இன்றைய பரிசுத்த வேத வசனம்
2018 - வாக்குத்தத்த செய்தி
புத்தாண்டு தேவ செய்தி - ஜனவரி 2018 (New year Message - January 2018)
தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
சாரோனின் ரோஜா ஊழியங்கள் மூலமாக இந்த புதிய வருடத்திற்காக தேவனாகிய கர்த்தர் தந்திருக்கிற அவருடைய பரிசுத்த வேத வாக்குத்தத்தம்:
சங்கீதம் 50:2, 7 பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார். ... நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்.
இந்த தேவ வாக்குத்தத்த செய்தியை தம்முடைய கிருபையின் ஐசுவரியத்தினால் அருளிச் செய்த பிதாவாகிய தேவனுக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக சகல துதி கன மகிமை யாவையும் செலுத்துகிறேன். அன்பின் கர்த்தருடைய ஆவியானவருக்கு கோடான கோடி நன்றியை ஏறெடுக்கிறேன்.
சீயோன் அல்லது சீயோன் மலையைக்குறித்து பரிசுத்த வேதம் நமக்கு போதிக்கும் சத்தியத்தை அறிந்து கொள்ளும் முன்பாக இஸ்ரவேல் மக்களின் விடுதலை பயணத்தின் பல அம்சங்களை குறித்து, இந்த பயணத்தின் ஒரு நிலையாகிய சீனாய் மலையை குறித்தும், அதைத் தொடர்ந்து சீயோன் மலையைக் குறித்தும், அவை நம் கிறிஸ்தவ வாழ்வில் எவற்றை குறிக்கிறது என்பதையும் சற்றே தியானிப்போம்.
எகிப்திலே அடிமைகளாய் வாழ்ந்து வந்த இஸ்ரவேல் மக்களின் பாடுகளை கண்ட , பெருமூச்சை கேட்ட தேவன் அவர்களை அந்த அடிமைத்தன நிலையிலிருந்து விடுதலையாக்க, அவர்களை எகிப்திலிருந்து தம்முடைய தாசனாகிய மோசேயைக் கொண்டு பலத்த அதிசய, அற்புதங்களை செய்து, எகிப்தின் மீதும், அதன் அரசன் பார்வோன் மீதும் பத்து வாதைகளை வரப்பண்ணி எகிப்தின் தேவர்கள் என்று சொல்லப்பட்டவைகளின் மீது தம் நீயாத்தீர்ப்பை செலுத்தி, இஸ்ரவேல் மக்களை விடுதலையாக்கி, எகிப்திலிருந்து வெளியே அழைத்துக் கொண்டு வந்து அவர்களுக்கென தேவன் தாமே வாக்குபண்ணின பாலும் தேனும் ஓடுகிற ஆசீர்வாதத்திற்குரிய கானான் தேசத்தை நோக்கி அற்புதமாய், மகிமையாய் தேவன் நடத்தி செல்லுகிற பரிசுத்த வேத உண்மையை உங்கள் நினைவிலே கொண்டு வாருங்கள். இதற்கு உதவியாய் கீழ்காணும் பரிசுத்த வேத பகுதிகளை வாசித்துப் பாருங்கள்.
யாத்திராகமம் 3 முதல் 13-ஆம் அதிகாரம் வரை
இஸ்ரவேல் மக்களின் இந்த விடுதலை பயணத்தின் ஆரம்பம் முதற்கொண்டு பல காரியங்களை செய்ய தேவனாகிய கர்த்தர் தாமே கட்டளையிடுகிறார். அவற்றில், எகிப்தில் இருந்து புறப்படும் போது எப்படி புறப்பட வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் தேவன் தாமே உரைப்பதையும் கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் நமக்கு விளக்குகின்றன. அவை:
(யாத்திராகமம் 11:1) அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரப்பண்ணுவேன்; அதற்குப்பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போகவிடுவான்; சமூலமாய் உங்களைப் போகவிடுவதும் அல்லாமல், உங்களை இவ்விடத்திலிருந்து துரத்தியும் விடுவான்.
(யாத்திராகமம் 12:1-10) - கர்த்தருடைய பஸ்காவை ஆசரிக்க வேண்டும் என்ற தேவனாகிய கர்த்தருடைய கட்டளை.
(யாத்திராகமம் 12:1-11) - கர்த்தருடைய பஸ்காவை எப்படி ஆசரிக்க வேண்டும் என்று அவரே போதிக்கிறார்.
