IST (GMT+5.5)

இந்த வார தியானம்Sharon Rose Ministries

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


பரிசுத்த வேத எழுத்துக்கள்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். (2 தீமோத்தேயு 3:15)

மேற்கண்ட வசனத்தில் நாம் காணும் ஒரு விசேஷம் "பரிசுத்த வேத எழுத்துக்கள்" என்று தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் இந்த பரிசுத்த வேதத்தை அழைக்கிறதை நாம் காணலாம்.

ஏன் இது பரிசுத்த வேத எழுத்துக்கள் என்றழைக்கப்படுகிறது? ஏனென்றால் இது நேரடியாக தேவனாகிய கர்த்தரால், அவருடைய கரத்தால் எழுதி கொடுக்கப்பட்டது.

சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார். (யாத்திராகமம் 31:18)

என்ன எழுதி கொடுத்தார்?  பத்து கட்டளைகள்.

அந்த பத்து கட்டளைகள்:

  1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். (யாத்திராகமம் 20:3)
  2. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; (யாத்திராகமம் 20:4,5)
  3. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். (யாத்திராகமம் 20:7)
  4. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; (யாத்திராகமம் 20:8)
  5. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. (யாத்திராகமம் 20:12)
  6. கொலை செய்யாதிருப்பாயாக. (யாத்திராகமம் 20:13)
  7. விபசாரம் செய்யாதிருப்பாயாக. (யாத்திராகமம் 20:14)
  8. களவு செய்யாதிருப்பாயாக. (யாத்திராகமம் 20:15)
  9. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. (யாத்திராகமம் 20:16)
  10. பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். (யாத்திராகமம் 20:17)

காணக்கூடாத, மகா பரிசுத்தமுள்ள தேவன், காணக்கூடியவராக, மனிதனாக இயேசு கிறிஸ்து என்ற பெயரில் இந்த பூமிக்கு வந்த போது  மேற்கண்ட பத்து கட்டளைகளையும் இரண்டே பிரமாணங்களாக அவர் தாமே தம் வாயினால் உரைத்த பரிசுத்த வசனங்கள் தாம் இவை :

இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். (மத்தேயு 22:35-40)

இந்த பரிசுத்த வேத எழுத்துக்களை தேவனுடைய பரிசுத்த ஆவியானவரும் நமக்கு அருளியிருக்கிறார் என்பதை குறித்து பரிசுத்த வேதத்தில் நமக்கு விளக்கப்பட்டிருக்கிறது.

வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; ...(2 தீமோத்தேயு 3:16)

மனுக்குலம் முழுவதிற்கும், இந்த பூமியில் நாம் வாழும் வாழ்க்கைக்கு  தேவையான  தேவனாகிய கர்த்தரின் எல்லா ஆலோசனைகளையும், கட்டளைகளையும், பிரமாணங்களையும், கற்பனைகளையும் மற்றும் அளவற்ற, எல்லையில்லாத ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும், நமக்கான பாதுகாப்பையும்   உள்ளடக்கியதே இந்த பரிசுத்த வேத எழுத்துக்களாலாகிய பரிசுத்த வேதம். இதை விளக்கும் சில வேத வசனங்கள்:

அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. (2 தீமோத்தேயு 3:17)

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. (சங்கீதம் 119:105)

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. (எபிரெயர் 4:12)

இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். (எபேசியர் 6:17)

அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். (மத்தேயு 4:4)


இந்த பரிசுத்த வேத எழுத்துக்களின் மகிமையைக் குறித்து பரிசுத்த வேதத்திலிருந்து ஒரு வசனம்:

வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும். (லூக்கா 16:17)

இந்த மகிமைக்கு காரணம் என்ன தெரியுமா?

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. (யோவான் 1:1)

இதை ஒரு வரியில் விளக்கிச் சொல்வதானால், எழுதப்பட்ட இயேசு கிறிஸ்துவே பரிசுத்த வேத எழுத்துக்கள்.

தேவனாகிய கர்த்தர், ஆண்டவர் இயேசு கிறிஸ்து மற்றும் தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் என திரித்துவ தேவன் நமக்கு அருளியிருக்கிற இந்த பரிசுத்த வேத எழுத்துக்களை, பரிசுத்த வேதத்தை நிராகரித்து, ஏற்றுக் கொள்ள மறுக்கும்போது என்ன நடக்கும்?

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். (யோவான் 12:48)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email