
இன்றைய பரிசுத்த வேத வசனம்
தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொண்டு விசுவாசத்தோடு ஜெபித்து கிறிஸ்து இயேசுவுக்குள் ஜெயங்கொள்ளுவோம்:
ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். (மத்தேயு 1:23)You may check
Meditation on the Word of God...Food for your soul: Meditation >> Lets Meditate
தேவ நீதியை காண்பிக்கும் பொருட்டு
(கிறிஸ்துமஸ் 2025 பரிசுத்த வேத தியானம்)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
டிசம்பர் 2025
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
இரட்சிப்பின் அதிபதி, உலக ரட்சகர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இணையில்லாத திருநாமத்தில் உங்களுக்கு அன்பின் கிறிஸ்துமஸ் நன்னாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பண்டிகை கால தேவ செய்தியின் ஆதார வசனம்:
(ரோமர் 3:25-26) தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், (26) கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.
இந்த பரிசுத்த வேத வசனத்தின் சத்தியத்தை நாம் முழுமையாக விளங்கிக்கொள்வதற்கு பரிசுத்த வேதத்திலிருந்து இதன் பின்னணியை நாம் சற்று ஞாபகப்படுத்திக்கொள்வோம்.
தேவனாகிய கர்த்தர் இந்த பூமியிலே முதல் மனிதனை தமது சாயலாக படைத்து, ஆணும் பெண்ணுமாகப் படைத்து, இந்த பூமியிலே நீங்கள் பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள், இந்த பூமியின் உயிரினங்கள் எல்லாவற்றையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று ஆசீர்வதித்தார்.
(ஆதியாகமம் 1:27) தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். (28) பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
மனிதனும் பலுகிப் பெருக, மனித குலம் இந்த பூமியிலே பெருகியது. மனித குலத்தோடு அவர்கள் அக்கிரமங்களும், பாவங்களும் பெருகிற்று. அதன் விளைவாக மனிதனை படைத்த தேவனாகிய கர்த்தர் வருத்தப்பட்டு, அவருடைய இருதயம் விசனம் அடைந்தது.
(ஆதியாகமம் 6:5-6) மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, (6) தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
(ஆதியாகமம் 6:7) அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.
இதன் விளைவாக, அந்த காலத்தில் வாழ்ந்த நீதிமானாகிய நோவாவும் அவர் குடும்பத்தினரும் தவிர பூமியிலே உயிருள்ள ஜீவன்கள் அனைத்தும், மனிதர்கள், மிருக ஜீவன்கள் யாவும் பெருகிப் போயிருந்த மனிதனுடைய அக்கிரமத்தினாலும் பாவத்தினாலும் நாற்பது நாள் இரவும் பகலும் இடைவிடாமல் பெய்த மழையினால் மிகுந்த பேரழிவு பெருவெள்ளம் உண்டாகி சகலமும் அழிக்கப்பட்டு போனது. கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் இதை நமக்கு விளக்கிச் சொல்கின்றன:
(click here to expand)
(ஆதியாகமம் 7:4) இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடிக்கு நிக்கிரகம் பண்ணுவேன் என்றார்.
(ஆதியாகமம் 7:21-23) அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன. (22) வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின. (23) மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.
தேவ கட்டளையின்படியே நீதிமானாகிய நோவா கட்டி எழுப்பின பேழைக்குள் நோவாவும், அவர் குடும்பத்தினருமாகிய சிலராகிய எட்டு பேரும், தெரிந்தெடுக்கப்பட்ட உயிரினங்களும் தேவனாகிய கர்த்தரால் அனுப்பப்பட்டு அந்தப் பேரழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டன.
நாற்பது நாள் இடைவிடாமல் பெய்த மழையின் வெள்ளம் நூற்றைம்பது நாளுக்கு பிறகு வடிந்தது
(click here to expand)
(ஆதியாகமம் 8:15-20) அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:(16) நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள். (17) உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.(18) அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள்.(19) பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.(20) அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.
இதைத் தொடர்ந்து,
(ஆதியாகமம் 8:21) சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.
(ஆதியாகமம் 8:22) பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.