இந்த பஸ்கா பலி (Pass over) என்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம் பரிசுத்த இரத்தத்தை சிலுவையில் சிந்தி ஏற்படுத்தின புதிய உடன்படிக்கை அல்லது புதிய ஏற்பாடுக்கு முந்தின பழைய ஏற்பாடும் பழைய உடன்படிக்கையுமாய் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், "உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்க வெளிப்பட்ட தேவ ஆட்டிக்குட்டி" (யோவான் 1: 29-37) இயேசு கிறிஸ்துவுக்கு, அவருடைய இரத்தம் சிந்துதலுக்கு நிழலாக, முன்னடையாளமாக இருக்கிறது.
அப்படியே இந்த காரியம் நம் வாழ்வில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக, மீட்பராக, கர்த்தராக, ஒரே உண்மை தெய்வமாக ஏற்றுக் கொண்டு பழைய பாவ, சாப, இருளின், பிசாசின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, ஆத்தும இரட்சிப்பின் ஆரம்ப நிலையை அடைவதைக் குறிக்கிறது.
இதற்கு பிறகு, இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறி வந்து கொண்டிருக்கும் போது கடந்து செல்ல வேண்டிய வழியில் நடுவே செங்கடல் குறுக்கிடுகிறது. தேவனாகிய கர்த்தர் தம் தாசனாகிய மோசேயைக் கொண்டு செங்கடலை இரண்டாக பிளந்து "வெட்டாந்தரையை கடப்பது போல, கால் நனையாமல்" சற்றேறக்குறைய இருபது லட்சம் இஸ்ரவேல் மக்களை செங்கடலை கடக்கப் பண்ணினார் (யாத்திராகமம் 14-ஆம் அதிகாரம்). தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு செய்த இந்த காரியத்தின் முக்கிய காரணத்தை, சத்தியத்தை பரிசுத்த வேத வசனத்தில் ஆண்டவர் விளக்குகிறார். அது
(1 கொரிந்தியர் 10:1-2) இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள். எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.
அப்படியே இந்த காரியம் நம் வாழ்வில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக, மீட்பராக, கர்த்தராக, ஒரே உண்மை தெய்வமாக ஏற்றுக் கொண்டு பழைய பாவ, சாப, இருளின், பிசாசின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, ஆத்தும இரட்சிப்பின் ஆரம்ப நிலையை அடைந்த பிறகு நிறைவேற்றப்பட வேண்டிய தேவ நீதியாக "தண்ணீராலும், பரிசுத்த ஆவியினாலும் மறுபடியும் பிறக்ககும் அனுபவமான - தண்ணீராலும், பரிசுத்த ஆவியினாலும் ஞானஸ்நானம்" பெறுவதைக் குறிக்கிறது.
இன்றைக்கு பலரின் ஆவிக்குரிய வாழ்க்கை, உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை இந்த நிலையோடு - அதாவது, இரட்சிக்கப்பட்டு, தண்ணீரால் ஞானஸ்நானம் பெற்று இது தான் கிறிஸ்தவ வாழ்க்கை என்றெண்ணி அத்தோடு நின்று விடுகிறதை காண்கிறோம். இதன் உண்மையான அர்த்தம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு வாக்குப் பண்ணின பரம கானானுக்குள் அதாவது பரலோகத்திற்குள் சென்று சேர பயணத்தை தொடராமல் பாதியிலேயே நின்று போவதாகும். தேவனாகிய கர்த்தர் இந்த நிலையை மாற்றி நம் ஆவிக்குரிய பயணத்தை நாம் தொடர செய்ய வல்லவராயிருக்கிறார். ஆகவே நாம் அவரைப் பற்றிக் கொண்டு தொடர்ந்து முன் செல்வோம்.
அடுத்ததாக, தேவனாகிய கர்த்தராலே இஸ்ரவேல் மக்கள் செங்கடலை கடந்த பின்பு வந்தடைந்த மற்றுமொரு குறிப்பிடத்தக்க, முக்கியமான இடம் "சீனாய் மலை" (யாத்திராகமம் 19, 20). இந்த மலையிலே தான் தேவனாகிய கர்த்தர் தம்முடைய மகிமையை மிகவும் பிரமிக்கத்தக்க, இன்னும் சொல்லப்போனால் இஸ்ரவேல் மக்களால் தாங்கவும் முடியாத அளவுக்கு வெளிப்படுத்தி - இஸ்ரவேல் மக்களுக்கு பத்து கட்டளைகளையும், நியாயப்பிரமாணத்தையும் (1 இராஜாக்கள் 2:4: His Statutes - தேவனுடைய கட்டளைகள், His Commandments - கற்பனைகள், His Judgments - நியாயங்கள், His Testimonies - சாட்சிகள் ) அருளிச் செய்த இடம்.
