரிடம் கேளுங்கள். அவர் பரிசுத்த ஆவியினால் உங்களை நிரப்புவார்; அநேகத்தின் மீது அதிகாரியாக வைப்பார்.