IST (GMT+5.5)

    _____________________________________________________________________________________________________________________________________________

    எப்பொழுதும் உம்மோடுSharon Rose Ministries

    புத்தாண்டு  தேவ செய்தி - 2016 (New Year Message - 2016)

    தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்

    _____________________________________________________________________________________________________________________________________________

    நம் கர்த்தரும், உலக இரட்சகரும், மீட்பருமாகிய தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் அன்பின் புத்தாண்டு - 2016 நல் வாழ்த்துக்களை சாரோனின் ரோஜா ஊழியங்களின் சார்பாக அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புதிய வருடத்திலும் ஆரம்பம் முதல் முடிவு வரை நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே கொடுத்திருக்கிற தம் வாக்குத்தத்தத்தின் படி நம்மை எப்பொழுதும் தம் அன்பினால் நிறைத்து தம்மோடிருக்க கிருபை செய்து, நம் வலது கையைப் பிடித்து இந்த வருடம் முழுவதும் தாங்கி நடத்த வேண்டிக் கொள்கிறேன். ஒவ்வொருவரையும் கர்த்தர் தாமே தம் சித்தம் போல் ஆசீர்வதிப்பாராக. தம் பிள்ளைகளாய் எப்பொழும் காத்து தம் இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படுத்துவாராக. தம் ராஜ்யம் கொண்டு சேர்ப்பாராக. ஆமென்.

    கர்த்தர் உங்கள் இருதயங்களைத் தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக. (2 தெசலோனிக்கேயர் 3:5)

    கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே

    இந்த புதிய ஆண்டிற்காக, சாரோனின் ரோஜா ஊழியங்களுக்கு கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தம்:

    ... நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். (சங்கீதம் 73:23)

    Nevertheless I am continually with You; You hold me by my right hand. (Psalms 73:23)

    நாம் தேவனுடைய பல வாக்குத்தத்தங்களை பரிசுத்த வேதத்திலிருந்து  அறிந்திருக்கிறோம். அவற்றில் நாம் காணும் ஒரு காரியம் "நான் உன்னோடு இருக்கிறேன்" என்பதாக தேவனாகிய கர்த்தர் நமக்கு வாக்குப் பண்ணியிருப்பார்  ஆனால், இந்த பரிசுத்த வேத வசனம் ஒரு புதுமையான காரியத்தை நமக்கு சொல்கிறது, அது "நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்" என்று நாம் கர்த்தரிடத்தில் சொல்வது போல உள்ளது என்பதே.

    இந்த பரிசுத்த வேத அதிகாரத்தை  (சங்கீதம் 73) ஆரம்பத்தில் இருந்து நாம் வாசித்துப் பார்த்தால் ஒரு காரியம் அங்கே விளக்கி சொல்லப்பட்டிருக்கிறது.அதன் தொடர்ச்சியாகவே மேற்கண்ட வசனம் உள்ளது. இந்த காரியத்தைக் குறித்து நாமும் பல நேரங்களில் அதிகம் யோசித்திருக்கலாம், அதிகமாய் நமக்குள்ளே கேள்விகள் எழும்பியிருக்கலாம். இது ஏன் இப்படி என்று அறியாதவர்களாக இருந்திருக்கலாம். இன்றைக்கு அதை அறிந்து கொள்ள கர்த்தர் நமக்கு கிருபை செய்வாராக.

    அந்த ஒரு காரியம் என்னவென்றால்:

    தேவனாகிய கர்த்தருக்கு பயப்படாமல் துன்மார்க்கமாய் வாழுகிற மக்களின் செழிப்பு  - அதாவது எல்லா இன்பங்களையும் பெற்று, எல்லா வசதிகளையும் கொண்டு, தாங்கள் விரும்பியபடி வாழுகிற அவர்கள் வாழ்க்கையே (சங்கீதம் 73:3-12).

    அதே நேரம், சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தருக்கு பயந்து, அவருக்கு கீழ்படிந்து அவருடைய பரிசுத்த வேதத்தின்படி வாழ்க்கையை வாழுகிற, மேற்சொன்ன பல வசதிகளை, இன்பங்களை அனுபவிக்காமல் கர்த்தரால் அவ்வப்பொழுது சிட்சிக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டு தம் பிள்ளைகளாய் அவர் காத்து நடத்தி செல்லும் கர்த்தருடைய பிள்ளைகளின் வாழ்க்கை.

    இந்த இரு வித மக்களின் வாழ்க்கை வித்தியாசத்தை, முடிவை, வாழ்ந்த வாழ்க்கையின் பலனை பரிசுத்த வேத சத்தியமாய்  அறிந்து கொள்ளாத போது, கர்த்தருடைய பிள்ளைகளுக்கு துன்மார்க்கமாய் வாழுகிற மக்களை குறித்து, அவர்கள் வாழ்க்கையைக் குறித்து பொறாமை  உண்டாவதாக பரிசுத்த வேதம் உண்மையை கண்டறிந்து நமக்கு போதிக்கிறது.

    துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன். (சங்கீதம் 73:3)

    இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது. (சங்கீதம் 73:16-17)

    துன்மார்க்கமாய் வாழுகிற மக்களும், மனந்திரும்பி தேவனாகிய கர்த்தருக்கு தங்களை ஒப்புக்கொடுத்து அவருடைய பிள்ளைகளாய் வாழவே தேவன் விரும்புகிறார்.

    துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை. அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான். துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். (எசேக்கியல் 18:21-23)

    கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; ...(எசேக்கியல் 33:11)

    துன்மார்க்கன் தன் அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான். (எசேக்கியல் 33:19)

    ஆனாலும், இந்த தேவ அன்பை,  தேவ கிருபையை, தேவனுடைய மனதுருக்கத்தை, தேவ இரக்கத்தை  நிராகரித்து தொடர்ந்து துன்மார்க்கமான, பொல்லாத வழியிலேயே வாழ விரும்பி ஓடுகிறவர்களின், துன்மார்க்கமாய் வாழுகிற மக்களின், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் முடிவு மற்றும் பலன்களை பரிசுத்த வேதம் நமக்கு உறுதியாக விளக்கி சொல்கிறது. அவைகளில் சிலவற்றை இங்கே காண்போம்:

    துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான். (ஏசாயா 26:10)

    நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர். அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள். நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர். (சங்கீதம் 73:18-20)

    துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும். (ஏசாயா 3:11)

    அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். (சங்கீதம் 90:5)

    அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருப்பதாக; கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக. (சங்கீதம் 35:6)

    கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை. அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு. (சங்கீதம் 37:35-36,38)

    துன்மார்க்க வாழ்க்கையின் முடிவையும், பலன்களையும் மேற்கண்ட பரிசுத்த வேதத்தின்  வசனங்கள் மூலமாக  அறிந்து கொண்டோம். எனவே துன்மார்க்க வாழ்க்கையை குறித்து, அப்படி வாழுகிற மக்களைக் குறித்து கர்த்தருடைய பிள்ளைகளுக்கு பொறாமை தேவையில்லை. மட்டுமல்ல, துன்மார்க்கருடைய  முடிவைப் போன்ற முடிவும்  கர்த்தருடைய பிள்ளைகளுக்கு இல்லை.  மாறாக, கர்த்தருடைய பிள்ளைகளாய், பரிசுத்தமாய் வாழும் போது எப்பொழுதும் தேவனாகிய கர்த்தரோடு அவர்கள்  இருக்கிறார்கள் என்றும் தேவனே நம் வலது கரத்தைப் பிடித்து நம்மைத் தாங்குகிறார் என்றும் தேவனாகிய கர்த்தர் நமக்கு வாக்குத்தத்தம்  பண்ணுகிறார்.

    அப்படியானால், தம் பிள்ளைகளுக்கு தேவனாகிய கர்த்தர் அருளிச் செய்யும் பலன்களையும்,  நித்திய ஜீவனையும் - அதாவது பரலோகத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு என்றென்றும் வாழுகிற வாழ்க்கையையும் பற்றி அறிந்திருக்கிற நாம் தேவ கிருபையினாலே, விசுவாசத்தோடு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்தி அறிக்கை செய்வோம் :

    ... நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். (சங்கீதம் 73:23)

    எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்;.... (சங்கீதம் 73:28)

    அப்படியானால், நாம் இந்த உலக வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே எப்பொழுதும் தேவனோடு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இருப்பது எப்படி?

    முதலாவதாக, தேவனுடைய வார்த்தையாகிய பரிசுத்த வேதம் போதிக்கிறபடி, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கேட்டு, விசுவாசித்து, கைக்கொண்டு, அதற்கு கீழ்படிந்து வாழ்நாள் முழுவதும் வாழுவதன் மூலமாகவும், இரண்டாவதாக தேவனுடைய பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தினால் நிறைந்து தேவனோடு இணைந்திருப்பதன் மூலமாகவும் எப்பொழுதும் தேவனோடு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இருக்க முடியும். இந்த இரண்டு காரியங்களையும் சுருக்கமாக ஒரே வரியில் சொல்வதானால், "தேவ அன்பிலே நடக்க வேண்டும்".  இவற்றை விளக்கும் பரிசுத்த வேத வசனங்கள் சிலவற்றை கீழே காண்போம்:

    நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல. (1 யோவான் 5:3)

    கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; (பிலிப்பியர் 2:5)

    கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். (எபேசியர் 5:2)

    இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். (1 யோவான் 4:15)

    தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம். (1 யோவான் 4:12-13)

    தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? (1 யோவான் 4:20)

    தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். (1 யோவான் 4:16)

    அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான். (1 கொரிந்தியர் 6:17)

    காரணம், அன்பில்லாமல் தேவனை அறிந்து கொள்ளவே முடியாது. எனவே தேவ அன்பினால்  நாம் நிரப்பப்பட, தேவ அன்பிலே நடக்க நாமும்  தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்.

    ... தேவன் அன்பாகவே இருக்கிறார். (1 யோவான் 4:8)

    அன்பு ஒருக்காலும் ஒழியாது. ... (1 கொரிந்தியர் 13:8)

    இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. (1 கொரிந்தியர் 13:13)

    பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். (1 யோவான் 4:7)

    மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், ..... (ரோமர் 5:5)

    எனவே, நாமும் சந்தோஷமாய் விசுவாசத்தோடு, நன்றியோடு அறிக்கை செய்வோம். அப்பொழுது கர்த்தர் தாம் வாக்குரைத்தபடியே நமக்கு செய்வார்.

    ... நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். (சங்கீதம் 73:23)

    ஏனெனில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாமே நமக்காக பிதாவாகிய தேவனிடத்தில் வேண்டுதல் செய்திருக்கிறார்.

    அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். (யோவான் 17:21)

     

     

    Print Email