அப்படியே இந்த நிலையோடு - அதாவது இரட்சிக்கப்பட்டு, ஞானஸ்நானம் பெற்று, அதன் பிறகு அனுதினமும் பரிசுத்த வேதத்தை படிக்க ஆரம்பித்து, ஜெபிக்க ஆரம்பித்து, கர்த்தருடைய சபைக்கும் செல்கிற நிலையோடு நின்று விடுகிறவர்களையும் நாம் நம்மை சுற்றி காண முடிகிறது. இதுவும் ஆவிக்குரிய வாழ்வில் பாதியிலேயே நின்று போவதாகும். இந்த நிலையில் இருந்தாலும் நம் பயணத்தை தொடரவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விரும்புகிறார்.
இப்படியொரு சூழ்நிலையில் தான், இந்த புதிய வருடத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து "சீனாய் மலையிலிருந்து சீயோன் மலைக்கு" நம்மை அழைக்கிறார். இது இன்னும் மேலான உன்னத ஆவிக்குரிய நிலை, பயணம் மற்றும் வாழ்வுமாக இருக்கிறது.
இந்த "சீயோன்" (ZION) என்பது பரிசுத்த வேதத்தில் இஸ்ரவேல் தேசத்தை, அங்கே இருக்கிற எருசலேம் நகரத்தை, எருசலேமிலே இருக்கும் ஒரு மலையை, அந்த மலையில் இருக்கும் தேவனுடைய ஆலயத்தை குறிக்கிறது. மட்டுமல்ல ஆவிக்குரிய பிரகாரமாக கர்த்தருடைய சபையை, கர்த்தருடைய வல்லமையும் வெளியரங்கமாக்கப்பட்ட அவருடைய மகிமையும் வெளிப்படும் ஸ்தலத்தையும், பரலோகத்தையும் குறிக்கிறது. பரிசுத்த வேதத்திலிருந்து இவற்றை விளக்கும் சில வசங்கள்:
(2 சாமுவேல் 5:7) ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.
(சங்கீதம் 2:6) நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.
(சங்கீதம் 9:11) சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்.
(சங்கீதம் 48:12) சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணுங்கள்.
(சங்கீதம் 51:18) சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மைசெய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.
(சங்கீதம் 78:68) யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.
(சங்கீதம் 87:2) கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.
(சங்கீதம் 87:3) தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா.)
(சங்கீதம் 132:13) கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.
(ஏசாயா 18:7) ...சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் ஸ்தலமாகிய சீயோன் மலையில், சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்.
(ஏசாயா 10:12) ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது,...
(ஏசாயா 24:23) அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் நாணமடையும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும்.
(ஏசாயா 59:20) மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
(மீகா 4:2) திரளான ஜாதிகள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
(எபிரெயர் 12:22) நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்,
(வெளிப்படுத்தின விசேஷம் 3:12) ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.
(வெளிப்படுத்தின விசேஷம் 14:1) பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.
அதே சமயம் ஆவிக்குரிய பிரகாரமாக, தேவனிடத்தில் இருக்கிற "திறக்கப்பட்ட வானம் (Open heavens)" என்பதை குறிக்கிறது. இந்த இடத்திற்கு நாம் வந்து தேவனோடு நடக்க, சஞ்சரிக்கவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விரும்புகிறார். (Zion speaks of a place in God where the realm of spirit is open, a place which we are called to walk in.) இந்த சீயோனிலே "வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய பிரசன்னத்தை, மகிமையை" நாம் கண்ணார கண்டு அதை அனுபவித்து அதிலே நாம் நிலைத்திருக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை விரும்பி அழைக்கிறார்.
