IST (GMT+5.5)

    பரிசுத்த  வேத தியானம்Sharon Rose Ministries

    (Let's Meditate Word of God)

    தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


    அஸ்திபாரம்


    கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

     போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. (1 கொரிந்தியர் 3:11)

    பரிசுத்த வேதத்திலே மேற்கண்ட வசனத்தில் "அஸ்திபாரம்" என்ற வார்த்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை, போதனைகளை மட்டுமல்ல அவரையே குறிக்கிறது.

    நாம் வாழுகிற இந்த உலக வாழ்க்கைக்கும், மரணத்தின் மூலமாக அல்லது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் மூலமாக நாம் பிரவேசித்து என்றென்றும் வாழப்போகும் ஆவிக்குரிய நித்திய வாழ்க்கைக்கும் அஸ்திபாரம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே.

    இந்த அஸ்திபாரம் - ஆண்டவர் இயேசு கிறிஸ்து - தேவனால் நமக்கு அருளப்பட்டிருக்கிறார் என்பதும், இது உறுதியான அஸ்திபாரம் என்றும் பரிசுத்த வேதம் நமக்கு விளக்கி சொல்கிறது:

    ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; ..... (2 தீமோத்தேயு 2:19)

    இந்த அஸ்திபாரத்தைக் குறித்த மேலும் சில பரிசுத்த வேத வசனங்கள்:

    பழைய ஏற்பாட்டிலே

    ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான். (ஏசாயா 28:16)

    மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டிலும் இது சொல்லப்பட்டிருக்கிறது:

    அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது. (1 பேதுரு 2:6)

    ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; ...... (1 பேதுரு 2:7)

    இந்த உலக வாழ்க்கையில் நம் பாவ சாபம் தீர வழி,  நாம் வாழ வேண்டிய விதம், மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கையை குறித்த நம் நம்பிக்கை என்ன, மரணத்தை ஜெயித்து என்றென்றும் வாழ நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வது எப்படி - என இந்த கேள்விகள் அனைத்திற்கும் ஒரே பதில் - கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே. அவர் காட்டிய வழியில், அவருடைய வார்த்தையாகிய பரிசுத்த வேதம் போதிக்கும் வழியில், அவர் போதனைகளை உண்மையும் உத்தமமுமாய் முடிவு வரை கைக்கொண்டு நடக்கும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நம் வாழ்க்கையின் அஸ்திபாரமாக இருக்கிறார். அப்பொழுது நாம், இந்த உலக வாழ்க்கையின் சகல போராட்டங்களையும், சாத்தானின் சகல தீங்குகளையும் ஜெயித்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுடனே கூட அவருடைய நித்திய உலககிற்குள் சென்று சேருவோம்.

    இந்த அஸ்திபாரம் என்ற வார்த்தையை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே பரிசுத்த வேதத்தில் மற்றுமொரு வார்த்தையைக் கொண்டு நமக்கு விளக்கி சொல்கிறார், அது: கன்மலை (Rock)

    ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. (மத்தேயு 7:24-25)

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அஸ்திபாரமாக கொள்ளாதவர்களின் வாழ்க்கையைக் குறித்தும் அவரே விளக்கி சொல்லும் சத்தியம்:

    நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். (மத்தேயு 7:26-27)

    .....கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று; (1 பேதுரு 2:7)

    அவர்கள் திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள். (1 பேதுரு 2:8)

    ஏனெனில்,

    ...உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய (இயேசு கிறிஸ்துவின்) நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை .... (அப்போஸ்தலர் 4:11-12)

    போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. (1 கொரிந்தியர் 3:11)


    நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)

    Print Email