IST (GMT+5.5)

இந்த வார தியானம்Sharon Rose Ministries

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


காணிக்கை


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார். (லூக்கா 21:4)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே தேவாலயத்தில் வந்திருந்து, அங்கே காணிக்கை செலுத்துமிடத்தில் நின்று கவனித்த போது, அங்கே காணிக்கை செலுத்தின ஒரு ஏழை விதவைப் பெண்ணை, அந்த பெண் செலுத்தின காணிக்கையை குறித்து சொன்ன வார்த்தைகளே மேற்கண்ட பரிசுத்த வேத வசனம். இதை பரிசுத்த வேதத்தின் இந்த பகுதிகளில் வாசிக்கலாம்: லூக்கா 21:1-4, மாற்கு 12:41-44.

அங்கே அநேக ஐசுவரியவான்கள் - பணக்காரர்களும் ஏராளமாய் காணிக்கை செலுத்தினார்கள். ஆனால், இந்த ஏழைப் பெண்ணோ தன்னிடம் இருந்த இரண்டே காசையும் - தன் ஜீவனத்திற்காக வைத்திருந்த இரண்டே இரண்டு காசு முழுவதையும் தேவனுக்கு காணிக்கையாக செலுத்தி விட்டாள். அதாவது, இந்த காணிக்கையை செலுத்தின பின்பு அப்பெண்ணின் கையில் தன் ஜீவனத்திற்கென ஒரு வழியும் இல்லை.  எனவே தான், இவை அனைத்தையும் அறிந்திருந்த நம் அருமை இரட்சகர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, ஏராளமாய் செலுத்தின ஐசுவரியவான்களை விட இப்பெண்ணே அதிகமாய் தேவனுக்கு காணிக்கை செலுத்தினாள் என்று உரைத்தார்.

இச்சம்பவத்திலிருந்து ஒரு காரியத்தை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. அது, காணிக்கை தொகையை அல்ல காணிக்கை செலுத்தும் நம் இருதயத்தை, இருதயத்தின் நோக்கத்தை, இப்பெண்ணைப் போல மிகுந்த தியாகத்தோடு செலுத்தும்போது அந்த தியாகத்தையே தேவனாகிய கர்த்தர் அங்கீகரிக்கிறார். பரிசுத்த வேதம் இதை இப்படியாக விளக்குகிறது:

அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். (2 கொரிந்தியர் 9:7)

பூமியிலிருந்து மனிதனால் செலுத்தப்பட்ட முதல் காணிக்கையை குறித்து பரிசுத்த வேதத்தில் இப்படியாக விவரிக்கப்படுகிறது:

சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.
ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். (ஆதியாகமம் 4:3-4)

அதாவது, நமக்குள்ளவற்றில் முதன்மையானதும், சிறந்ததுமானதையே கர்த்தருக்கு காணிக்கையாக செலுத்த வேண்டும். அதை இன்னும் சிறப்பாக்க உற்சாகத்தோடும், தியாகத்தோடும்,  மனிதனுக்கல்ல தேவனாகிய கர்த்தருக்கே காணிக்கை செலுத்துகிறோம் என்ற சரியான இருதய நோக்கத்தோடும் செலுத்தும் போது கர்த்தர் அதை அங்கீகரிக்கிறார்.

பரிசுத்த வேதத்தில், இப்படியாக, இஸ்ரவேல் மக்கள் உற்சாகமாய், முதன்மையானதும் சிறந்ததுமானதை மகிழ்ச்சியோடு காணிக்கையாக தேவனாகிய கர்த்தருக்கு செலுத்தினதை இந்த வசனங்கள் விவரிக்கிறது :

பின்னும் மோசே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி: உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டு மயிரும், சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும், விளக்குக்கு எண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும், ஆசாரியருடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கத்தக்க கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே. (யாத்திராகமம் 35:4-9)

தேவ தாசனாகிய மோசே, இப்படி அறிவித்த பின்பு இஸ்ரவேல் ஜனங்கள் எப்படி கொடுத்தார்கள் என்பதையும்,  இனி காணிக்கைகளை கொண்டு வர வேண்டாம் என்று அறிவிக்குமளவுக்கு கொடுத்தார்கள் என்பதையும் பரிசுத்த வேதத்தின் இந்த வசனங்கள் விளக்குகிறது:

பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். (யாத்திராகமம் 35:21)

செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள். (யாத்திராகமம் 35:29)

அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்து வேலைகளைச் செய்கிற விவேகிகள் யாவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாய் வந்து, மோசேயை நோக்கி: கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள். அப்பொழுது மோசே இனி புருஷர்களாவது ஸ்திரீகளாவது பரிசுத்த ஸ்தலத்துக்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று பாளயம் எங்கும் கூறும்படி கட்டளையிட்டான்; இவ்விதமாய் ஜனங்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது. செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாயும் இருந்தது. (யாத்திராகமம் 36:4-7)

பரிசுத்த வேதம், எல்லாவற்றிற்கும் மேலான, மனுக்குலம் முழுவதற்குமாய் செலுத்தப்பட்ட, நாம் எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாத, இணையில்லாத ஒரு காணிக்கையை குறித்து நமக்கு விளக்கி சொல்கிறது : அந்த காணிக்கை உலக இரட்சகரும் (யோவான் 4:42, 1 யோவான் 4:14) நம் கர்த்தரும் மீட்பருமாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே.

கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். (எபேசியர் 5:2)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email