தேவனாகிய கர்த்தர் வாசம் செய்யும் கூடாரங்களை, ஆலயங்களை குறித்து (மோசே கட்டின ஆசரிப்பு கூடாரம், அரசனாகிய தாவீதின் கூடாரம், அரசனாகிய சாலமோன் கட்டின ஆலயம், புதிய ஏற்பாட்டில் ஏரோது அரசன் கட்டின ஆலயம்) சொல்லப்பட்டிருக்கிறது. இவற்றில் அரசனாகிய தாவீதின் கூடாரம் விஷேசமானது. காரணம், மோசே கட்டின ஆசரிப்பு கூடாரத்தில் இருந்த மூன்று பகுதிகள் (வெளிப்பிரகாரம்-outer court, பரிசுத்த ஸ்தலம்-holy place, மகா பரிசுத்த ஸ்தலம்- holy of holies) போல் இல்லாமல் தாவீதின் கூடாரத்திலே ஒரே ஒரு பகுதி மட்டுமே இருந்தது. இஸ்ரவேல் மக்களின் விடுதலை பயணத்தில் ஆசரிப்புக் கூடாரத்தின் திரைகளுக்கு பின்னால் - மகா பரிசுத்த ஸ்தலத்தில் "மறைவாக வைக்கப்பட்டிருத்த உடன்படிக்கை பெட்டி", இஸ்ரவேலின் அரசனான தாவீதின் நாட்களில் "தாவீதின் கூடாரத்தில்" யாவருடைய கண்கள் காணும்படியாக உடன்படிக்கை பெட்டி "வெளியரங்கமாக" வைக்கப்பட்டது. இந்த கூடாரத்தையே மீண்டும் ஸ்தாபிப்பேன் என்று கர்த்தர் தாமே வாக்கு பண்ணியிருக்கிறார்.
(1 நாளாகமம் 15:1) அவன் தனக்குத் தாவீதின் நகரத்தில் வீடுகளை உண்டாக்கி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான்.
(1 நாளாகமம் 15:3) அப்படியே கர்த்தருடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் ஸ்தலத்திற்கு அதைக் கொண்டுவரும்படி, தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
(1 நாளாகமம் 16:1) அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.
(2 சாமுவேல் 6:17) அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீது போட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் ஸ்தானத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டான்.
(ஆமோஸ் 9:12) அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்.
தேவனாகிய கர்த்தரின் வார்த்தைகளை, பரிசுத்த வேத வசனங்களை பெற்றிருக்கிற நமக்கு "உடன்படிக்கை பெட்டி" நம் இருதயத்தில் இருக்கிறது. நாமே தேவனுடைய பரிசுத்த ஆலயமாயிருக்கிறோம். நமக்குள்ள ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாமே வீற்றிருந்து நம்மை ஆளுகை செய்கிறார்.
(1 கொரிந்தியர் 3:17) ... தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
(ஏசாயா 16:5) கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார்.
எனவே பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து பிரகாசிக்கிற தேவனை, நம் தேவனயிருக்கிறவரை பணிந்து தொழுது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு சீயோனிலே நடந்து, சஞ்சரிக்க ஒவ்வொரு நாளும் தாகத்தோடும், வாஞ்சையோடும் நாம் அவர் பாதம் பற்றிக் கொள்வோம். பரிசுத்த ஆவியானவர் இந்த உன்னத நிலையை இந்த பூமியில் நாம் வாழும் போதே நமக்கு உண்மையாக்கி காட்டுவார். பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து பிரகாசிக்கிற தேவனே தேவன், அவரே என் தேவனாயிருக்கிறார், நம் தேவனாயிருக்கிறார். அவரோடு சஞ்சரிக்க நாமும் சீயோன் மலையை நோக்கி நம் பயணத்தை தொடர்வோம். சீயோன் மலையினிடத்திற்கு சென்று சேர்வோம். அப்பொழுது கீழ்க்கண்ட இந்த பரிசுத்த வேத வசனம் இந்த பூமியிலேயே நம் வாழ்வில் நிறைவேறும், உண்மையாகும். மட்டுமல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையிலும் எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்குப்பண்ணப்பட்ட பரம கானானாம் பரலோகம் சென்று சேர்வோம்.
எபிரெயர் 12: 22-24 நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும்,... வந்து சேர்ந்தீர்கள்.
தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.
Thou art my King, O God. (Ps 44:4)
Pray
இஸ்ரவேலின் சமாதானத்துக்காக, பாதுகாப்பிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்...
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:6-7)
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். (சங்கீதம் 48:2)
...எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். (மத்தேயு 5:35)