IST (GMT+5.5)

இந்த வார தியானம்Sharon Rose Ministries

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


பலி


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

சர்வாங்க தகனபலிக்கும் போஜனபலிக்கும் பாவநிவாரண பலிக்கும் குற்றநிவாரண பலிக்கும் பிரதிஷ்டை பலிகளுக்கும் சமாதான பலிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. கர்த்தருக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் புத்திரருக்குச் சீனாய் வனாந்தரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய் மலையில் கட்டளையிட்டார். (லேவியராகமம் 7:37,38)

பரிசுத்த வேதத்திலே, பழைய ஏற்பாட்டின்படி பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு சூழ்நிலைகளில் செலுத்தப்படும் பலிகளைக் குறித்து இந்த பகுதிகளில் - லேவியராகமம் 1, 2, 3, 4, 5 - காணலாம்.  அவைகளில்  சிலவற்றை கீழே காணலாம்.

  • ...இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி. (லேவியராகமம் 1:17) (Burnt Sacrifice)
  • ...போஜனபலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டுமானால்...., (லேவியராகமம் 2:1) (Meat Offering)
  • ... சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று.... (லேவியராகமம் 3:1) (Peace Offering)
  • ...பாவநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன். (லேவியராகமம் 4:3) (Sin Offering)
  • ....குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்....(லேவியராகமம் 5:6) (Trespass Offering)

போஜன பலியை தவிர, இந்த பலிகளெல்லாம் பல்வேறு மிருக ஜீவன்களால் செலுத்தப்பட்டது. காரணம்,

மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. (லேவியராகமம் 17:11)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தம் ஒட்டு மொத்த மனுக்குலத்தின் பாவ நிவாரணத்திற்காக, மீட்புக்காக கல்வாரி சிலுவையில் சிந்தப்பட்ட பின்பு, மேற்கண்ட பலிகளை நாம் செலுத்த வேண்டியதில்லை. ஏனென்றால்:

... யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. (யோவான் 1:29)

இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. (மத்தேயு 26:28)

... இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)

அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார். (எபிரெயர் 7:27)

வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (எபிரெயர் 9:12)

கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். (எபிரெயர் 9:28)

எந்த மிருக ஜீவனையும் கொல்லாமல் செலுத்தும் ஒரு விசேஷித்த பலி ஒன்றைக் குறித்தும் பரிசுத்த வேதம் நமக்கு விளக்கிச் சொல்கிறது. அது:

ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். (எபிரெயர் 13:15)

கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும். (சங்கீதம் 119:108)

...அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம். (ஒசியா 14:2)

தேவனாகிய கர்த்தரின் மகிமையை, அவருடைய மகத்துவத்தை, வல்லமையை, அன்பை, இரக்கத்தை, தயவை, மனதுருக்கத்தை, பராக்கிரமத்தை, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவர் அருளிய கிருபையை, பாவ மன்னிப்பை, இரட்சிப்பை, நித்திய ஜீவனை  போற்றி, பாடி, துதித்து, அறிக்கை செய்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக பிதாவாகிய தேவனையே உயர்த்தி அவருக்கே துதி கனம் மகிமை யாவும் செலுத்தும் ஸ்தோத்திர பலி. இந்த விசேஷித்த பலியைக் குறித்து பழைய மற்றும் புதிய ஏற்பாடு என இரண்டிலும் காணலாம்.

ஆனால், பரிசுத்த வேதத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நேரடியாக அங்கிகரித்து சொல்லிய மிக முக்கியமான  பலியைக் குறித்து நாம் காணலாம். மேற்கண்ட எல்லாவற்றிலும் இதுவே  மிக முக்கியமானது ஆகும். இந்த பலியை நாம் செலுத்தினால்,  தம் ராஜ்யத்தை இந்த பூமியில் ஏற்படுத்தவும், தம் பிள்ளைகளை தம் ராஜ்யத்தில் தம்மோடு சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு பலனளித்து தம்மோடு ஆளுகை செய்யும்படியாக அவர்களை ஏற்படுத்தவும்  அதி சீக்கிரமாக இந்த உலகத்திற்கு இரண்டாம் முறையாக திரும்பி வரப் போகும் நம் கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு நாம் ஏற்றவர்களாயிருப்போம். அவரே இதை சொல்லிருக்கிறார். அந்த பலி:

முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் (தேவனிடத்தில்) அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப்பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்.

அவன் விவேகமாய் உத்தரவுசொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார். (மாற்கு 12:33,34)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email