தம் வார்த்தையில் உண்மையுள்ள தேவனாகிய கர்த்தர் அன்றிலிருந்து இன்று வரை மனித குலத்தின் பாவத்தின் நிமித்தம் அக்கிரமத்தின் நிமித்தம் உலகத்திலே மனித குலத்தையோ, மற்ற எல்லா உயிரினங்களையோ முற்றிலும் அழித்துப்போடாமல் நீடிய பொறுமையோடு இன்று வரை பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறார்.
நோவாவின் காலத்தை விட கொடிய கற்பனைக்கும் எட்டாத மனிதனின் பாவங்களை, அக்கிரமங்களை, மீறுதல்களை நாமே நம் கண் முன்னே தினமும் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். அப்படி இருந்தும் தேவனாகிய கர்த்தருடைய பொறுமைக்கு காரணம் என்ன?
மனிதனைப் படைத்த முதல் நாளிலிருந்து நோவாவின் காலத்து பெருவெள்ள பேரழிவு வரைக்குமே கூட தேவனாகிய கர்த்தர் உடனடியாக மனிதனை, உயிரினங்களை அழித்துவிடவில்லை. பூமியிலே அக்கிரமம் பெருகினதைக் கண்ட பொழுது, மனிதனுடைய இருதயத்தின் நினைவுகள் எல்லாம் எப்பொழுதுமே பொல்லாதாய் இருந்ததினால் கர்த்தர் தான் மனிதனைப் படைத்ததற்காக வேதனைப்பட்டார், விசனப்பட்டார். நீடிய பொறுமையோடு கர்த்தர் காத்துக்கொண்டிருந்தார். அதன் பிறகே மனித குலம், மற்ற உயிரினங்கள் நிக்கிரகம் பண்ணப்பட்டது.
(1 பேதுரு 3:20) அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
நோவாவின் கால பெருவெள்ள பேரழிவுக்கு பிறகு பெருவெள்ளம் பூமியிலிருந்து வடிந்து நோவாவின் குடும்பத்திலிருந்து மீண்டும் மனித குலம் பெருகினது.
அன்று முதல், தேவனுடைய தாசனாகிய மோசேயின் காலத்தில் இஸ்ரவேல் மக்கள் மூலமாக தெய்வமாகிய கர்த்தரை நம்பி விசுவாசிக்கிற மற்றும் நம்பாத உலகத்திற்கு நியாயப்பிரமாணத்தை தந்து (ரோமர் 2:14-15), அதைத் தொடர்ந்து பிதாவாகிய தேவனுடைய ஒரே பேரான சொந்த மகனாகிய கிறிஸ்து இயேசுவை சிலுவையிலே கிருபாதார பலியாக தந்து முழு மனித குல ஆத்தும மீட்பின் திட்டத்தை நிறைவேற்றி இன்று வரையும் தேவன் நம்முடைய பாவத்தை பொறுத்துக் கொண்டிருப்பதின் மூலம் தம்முடைய நீதியை விளங்க பண்ணுகிறார். முற்காலத்திலும், இப்பொழுது வரை பிற்காலத்திலும் தம்முடைய நீதியை விளங்க பண்ணுகிறார், காண்பித்து இருக்கிறார், தாம் ஒருவரே நீதியுள்ள தேவனாகிய கர்த்தர்.
(ரோமர் 8:3) அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
(2 கொரிந்தியர் 5:21) நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
(சங்கீதம் 103:10) அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.
(2 பேதுரு 3:9) தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
(2 பேதுரு 3:15) மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; ...
கிருபாதார பலி: தேவகுமாரன் கிறிஸ்து இயேசு
பரிசுத்த வேதத்தின் பழைய ஏற்பாட்டில் தேவனாகிய கர்த்தர் பாவப் பரிகாரம் அல்லது பாவ நிவாரணம், சுத்திகரிப்பு, அபிஷேகம் பண்ணப்படுதல், பண்டிகைகள், பிறப்பு, இறப்பு மற்றும் இன்னும் பல காரணங்களுக்காக பலவிதமான பலிகளையும், பலி செலுத்தும் முறைமைகளையும் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்திருந்தார்.
