இன்றைய பரிசுத்த வேத வசனம்
2019 - வாக்குத்தத்த செய்தி
புத்தாண்டு தேவ செய்தி - ஜனவரி 2019 (New year Message - January 2019)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கர்த்தர் வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று, அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் நன்றியோடு துதித்து இந்த புதிய ஆண்டை ஆரம்பிப்போம். (சங்கீதம் 107:15-16) இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்! |
சாரோனின் ரோஜா ஊழியங்களுக்காக இந்த புதிய வருடத்தில் தேவனாகிய கர்த்தர் தந்திருக்கிற அவருடைய பரிசுத்த வேத வாக்குத்தத்தம்:
(ஏசாயா 45:4-5) வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன். நானே கர்த்தர், வேறொருவர் இல்லை; என்னைத்தவிரத் தேவன் இல்லை.
சத்துருவினால் உண்டான பெரும் தடைகளை, ஒருவராலும் எளிதில் நீக்க முடியாத பலத்த தடைகளை எல்லாம் நீக்கி, நமக்குரிய தேவ கிருபைகளை - அது நம் ஆவிக்குரிய மற்றும் இந்த உலக வாழ்வுக்குரிய நன்மைகள், ஆசீர்வாதங்கள், ஜெயம், விடுதலை, சமாதானம் ஆகிய பொக்கிஷங்களை, புதையல்களை தேவனாகிய கர்த்தர் இந்த வருடத்தில் நமக்கு தந்தருளுவார். ஒரு வேளை, இப்படிப்பட்ட கிருபைகளுக்காக இந்த தடைகளை தாண்டி செல்ல முடியாமல் வெகு காலம் நீங்கள் காத்திருந்தாலும், இந்த வருடத்தில் தேவன் உங்களுக்கு அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களை, ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களை தந்தருளுவார்.
நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட புதையல்களை குறித்து பரிசுத்த வேதத்திலும் சில குறிப்புகள் காணப்படுகிறது (எரேமியா 41:8). மேலும், கோரேசு அரசனுக்கு யுத்தத்தில் துணையாக நின்று தேவனாகிய கர்த்தர் எதிரி நாடுகளின் பொக்கிஷங்களை, புதையல்களை கொள்ளையாக கொடுத்தார் என்று வேத அறிஞர்கள் கூறுகிறார்கள். மட்டுமல்ல இஸ்ரவேல் தேசத்தின் வரலாற்றில், இந்த வார்த்தைகளை தம்முடைய தீர்க்கதரிசி மூலமாக தேவன் அருளிய கால கட்டங்களில், பாபிலோனிய சிறைகள் இப்படிப்பட்ட கடுமையான வெண்கல கதவுகளோடும், பெரிய தாழ்ப்பாள்களோடும் இருந்ததாக வேத அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு விட்டால், மீட்போ, விடுதலையோ அவ்வளவு எளிதான காரியமல்ல. அநேகமாக, அந்த சிறைகளிலேயே வாழ்வு முடிந்து விடும். இன்று நாமும், நமக்குரிய மேற்சொன்ன தேவ கிருபைகளும் கூட இப்படிப்பட்ட சிறையிருப்பிலிருந்து மீட்கப்பட்டு, விடுவிக்கப்பட்டு நமக்கு கொடுக்கப்பட வழியில்லாத நிலையில், கர்த்தர் அருளும் இந்த வாக்குத்தத்தை பற்றிக்கொண்டு விசுவாசத்தோடு ஜெபிப்போம். அப்பொழுது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நமக்காக வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து நம்மை, நம் வாழ்வை மீட்டு நமக்குரிய பொக்கிஷங்கள், புதையல்களாகிய , சகல கிருபைகளையும் நமக்கு அருளி செய்வார்.
நாம் செய்ய வேண்டியது, அவரிடத்தில் திரும்ப வேண்டும், அவருடைய வழிகளுக்கு திரும்பவேண்டும். கடந்து வந்த கடினமான பாதைகளால், பட்ட கஷ்டங்களால், சத்துருவினால் உண்டான பாடுகளால், இழப்புகளால் நாம் ஒருவேளை சோர்ந்து, நம்பிக்கை இழந்து, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விட்டு விலகிப் போய் இருக்கலாம். ஆனால், இன்று அவரிடம் திரும்புவோம். அவருடைய வழிகளுக்கு திரும்புவோம். காரணம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே இதை செய்ய முடியும் என்பதை ஏசாயா 45 -ம் அதிகாரம் முழுவதையும் நாம் படிக்கும் போது அறிந்து கொள்ள முடியும். பரிசுத்த வேதம் போதிக்கிறது:
(சகரியா 9:12) நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.
(சங்கீதம் 31:4) அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண்.
(சங்கீதம் 28:8) கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.
(சங்கீதம் 43:2) என் அரணாகிய தேவன் நீர்; ...
(நீதிமொழிகள் 10:29) கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.
எனவே, தடைகளை நீக்குகிற மீட்பர், நம்மை விடுவிக்கிற நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் முன்னே செல்வதால், நன்றியோடு, நம்பிக்கையோடு நாம் அவர் வழி செல்வோம். அவராலே வெல்வோம். வாழ்ந்திருப்போம்.
(மீகா 2:13) தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.
(2 நாளாகமம் 6:4) ...இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.
தேவனாகிய கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.
Thou art my King, O God. (Ps 44:4)
Pray
இஸ்ரவேலின் சமாதானத்துக்காக, பாதுகாப்பிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்...
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:6-7)
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். (சங்கீதம் 48:2)
...எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். (மத்தேயு 5:35)