ஆனால் பரிசுத்த வேதத்தின் புதிய ஏற்பாட்டில் அதாவது புதிய உடன்படிக்கையின்படி பிதாவாகிய தேவன் ஒட்டுமொத்த மனித குலத்துக்காகவும் எந்த வித்தியாசமும் பாராமல், தம்முடைய ஒரே பேரான சொந்த பிள்ளை கிறிஸ்து இயேசுவை, நம்பி விசுவாசித்து அவரை தன் சொந்த இரட்சகராக, மீட்பராக, கர்த்தராக ஏற்றுக்கொள்ளுகிற ஈடு இணையில்லாத அந்த ஆத்தும மீட்பின் திட்டத்திற்காக, இரட்சிப்பின் திட்டத்திற்காக, பிதாவாகிய தேவன் பழைய ஏற்பாட்டின் பலிகளை போல இல்லாமல் கிறிஸ்து இயேசுவை கிருபாதார பலியாக ஏற்படுத்தினார்.
இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை (எபிரெயர் 9:22), ஆத்துமாவிற்காக பாவ நிவர்த்தி செய்கிறது இரத்தமே (லேவியராகமம் 17:11) முழு உலகத்திற்கும், மனித குலம் முழுவதற்கும் ஆத்ம மீட்பிற்காக பாவ நிவர்த்தி செய்ய வேண்டுமானால் பாவமே இல்லாத பரிசுத்த இரத்தம் தேவை. பிறப்பு முதல் இறப்பு வரை பாவமே இல்லாத பரிசுத்த இரத்தம் தேவை. இந்த தகுதி மனிதனாய் இந்த பூமிக்கு வந்த இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே உண்டு. அவருடைய பிறப்பு பரிசுத்தம், அவருடைய முப்பத்து மூன்றரை வருட மனித வாழ்க்கை முழுவதும் பரிசுத்தம், சிலுவையில் அவருடைய மரணம் வரை முற்றும் முடிய பரிசுத்தம். ஆகவே அவருடைய இரத்தத்திற்கு மாத்திரமே ஒட்டுமொத்த மனித குலம் முழுவதற்கும் பாவ நிவர்த்தி செய்யும் வல்லமை உண்டு, தகுதி உண்டு (கொலோசெயர் 1:14). எனவே இயேசு கிறிஸ்துவே பிதாவாகிய தேவன் ஏற்படுத்தின பலி, கிருபாதார பலி (1 யோவான் 2:2).
அப்படியானால் கிருபாதார பலி என்றால் என்ன?
பரிசுத்த வேதத்தின் பழைய ஏற்பாட்டின்படி எந்த காரணத்திற்காக பலி செலுத்தினாலும் அது ஒரு கிரியை, ஒரு செயல். உதாரணமாக ஒரு மனிதன் செய்த பாவத்தின் காரணமாக அந்த பாவத்துக்கு பரிகாரம் செய்ய அல்லது பாவ நிவாரணமாக பலி செலுத்தும் போது, நியாயபிரமாண சட்ட திட்டங்களின்படி ஒரு மிருகத்தையோ பறவையையோ கொன்று அதன் ரத்தத்தை சிந்தி அந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அது தேவனாகிய கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படும் போது அந்த மனிதனுக்கு அந்த பாவம் மன்னிக்கப்படும். அதாவது பலி செலுத்துதல் என்கிற இந்த கிரியையை, இந்த செயலை செய்யும் போது மட்டுமே, அந்த செயலை செய்கிற மனிதனுக்கே அந்த பாவ பரிகாரம் உண்டாகும், பாவம் பரிகரிக்கப்படும். அதாவது கிரியை, அந்த செயல் என்பது அங்கே கட்டாயம். ஒரு மிருகத்தை கொன்று அதன் ரத்தத்தை சிந்தி பாவ மன்னிப்பை தேடுகிற அந்த செயல் கட்டாயம். அந்த செயலை செய்தால்தான் பாவம் அந்த மனிதனுக்கு மன்னிக்கப்படும். கிரியை இல்லாமல் பாவ நிவர்த்தி உண்டாகாது.
ஆனால் பிதாவாகிய தேவன் தம்முடைய ஒரே பேரான சொந்த பிள்ளையை, இயேசு கிறிஸ்துவை கிருபாதார பலியாக ஏற்படுத்தினதினால், நம்முடைய கிரியைக்கு இங்கு இடம் இல்லை. மாறாக தேவ கிருபையின் நிமித்தம் (எபேசியர் 2:8) கிறிஸ்து இயேசு கிருபாதார பலியாக சிலுவையிலே என் பாவத்தை தன் மீது சுமந்து கொண்டு, நான் அனுபவிக்க வேண்டிய என் பாவத்திற்கான தண்டனையை எனக்காக சிலுவையிலே தன் மீது ஏற்றுக்கொண்டார் என்று விசுவாசித்தாலே கிருபாதார பலியின் பலன் விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் உண்டாகும். பிதாவாகிய தேவன் நீதியுள்ளவர் என்பதையும், அவருடைய அளவற்ற கிருபையின் மகிமையை, இணையில்லாத தேவ அன்பின் மகத்துவத்தையுமே (யோவான் 3:16) இது உலக மனிதருக்கு காட்டுகிறது.
எனக்காக பலி செலுத்துகிற கிரியைகள் எதையும் நான் செய்யாமல் எனக்காக சிலுவையில் கிருபாதார பலியாக பலியான இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தாலே அந்த கிருபாதார பலியின் பலன், பாவ மன்னிப்பை, இரட்சிப்பை நான் பெற்றுக்கொள்கிறேன்.
செய்த பாவத்தில் இருந்து மன்னிப்பை பெற்று கொள்ளும்படி, பாவ நிவர்த்தி எனக்கு உண்டாகும்படி பலி செலுத்துதல் என்கிற ஒரு செயலை செய்தேன், அதனால் பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொண்டேன் என்றில்லாமல் நான் எதையும் செய்யவில்லை, எனக்காக சிலுவையிலே பலியான இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தேன். அதனால் பாவ மன்னிப்பை, இரட்சிப்பை பெற்றுக் கொண்டேன், நீதிமானாக்கப்பட்டேன் என்கிறதே கிருபாதார பலியின் மேன்மை. பிதாவாகிய தேவனுக்கே எந்நாளும் மகிமை உண்டாவதாக.
(யோவான் 3:16) தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
(ரோமர் 3:21-24) இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. (22) அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. (23) எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, (24) இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
பிதாவாகிய தேவனுடைய சித்தத்துக்கு தம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து (கலாத்தியர் 1:4) கிருபாதார பலியாக சிலுவையிலே பலியாகும்படிக்கு இந்த பூமியிலே நம்மைப்போல இரத்தமும் சதையும் உடைய மனிதனாக வந்து பிறந்த கிறிஸ்து இயேசுவுக்கு நேற்றும் இன்றும் என்றுமான சதா காலங்களிலும் துதி உண்டாவதாக. ஸ்தோத்திரம் உண்டாவதாக. ஆமென்.
இப்படி கிருபையினால் பாவம் மன்னிக்கப்பட்டு இரட்சிப்பைப் பெற்று, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவி சுத்திகரிக்கப்பட்டு, நீதிமானாக்கப்பட்ட பின்பு, அதே பழைய பாவ வாழ்க்கையை தொடரவும் முடியாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதை ஏற்றுக்கொள்வதும் இல்லை. காரணம், இரட்சிக்கப்பட்ட பின்பும் பழைய பாவ வாழ்க்கை தொடருமானால், அவருடைய வருகையின்போது அப்படிப்பட்ட பாவ கிரியைகளின் வாழ்க்கைக்கு தண்டனை தீர்ப்பே பலனாக கிடைக்கும் என்பதால் தான். மாறாக, அவர் சொல்வதெல்லாம்:
(யோவான் 8:11) ...நீ போ , இனி பாவஞ்செய்யாதே
(யோவான் 5:14) இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார் .
அவர் பூமியில் வந்து பிறந்ததை பண்டிகையாக கொண்டாடுகிற இந்த காலத்தில் அவருக்கு நன்றி செலுத்தி கிருபாதார பலியின் சத்தியத்தை நம் இருதயத்தில் நிறைத்துக்கொண்டு அவருக்கு என்றைக்கும் நன்றி உள்ளவர்களாய் இருப்போம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளை கைக்கொண்டு, ஒவ்வொரு நாளும் இன்னும் பரிசுத்தமுள்ளவர்களாகி, இன்னும் நீதியின் கிரியைகளை செய்து, அவர் வழியில் நடந்து நமக்கு அவர் தந்திருக்கிற இந்த இரட்சிப்பை முடிவு பரியந்தம் காத்துக்கொண்டு அவருடைய இரண்டாம் வருகைக்கு அனுதினமும் ஆயத்தமாவோம். ஆயத்தமாயிருப்போம். நாம் பெற்றிருக்கிற பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருந்து முடிவு வரை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் நம்மை நிலைத்திருக்கச் செய்து தேவ ராஜ்யம் கொண்டு சேர்ப்பார். ஆமென்.
பிதாவாகிய தேவன் தாமே நீதிபரர். அவரே நீதியுள்ளவர்.
(ரோமர் 3:28) ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.
(1 யோவான் 3:7) பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.
உலக மக்கள் யாவருக்காகவும் சிலுவையிலே தம்மை பலியாக்கி, பாவப்பரிகாரம் செய்த இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை பெறவும், அந்த இரட்சிப்பின் முடிவிலே நித்திய ஜீவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு என்றும் வாழும் அழிவில்லாத வாழ்வைப் பெறவும் நீங்கள் விரும்பினால், உங்கள் மனதின் ஆழத்திலிருந்து உண்மையாய் கீழ்கண்டவாறு ஜெபியுங்கள்:
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உலக ரட்சகரே, எனக்காக சிலுவையிலே என் பாவங்களை எல்லாம் தம் மீது சுமந்து கொண்டு நான் அனுபவிக்க வேண்டிய தண்டனையை சிலுவையிலே நீர் எனக்காக அனுபவித்தீர். என் முழு இருதயத்தோடு, என் முழு மனதோடு இதை நான் நம்புகிறேன், விசுவாசிக்கிறேன். பரிசுத்த தெய்வமே, உமக்கு முன்பாக நான் பாவி, உமக்கு விரோதமாக நான் பாவம் செய்தேன் என்று என்னை உம்முடைய திருப்பாதத்தில் தாழ்த்தி அறிக்கை செய்கிறேன். என் பாவங்கள் எல்லாவற்றையும் கிருபையாய் மன்னித்து உம்முடைய இரத்தத்தினாலே என் சகல பாவங்களையும் நீக்கி என்னை கழுவி சுத்திகரித்தருளும்.
என் ஆவி, ஆத்துமா, சரீரத்தை, என் வாழ்க்கை முழுவதையும் உம்முடைய கைகளில் ஒப்புக் கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவே, என் ஆண்டவரே உம்மையே என் சொந்த ரட்சகராக, மீட்பராக, என் ஒரே தெய்வமாக முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறேன். இன்று முதல் என்னையும் என் வாழ்க்கையையும் நீரே நடத்திச் செல்லும். உம்முடைய இரட்சிப்புக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த ஜெபத்தை நீர் கேட்டு எனக்கு பதில் தந்து என்னை இரட்சித்தீர் என்று விசுவாசிக்கிறேன். என் இரட்சிப்பை நன்றியோடு பெற்றுக்கொண்டேன் இயேசுவே. முடிவு வரை உம்மில் நிலைத்திருந்து என் இரட்சிப்பை காத்துக்கொள்ள, உம்முடைய பரலோகம் வந்து சேர எனக்கு கிருபை செய்யும். இயேசு கிறிஸ்து என்னும் இணையில்லாத உம்முடைய நாமத்தினால் ஜெபிக்கிறேன். ஆமென்.
கர்த்தரும், ரட்சகரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்து தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. முடிவு வரை உங்களை தம் பிள்ளையாய் காத்து நடத்துவாராக. ஆமென்.
Thou art my King, O God. (Ps 44:4)
Pray

இஸ்ரவேலின் சமாதானத்துக்காக, பாதுகாப்பிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்...
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:6-7)
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். (சங்கீதம் 48:2)
...எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். (மத்தேயு 5:35)
